இங்கிதம் கிலோ என்ன விலை ? – 9
தனி மனிதன் ஒருவருக்கு இங்கிதக் குறைவால் ஏற்படும் இழப்புக்கள் தாற்காலிகமானதும் – நீண்டநாள் அடிப்படையிலானதும் இரண்டுமே.
ஒரு நல்ல உபயோகிப்பாளரை இழக்கும் வியாபாரிக்கோ அல்லது ஊர் சுற்றிய நண்பனை இழந்த இளைஞனுக்கோ அது தற்காலிகமாய் முடிந்து வேறு ஓன்று அமைய அது தீர்ந்து விடலாம். அதாவது அந்த இழப்பு சரி செய்யப் படலாம்.
ஆனால் ரூபாய் மதிப்பில் அளவிட முடியாத மனித உறவுகள் குறித்து யாரும் கவலைப் படுவதே இல்லை.
உண்மையான அக்கறையும் மதிப்புமுள்ள பல நண்பர்களை ஒரு தனிமனிதன் இழக்கிறான். மனம் விட்டுப் பேச முன்வந்தோர் மற்றும் தனது அறிவு அனுபத்தைப் பகிர விரும்பியோர் பலரும் மௌனமானது ஒருவனுக்கு இழப்பே. சற்றே கவனமும் மரியாதையுமான அணுகுமுறையில் இங்கிதமான பழகுதலில் பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். பலரையும் – மதிப்பு மிக்க நல்ல உறவான பலரையும் ஒருவன் இழப்பது ரூபாயில் மதிப்பிட முடியாததே.
கண்ணியமும் மரியாதையும் பார்க்கும் பலரும் ஒரு சிறு இங்கிதக் குறைவான நடவடிக்கையையும் பொறுக்காமல் விலகுவோரே. வாய்ப்புகள் பற்றி நாம் கவனமாயிருப்போம் . வாய்ப்புக்களை நழுவ விடவே மாட்டோம் . ஆனால் நல்ல மனித உறவுகள் கை நழுவிப்போகும் போது அது பற்றி நாம் வருத்தப் படுவதே இல்லை.
சொரணையும் தன்மானமுமுள்ள பல நல்ல உறவுகளை நாம் இழந்த பின் எஞ்சுவது தற்காலிக நன்மைக்காகக் கூட்டணி சேருவோரே.
ஒருவர் தம் வாழ்நாளெல்லாம் போற்றிப் பேண, பெருமைப்பட ஒன்றே ஒன்று உண்டென்றால் அது தரமான நம்பிக்கைக்குரிய பாசாங்கில்லாத மனிதரின் நட்பே. மனிதர்களை மட்டுமே நம் சொத்தாக நினைக்க முடியும் . நாம் கூடி வாழவே பிறந்தோம்.
இங்கிதக் குறைவான நடவடிக்கைகள் நம்மைத் தரமான, மரியாதைக்குரிய, பாசாங்கில்லாத உயர் மக்களிடமிருந்து பிரித்து விடுகிறது.
ஜாதி, படிப்பு, அந்தஸ்து மற்றும் உறவுமுறை சம்பந்தப்பட்டதே அல்ல தரமான மனிதனாக உயர்வது.
வெகு காலம் பிடிக்கும் தரமான மனிதனை நாம் கண்டறிய. அதுவரை நமது இங்கிதமே அவர் நம்மை அணுகி நம் மீது நம்பிக்கை வைத்து நம்முடன் இணைய வழி வகுக்கும்.
இங்கிதம் உள்ளாரோ அற்றோரோ நாம் எப்போதும் நம் இங்கிதத்துக்கும் தராதரத்துக்கும் என அறியவும் மதிக்கப்படவும் வேண்டும்.
இங்கிதக்குறைவால் சமூகம் இழந்ததை அடுத்த பகுதியில் காண்போம்.
(image courtesy: pinterest.com)