எதற்காகப் புத்தக வாசிப்பு ? -5
எழுத்தாளர்களை பற்றி பேச நிறையவே இருக்கிறது. அவர்களிடமிருந்தே நாம் படைப்புக்களை அல்லது நூல்களை நோக்கி நகர முடியும். படைப்பாளிகள் அல்லது ஆளுமைகள் வழி நாம் வாசிக்கக் கூடாது. ஆனால் எழுத்தாளர்களைப் பற்றிய பிரமை நீங்கினால் நாம் வாசிப்பு நடுநிலையாய், படைப்புகளை சீர்தூக்கி வாசிக்கும் நிலைக்கு உயரும்.
எனவே நாம் எழுத்தாளர்கள் பற்றி சரியான புரிதலை அடைவது நீண்ட நல்ல திட்டம். அவர்களைப் பற்றிய பிரமைகள் நீங்குவது குறுகிய காலத்தில் சாத்தியம்.
எழுத்தாளர்களை ஒரு பீடத்தில் ஒரு குரு மாதிரி வைத்துப் பார்ப்பது நமக்குள் எப்படிப் புகுந்தது என்றே புரியவில்லை. எழுத்தாளர்கள் சாதாரண மனிதர்கள். வாழ்கை பற்றிய தெளிவும் , அவதானிக்கும் திறனும் , கற்பனையும் மற்றும் அதைப் பதிவில் கொண்டு வரும் கலையும் கைவந்தவர்கள்.
ஆனால் அவர்கள் வெற்றிக்கு உதாரணமான சாதனை ஆளுமைகளோ அல்லது முன்மாதியான குணவான்களோ, ஒழுக்கத்தின் அடையாளங்களோ கிடையாது. அவர்கள் மேலதிகமான சொரணை உள்ளவர்கள். அதன் பாதிப்பால் எழுத்திலும் நடவடிக்கையிலும் ஒரு கலகக்காரனாக இயங்குபவர்கள்.
பல சமகால எழுத்தாளர்கள் கூட கொண்டாடும் கும்பலின் வசப்பட்டு ஒரு பீடத்தில் ஏறி அமர்ந்து தம் தேடலை தொலைத்து நிற்பதைக் காண்கிறோம்.
எழுத்தாளர்கள் வித்தியாசமான மற்றும் மேலதிகமான சொரணை (sensitivity) உள்ளவர்கள். அவர்கள் பிறர் அனுபவம் – தந்து அனுபவம் எனப் பிரிக்கும் கோட்டை எளிதாய்க் கடப்பவர்கள்.
எழுத்தாளர்கள் நமக்கு செய்வதெல்லாம் ஒரு பகிர்தல். அவ்வளவே. நம்மைப் போலவே அவர்களின் உச்ச நீச்ச உணர்வலைகள் உண்டு. படைப்புகளின் வீச்சு அவர்கள் விரும்பும்படி வரலாம் வராமலும் போகலாம். எனவே நாம் ஒரு படைப்பை அதன் வீச்சைக் கொண்டு ரசித்து மேற்செல்வோம். இந்தப் படைப்பாளியா எல்லாமே ஆகப் பெரும் படைப்பு என்னும் முத்திரையுடன் அணுக வேண்டாம்.
மறு பக்கம் யதார்த்த வாதம், நவீன காலகட்டம், பின்நவீனத்துவம் எனக் கால அடிப்படையில் தமிழ் இலக்கியம் கடந்து வந்த பாதையை நாம் நினைவு கூரல் வேண்டும். அடுத்த பகுதியில் பார்ப்போம்.