எதற்காகப் புத்தக வாசிப்பு? -1
புத்தகங்கள் நம் வாழ்க்கையின் பெரிய சொத்தாகவும் வாசிப்பு நம் முக்கியமான ஒரு அன்றாட செயற்பாடாகவும் இருப்பதில்லை. நமக்கு வாசிக்காமலிருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. நமது பணி, குடும்பம், பொழுது போக்குவதற்கான நேரம் இப்படிப் பல.
வாசித்து அதை நாலு பேருக்கு எடுத்துச் சொல்லும் பட்டிமன்றத்துப் பேராசிரியர் போல கைத்தட்டல் வாங்க வாசிப்பு உதவுமா?
அன்றாட பிரச்சனைகளை சமாளிக்க வாசிப்பு உதவி, ஒரு சுய முன்னேற்ற உபகரணம் ஆகுமா ?
வாசித்து வாசித்து ஒரு எழுத்தாளர் ஆகி விட முடியுமா ?
என்ன பலன் கிடைக்கும் ? பலனில்லாத அதாவது பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத ஒரு வேலை வாசிப்பு என்றால் அதை எதற்காகத்தான் நாம் செய்ய வேண்டும்?
ஒரு திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், இணையம் முழுதும் உள்ள காணொளி, வம்புகள் இவை போதாதா ?
சாதாரணமாக மனதில் எழும் கேள்விகள் நிறையவே உள்ளன. இந்தக் கேள்விகள் ஒரு சராசரி வாழ்க்கையின் வெளிப்பாடுகளே.
இந்தக் கேள்விகளுள் ஒரு கேள்விக்கான விடையிலிருந்து நாம் வாசிப்பு பற்றி மேற் செல்ல வேண்டும்.
பைசாவுக்குப் பிரயோஜனமில்லாததா? ஆமாம். பாடத் திட்டம் என கல்லூரி காட்டும் புத்தகம் தவிர வேறு வாசிப்பு பைசாவுக்குப் பிரயோஜனமில்லாததே.
இப்படி நிஜ வாழ்க்கையில் ஒரு கணிசமான பலனைத் தராத வாசிப்பு எதற்காக ?
தீவிர வாசகரும் எழுத்தாளரும் ஏன் புத்தகங்களைக் கொண்டாடுகிறார்கள் ?
இந்த இடத்தில் பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேறு ஒன்றை நாம் ஒரு உதாரணமாகப் பார்ப்போம்.
குழந்தைகள் விளையாடுவதை எடுத்துக் கொள்வோம். அதனால் உடனடி பிரயோஜனம் எதுவும் உண்டா?
நீண்ட காலப் பயன் கூட உறுதியானதாக எதுவும் கிடையாது. பொருளாதார ரீதியாக வெற்றியோ – அல்லது பல நிபுணப் பணிகளில் வெற்றியோ – விளையாடாத , படிப்பாளிகள் அதாவது நல்ல மதிப்பெண் பெற்றோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
ஆனால் விளையாடும் குழந்தைக்கு அதன் அனுபவம் தரும் உள்ளார்ந்த குதூகலமும் மற்றும் பிற குழந்தைகளின் கூட்டாளியான நட்பு என்னும் சமூக உறவும் காசு பணத்தால் அளக்க முடியாதவை.
இந்தப் புள்ளியிலிருந்து நாம் வாசிப்பு பற்றி மேற் செல்ல முடியும். தொடருவோம்.
(image courtesy: pinterest.com)
nice write up