எதற்காகப் புத்தக வாசிப்பு ? -2
பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத வேலை தான் வாசிப்பு என சென்ற பகுதியில் பார்த்தோம்.
அப்படி நமக்கு வெட்டியாகத் தோன்றுவதை நாம் வயது வாரியாக அடுக்கலாம் :
பதின்களில் இரு சிறுவர் அல்லது சிறுமியர் நேரம் போவது தெரியாமல் தனது வயதுத் தோழன் தோழியுடன் பேசுவது வெட்டியாக, அவர்களுக்கே வயதான பின் தோன்றும். அவர்கள் பெற்றோருக்கோ அப்போதே தோன்றி இருக்கும்.
கோயில் மாதா கோயில் மசூதிக்குப் போகிறவர்களைப் பார்த்தால் வயது குறைவானவருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாதோருக்கும் அது வெட்டியானது என்றே தோன்றும்.
அதிகம் அறியப்படாத இசைக் கலைஞர் ஓவியர் நாள் முழுதும் தம் கலையில் நேரம் அர்ப்பணித்து அதையே மையமாக்கி வருகிறார்கள். அவர்களை நாம் பைத்தியம் என்று கூட நினைக்கலாம் .
கட்சி, தொழிற் சங்கம் என அலையும் ஆசாமிகளில் அடி மட்டத் தொண்டரின் நிலையும் அதுவே. இந்த இடத்தில் எழுத்தாளர்களைச் சேர்க்கலாம். ஆனால் அதை விரிவாக நான் பின் வரும் பகுதிகளில் எழுதுவேன்.
எனவே, பிறருக்கு வெட்டியாகத் தோன்றுவதை ஒருவர் உயிர் மூச்சாய் செய்வது அர்ப்பணிப்பினால். இந்த அர்ப்பணிப்பு மட்டுமே வாழ்க்கையின் மையச் சரடாகிறது. அர்ப்பணிப்பு பற்றித் தொடரும் முன் நமக்கு நன்றாகத் தெரிந்த ‘எந்திரன்’ திரைப் படம் பற்றிப் பார்ப்போம்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன் சுஜாதா என்னும் எழுத்தாளர் மிகவும் கொண்டாடப் பட்டவர். அவர் தமது தமிழ் நடைக்காகவே கவனிக்கப்பட்டார். ’10 % சிரிப்பு சிரித்தாள் ” போன்ற பிரயோகங்களுக்காக.
அவர் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் ‘என் இனிய எந்திரா’ என்று ஒரு தொடர் கதையை எழுதினார் . அதன் இரண்டாம் பகுதியாக ‘மீண்டும் ஜீனோ’ என அடுத்த தொடர் வந்தது. ஒரு இயந்திரப் பூனைக் குட்டி தானே சிந்திக்கும் அளவு வளர அது ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து விடுகிறது. இதுவே சுருக்கமான கதை. இதைத் தான் ரஜினிகாந்த் நடித்த சினிமாவாக எடுத்தார் சங்கர். அந்த சினிமாவில் நாம் பார்த்த இயந்திர மனிதனாகவே நாம் வாழ்கிறோம். நாம் நமக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதை ஆழாமல் அப்படியே உள்வாங்கி சொந்த சிந்தனை ஆழ்ந்த புரிதல் எதுவுமில்லாமல் வாழ்ந்து மடிகிறோம். இது வெகுஜன மதிப்பீட்டில் பொருந்துவதால் நமக்கு சுயபரிசீலனை செய்ய வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது.
வாசிப்பு என்பது நாம் இயந்திரம் இல்லை என்பதை நமக்கே உறுதி செய்வது. உடனே எதிர்க்கேள்வி எழலாம். “நான் சினிமாவில் எவ்வளவோ பார்த்து ரசிக்கிறேனாக்கும். அது என்ன வாசிப்பு ? அதற்கென்ன இத்தனை கொண்டாட்டம் ?”
நாம் புத்தகம் , சினிமா , இணையம் இவை மூன்றையுமே ஊடகமாகப் பார்க்கலாம். சினிமா என்னும் ஊடகம் நமது காணும் திறன் மற்றும் கட்சி வழி உள்வாங்கும் செயற்பாட்டை மனதில் வைத்துத் தயாரிக்கப்படும் ஒரு காணொளி மட்டுமே.
அதனால் நுட்பமான எதையும் சொல்லவே முடியாது. மனதுள் நிகழும் பெரிய போராட்டம், காலம் இடம் மாற்றி மனம் அலையும் விசித்திரம் இவற்றை சினிமா காட்டும் போது அது மலினமான , ஆழமில்லாத காட்சியாயிருக்கும். இதை நான் கலைப் படங்கள் அல்லது விருதுப் படங்களையும் சேர்த்தே சொல்கிறேன். இது இயக்குனரின் குறைபாடில்லை. அந்த ஊடகத்தின் உள்ளார்ந்த குறை.
ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன் ‘பாட்டி உருட்டிய ஜெப மாலையை அம்மா தன கழுத்தில் இருந்து படுக்கும் போது கழற்றி வைத்தாள். காலையில் என் தங்கை அதை மாட்டிக் கொண்டு குதித்தாள். இதில் அப்பாவுக்கு ஏன் இத்தனை கோபம்? அவளை நிறுத்தி அவள் கழுத்தில் இருந்து பறித்து விட்டெறிந்தார் ‘
சுமார் முப்பது சொற்கள் உள்ள இந்தக் கட்சியின் உள்ளே இருக்கும் கதையை, அதன் தலைமுறை தாண்டிய தொடர்ச்சியை, இயக்குனரால் எந்த அழுத்தமும் ஆழமும் கதையில் உண்டோ, அதே தீவிரத்துடன் தரவே முடியாது. சுமார் ஐந்து நிமிடம் ஓடும் காட்சிகள் வழி ஏதோ சுமாராகக் கொண்டு வர முடியும்.
அப்பாவுக்கு ஜெபம் விரதம் இவை ஏன் அச்சுறுத்தலாயின ? அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் அம்மா பாட்டி இவர்கள் மட்டும் தானா அவரை பயமுறுத்தினர்? இல்லை அவரால் என்றுமே தாண்ட முடியாத வேறு ஒன்றா?
இந்த சிந்தனைத் தொடர் நம்முள் புத்தகம் வாசிக்கும் போது நிகழும். படிப்பதை நிறுத்தி நாம் சிந்திக்க வழி வகுக்கும். இன்றும் தொடரும் நம்பிக்கை சார்ந்த சடங்குகள் பற்றி ஒரு புதிய சாளரத்தைத் திறக்கும். நம் கற்பனை வழி எழுத்தாளர் கோடி காட்டிய ஒரு பெரிய சமூக அழுத்தம் நம்முள் விரியும். என்ன அழுத்தம் அது? தனி மனிதன் மீது சமூகத்தின் பெரும்பான்மை நம்பிக்கை வழி வைக்கும் அழுத்தம் அது. இந்தக் கற்பனை மட்டும் தொடர் சிந்தனை எழுத்தாளன் வழி வாசகனைத் தொற்றுகிறது. இதற்கான துவக்கம் கால அவகாசம் இரண்டுமே சினிமா என்னும் ஊடகத்தில் சாத்தியம் இல்லை.
கட்டுரையின் இந்தப் புள்ளியில் வாசகரை நான் வணிக எழுத்து மற்றும் தீவிர எழுத்து பற்றி கவனிக்கும் புரிதலுக்கு அழைக்கிறேன். சிந்திக்க மற்றும் வாசிப்பு தூண்டும் கற்பனையில் மேற்செல்ல வாய்ப்பே தராமல் வருடி விடும் எழுத்தையே நாம் வணிக எழுத்து எனக் காண்கிறோம். மனக் கிளர்ச்சி மற்றும் அற்பமான அன்றாட உறவு முறைகளை மிகையாக்குதல் இவை வணிக எழுத்தின் அடையாளங்கள். மனித வாழ்கை மற்றும் மனித உறவுகள் பற்றிய ஆழ்ந்த தரிசனம் நமக்கு தீவிர எழுத்துக்களில் மட்டுமே கிடைக்கும்.
அர்ப்பணிப்பு , எழுத்தாளர் , வணிக எழுத்து , தீவிர எழுத்து , நவீன எழுத்து இவை பற்றி நான் பின் வரும் பகுதிகளில் விரிவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். தீவிர எழுத்து பற்றிய சரியான புரிதலுக்கு ‘விரிவும் ஆழமும் தேடி ‘ என்னும் சுந்தர ராம சாமியின் புத்தகத்தை நான் சிபாரிசு செய்கிறேன். காலச்சுவடு பதிப்பகத்தில் அது கிடைக்கும்.
தீவிர எழுத்து நமக்கு வாழ்கை பற்றிய (புதிய கோணங்கள், புதிய சாளரங்கள் , விமர்சனங்கள் வழி ) மேம்பட்ட புரிதலை வழங்கும். அது பைசா ரூபாய் என்னும் அளவுகளில் அடங்காது. அது புரிதலுடன் வாழ்ந்து மடியும் ஒரு தீவிர சிந்தனை வாழ்க்கை முறைக்கு நம்மை இட்டுச் செல்லும்.
வாசிப்பு பற்றிய தொடர் கட்டுரையில் புனைவு (அதாவது கதை கவிதை – fiction and poetry) மற்றும் அபுனைவு (non fiction ) பற்றிய தெளிவான அணுகுமுறையை நாம் பார்க்க வேண்டும். அது அடுத்த பகுதியில் .
(image courtesy: mobile.twitter.com)