இங்கிதம் கிலோ என்ன விலை ? – 5
‘குடும்பம் என்னும் அமைப்பு முழுவதுமான வரம்- அதில் குறை எதுவும் இல்லை ‘ என்னும் கருத்தை வலியுறுத்தி திரைப்படங்கள் , புதினங்கள், தினசரி பதிவுகள் எண்ணில் அடங்கா. மிகைப்படுத்தப்பட்டவை அனைத்தும்.
குழந்தைப்பருவத்தில் குடும்பம் அருமையான வெளி. ஒரு செடி துளிர் விடும் வரை, மேலும் வேர் பிடித்து நல்ல உயரம் வரும் வரை அந்த வேலி தான் செடிக்கு எல்லாமே. அந்த வேலி அந்த செடியை ஒட்டி ஒரு மரமாக திடீரென மாறி பெரிய நிழல் தந்து அதன் மீது வெய்யில் படாமல் செய்து விட்டால் ? அதுவே இன்று நம் குடும்பம் என்னும் அமைப்பில் எதிர் கொள்ளும் பெரிய பிரச்சனை.
கண்டிப்பு , விமர்சனம் , எதிர்மறையான கவலை மிகுந்த அச்சுறுத்தல் இவைகளே பதின்களில் ஒரு சிறுவன் அல்லது சிறுமி எதிர் கொள்வது. தலைமைக்கு குணமும், புதியன முயற்சிக்கும் ஊக்கமும் மழுங்கடிக்கப் படுவதே இன்று குடும்பங்களின் உள்ளே நடக்கும் விபரீதம்.
கணவன் மனைவி உறவு ஒருவரை ஒருவர் வழிமறித்து தண்டவாளம் போல் சென்ற தலைமுறை காட்டிய ‘உணவு, உறவு, சுதந்திரச் சிந்தனையின்மை’ என்னும் தடத்தில் செல்வதும் , விவாகரத்து என்பது பெரிய விபரீதம் என்னும் பிரமையில் ஒருவரை ஒருவர் வாழ்நாள் எல்லாம் பிடித்துக் கொண்டிருப்பதும் எதிர்மறையான எண்ணங்களுடன் வாழ்ந்து முடிக்க வைக்கிறது.
குடும்பமோ சமூகமோ ஒருவன் அல்லது ஒருத்தி தான் நம்புகிற வழிக்குத் தானே முன்னுதாரணமாய் இருப்பதே ஒரே வழி. பிறரின் தனித்தன்மை மற்றும் சுதந்திர சிந்தனையை மதிப்பதே இங்கிதம்- பண்பாடு – மனிதநேயம். குடும்பம் ஒருவரை ஒருவர் தடுத்து ஒரு பதுங்கு குழிக்குள் அடைத்துக் கொள்வதான சிறை ஆகவே இருக்கிறது. இதில் கொண்டாடிக்கொள்ள எதுவுமில்லை.
சில கேள்விகளுடன் நான் இந்தப் பகுதியை முடித்து அடுத்த பகுதியில் இணைய இங்கிதம் பற்றிப் பகிர எண்ணுகிறேன் :
வாழ்க்கை வாழவா ? பிறருக்காகக் காலமெல்லாம் ஆடவா?
தனது லட்சியம் என ஒருவர் தான் பாதையில் செல்ல இந்தக் குடும்பத்தில் வழி இருக்கிறது?
ஒரு பெண் திருமணம் வேண்டாம் என முடிவு செய்யும் உரிமையை நாம் வழங்கி இருக்கிறோமா?
கை கட்டி வேலை பார்க்காமல் ஒரு தொழில் அல்லது வணிகம் செய்ய எத்தனை பெற்றோர் ஒப்புவர் ?
ஆணைச் சாராது நிமிர்ந்து நிற்கும் எத்தனை பெண்களை நாம் உருவாக்கினோம் ?
தனது சாதனைப் பருவத்தில் ஒரு இளைஞன் பெற்றோர் பேணுதல் என்னும் அல்ப விஷயத்தில் கவனம் சிதறுவது அவனுக்கு பெரிய பின்னடைவில்லையா ?
என்னைப் பிற்காலத்தில் பேணவே உன்னைப் பெற்று வளர்த்தேன் என்பது அன்பா? தன்னலமான வணிக ஏற்பாடா?
முதுமையில் யாரையும் அண்டாது ஒரு இல்லத்தில் இருப்பதில் அப்படி என்ன சோகம் ?
அவரவர் வாழ்க்கை உண்மையா ? எல்லோரும் ஒரே கப்பலில் மூழ்குவோம் என்னும் எதிர்மறை சிந்தனை உண்மையா ?
தண்டவாள சிந்தனை மிகுந்த உறவு சுற்றம் குழந்தைகளை முடப்படுத்தும் பேச்சுப் பேச குடும்பம் ஒரு வசதியான சித்திரவதைக் கூடமாயிருப்பது உண்மையா இல்லையா?
தேங்கிய நாம் முன்னேற இதுவரை நம்பிய எல்லாவற்றையுமே மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா?
தொடருவோம்..
(image courtesy:123rf.com)