எதற்காகப் புத்தக வாசிப்பு ? -3
இந்தத் தொடர் கட்டுரையை நான் புதிதாக வாசிப்போருக்கு மட்டுமென எழுதவில்லை. உண்மையில் பல எழுத்தாளர்களுக்கே வாசிப்பு என்பது புனைவு எழுத்தைத் தாண்டியது என்பது தெரியாது. பல எழுத்தாளர்கள் நல்ல எழுத்தை வாசிக்க வில்லையே என்று ஆதங்கப் படுவதெல்லாம் தனது புனைவு பற்றியதே. மனித வாழ்க்கை சிக்கலானது. ஆயிரம் முகம் கொண்டது. புனைவு சார்ந்த வாசிப்பு மட்டும் மானுடம் சாதிக்கும், சறுக்கும் , தடுமாறும், தேங்கும் எல்லாப் புள்ளிகளையும் தொட்டு ஒரு சித்திரம் வரையும் என நம்புவது குழந்தைத் தனமானது.
அபுனைவு பற்றி நாம் கவனம் கொள்ளும் போது இரு தியாகிகளை பற்றிக் குறிப்பிடலாம். ஒருவர் பகத் சிங். மற்றவர் வஉசி. பகத் சிங் கம்யுனிசக் கொள்கைகளில் ஈர்ப்புள்ளவர் என்பது பலருக்கும் தெரியாது. வஉசி இறுதி நாட்களில் மனமுடைந்து செய்த சில காரியங்கள் அதிக கவனம் பெறவே இல்லை.
புனைவின் மிகப் பெரிய பலம் அது தனி மனிதனின் தரப்பிலிருந்து சமூகம் மற்றும் என்றுமே விளங்காத சமூக ஏற்றத் தாழ்வுகள் நோக்கி விரிவது. ஆனால் சமூகம் எப்போதும் மிகப் பெரிய ஆளுமைகளை வழிகாட்டியாக, ரட்சகராக, ஆதர்சமாகக் கொண்டாடும். அவர்களைத் தாண்டிச் சென்று நாம் வரலாற்றை, பண்பாட்டை, அடையாளத்தை நாம் அறிய அபுனைவுகளே பெரிய பொக்கிஷம். பகத் சிங், வஉசி, பாரதியார் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் இவர்களைத் தவிர்த்த பெரிய கூட்டம் பற்றி நாம் புரிந்திட அபுனைவுகள் சரியான வாகனங்கள்.
மானுடவியல் (anthropology), வரலாறு, உளவியல் மற்றும் சாதனையாளர் வாழ்க்கை வரலாறு இவைகள் அபுனைவில் நம்மை மேம்பட்ட புரிதலுக்குக் கொண்டு செல்லும்.
நமது புரிதல் சமூகம் மற்றும் தனிமனிதன் இருவரையும் தனித்த செயற்பாடு, கூட்டுச் செயற்பாடு வழி புரிந்திடும் முனைப்பில் இருக்க வேண்டும். அபுனைவு நூல்கள் நமக்கு நிறையவே உதவும் இந்தப் புரிதலில்.
இலக்கியம் வாசிக்கத் துவங்கும் போதே விமர்சனக் கட்டுரைகளையும் சேர்த்து வாசிக்கலாம். அப்போது நாம் ஒரே போல ஒரு தடப் பதிவுகளையோ அல்லது ஒரே எழுத்தாளரின் பதிவுகளையோ வாசித்துத் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்.
வரலாறு பற்றி ஆர்வம் வரும் போது மானுடவியல் மற்றும் வரலாற்றில் உள்ள பிழைப் பதிவுகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை வாசிக்க வேண்டும். புனைவில் உளவியல் பற்றிய தெளிவு நமக்குக் கிடைக்காது. புனைவு வாழ்க்கை தொடர்பானது. அது துல்லியமான விஞ்ஞான பூர்வமான பதிவுக்கு வெளியே இயங்குவது.
நம்மை ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சியோ , தகவலோ, செய்தியோ பனிமலையின் முகடு போன்றதே. அதில் தொடங்கி நாம் ஆழ்ந்து வாசிக்க நமக்கு பணத்தால் அளக்க முடியாத ஒரு புரிதல் கிடைக்கிறது.
அபுனைவு நூல்கள் ஆராய்ச்சி மாணவருக்கு என்னும் தவறான எண்ணம் எல்லாரிடமும் உண்டு. உண்மையில் அபுனைவுகள் சமூகம் முழுதும் வாசித்து விவாதிக்க வேண்டியவை.
அபுனைவு நூல்களை முதலில் நம் ஆர்வத்துக்கும், நாம் தேடும் விவரத்துக்கும் தேவையான அத்தியாயங்கள் வழி தேர்ந்தெடுத்து வாசிப்பது அலுப்பைத் தவிர்த்து நாம் ஒரு தெளிவான திசையில் வாசிக்க உதவும்.
அர்ப்பணிப்பு பற்றியும் நாம் பேச வேண்டும். ஈடுபாடு என்பது தற்காலிகமானது . அர்ப்பணிப்பு போதிய ஞானம் கிடைக்கும் வரைத் தேடும் பெரும் பயணம்.
அர்ப்பணிப்புடன் நாம் நமது சமூகம், பிற சமூகங்கள் மற்றும் மண்டும் வந்த பாதையை புனைவு மற்றும் அபுனைவு வழி புரிதல் வேண்டும்.
மேலும் தொடருவோம்
(image courtesy: noolulagam.com)