இங்கிதம் கிலோ என்ன விலை ? -6
முதலில் நாம் தொலைபேசி இங்கிதம் பற்றி பகிர்வோம். பிறகு இணையம் பற்றி. ௨௦௦௦களுக்குப் பின் நிகழ்ந்த தொலைத்தொடர்புப் புரட்சி இன்று யார் கையிலும் கைப்பேசியைக் கொடுத்து விட்டது. படிப்பு, பின்னணி, வயது அல்லது அந்தஸ்து பேதமில்லாமல் சில இங்கிதக் குறைவுகள் உண்டு . அவை கீழே :
பேசத் தொடங்கும் முன் அழைத்தவர் அழைக்கப் பட்டவர் பேசும் சூழலில் இருக்கிறாரா என்று கேட்பதே இல்லை.
ஒருவர் அழைத்தால் அழைக்கப்பட்டவர் பல காரணங்களால் அழைப்பை ஏற்காமலிருக்கலாம். கண்டிப்பாக அந்த உரிமை அவருக்கு உண்டு. ஆனால் ஒரு குறுஞ்செய்தியில் தமது இயலாமையைக் குறிப்பிட்டு என்ன விஷயம் என்று கேட்டு, தன்னை மெனக்கெட்டு அழைத்தவரை விசாரிக்கலாம். யாரும் செய்வதில்லை.
தவற விட்ட அழைப்புக்களில் எண் தெரிய விட்டாலும் தயவு செய்து தங்கள் அறிமுகம் தேவை என்று பதில் தரும் பழக்கம் யாரிடமும் இல்லை.
ஒரே பெயர் உள்ளவர் பலருண்டு. சீனிவாசன் , ஆறுமுகம், லட்சுமி என அடுக்கிக் கொண்டே போகலாம் அவரது உறவு முறை அல்லது பணியிடம் சேர்த்து நினைவில் வைத்தால் அனாவசிய அழைப்புக்கள் குறையும். அநேகர் இதை அவசியம் என நினைப்பதில்லை.
வேலை ஆக வேண்டுமென்றால் ஒரு தொனி, உதவி கேட்டு அழைப்பவருக்கு வேறு ஒரு தொனி என வேதங்கள் மாறும் இங்கிதமின்மை எல்லோரிடமும் உண்டு.
அலைபேசியின் மணி ஒலி அதிக சத்தமான நாராசமான சினிமாப் பாடல் அல்லது பக்திப் பாடல் ஆக இருப்பது சர்வ சகஜம்.
முக்கிய அலுவலகக் கூட்டங்களில் உயர் அதிகாரி பல முறை எச்சரித்து மௌன இயங்குதலில் அலைபேசியை வைக்கச் சொல்வது மிக சகஜம் .
ஒருவரது கைபேசியை எதுத்துப் பரிசோதிப்பது அவர் அதை மற்றும் பொது அறையில் நுழைவது போல. யாரும் இதைப் புரிந்து நடப்பதில்லை.
நமது உதவியாளர் அல்லது சக ஊழியர் பெண் என்றால் அவர் குடும்ப
வேலைகளில் மிகவும் அழுத்தத்தில் இருக்கும் காலை எட்டு மணி அல்லது மாலை போன்ற வேளைகளில் அவர்களை தலை போகும் வேலை தவிர அழைக்கக் கூடாது. இரவு வெகு நேரம் கழித்துப் பேசுவதும் அவ்வாறானதே. பலர் இதை மனதில் கொள்வதில்லை.
உரையாடுபவருக்குத் தெரியாமல் ‘ஸ்பீக்கர்’ ல் போட்டுப் பிறரைக் கேட்க வைப்பது இங்கிதக்குறைவு. அருகில் ஒருவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைக் கட்டாயம் தெரிய படுத்த வேண்டும்.
ஒருவர் நம் அழைப்பை ஏற்கவில்லை என்றால் அவகாசம் தரத்தான் வேண்டும். தரைவழி தொலைபேசி அல்லது அவரது மாற்று எண் வழி முயன்று அழுத்தம் தருவது இங்கிதமே அல்ல.
இணைப்பு மிகவும் பலவீனமாய் இருக்கிறது என்றால் தள்ளிப் போய் யாருக்கும் தொல்லை இல்லாமல் பேச வேண்டும். கட்டிடமே அதிர பேசுவது சர்வ சகஜம்.
அடுக்கிக் கொண்டே போகலாம். அலைபேசி என்பது தொல்லை என்னும் அளவு அழைப்பு முறைகள் மட்டமாகபப் பயன்படுத்தப் படும் காலம் இது.
அடுத்த பகுதியில் இணைய தளம் மற்றும் சமூக வலைத்தளம் பற்றி பார்ப்போம்.
(image courtesy:http://www.ablogforbetterbusiness.com/mobile-phone-etiquette/)