மிருகவதை – தவறான புரிதல்கள்
ஜல்லிக்கட்டு மற்றும் மிருக வதை பற்றி இப்போது சர்ச்சைகள் மிகுந்துள்ளன. இவை விவாதங்களாக மேம்படும் போது மிருகவதை பற்றிய ஒரு புரிதல் நிகழும். தமிழ் கூறும் நல்லுலகில் தலை சிறந்த சித்தனையாளர்களான கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் அசைவ உணவு உண்பதையும் மிருக வதையையும் ஒன்றாக்கிப் பேசியிருக்கிறார்கள். நடிகை திரிஷா மிருகவதை பற்றிய தமது நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் மற்றும் மிருகத்தைத் தடுப்பு அமைப்புக்கள் எந்தப் புள்ளியில் நம்மை விழிக்கச் சொல்கிறார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டிய திருப்பு முனை இது.
அரசியல் கட்சிகள் உணர்ச்சிமயமாக இதை வைத்திருப்பதில் பலனடைகிறார்கள். சற்றே விலகி மிருகவதை என்பது எந்த இடத்தில் துவங்குகிறது என்று விவாதிப்போம்.
மத நம்பிக்கை அடிப்படையில் நாம் மிருகங்களை வேறு படுத்திப் பார்க்கிறோம். பசு,குரங்கு, மயில் இவற்றைப் புனிதப் பட்டியலில் வைத்திருக்கிறோம். மறுபக்கம் மிருக வதை பற்றிய எதுவுமே தவறு என்கிறோம் .
மிருக வதை என்பது எது? எளிய உதாரணம் இருக்கிறது. செல்லப் பிராணிகள் பற்றியதே அது. சைவ உணவு அல்லது அசைவம் எது உண்பவராக இருந்தாலும் மக்களை இரு பிரிவாக்கப் பிரிக்கலாம். செல்லப் பிராணிகளைக் கொண்டாடுவோர். அருவருத்து ஒதுங்குவோர். இரண்டில் ஒருவரே யாரும். எங்கள் குடும்பத்தில் நானறிந்து பூனை வளர்ப்பவர் ஒரே ஒருவரே . மற்ற அனைவரும் எதிர்க்கட்சி.
நாயை ‘டாமி , ஜிம்மி ‘ எனக் கொஞ்சிக் குலவும் வளர்ப்பாளரிடம் ‘இந்த நாய்’ என்றால் வெகுண்டெழுவார். அவர் இனம் தாண்டிக் காட்டும் அன்பை நாம் புரிந்து கொள்ளும் புள்ளியில் தான் மிருகவதை பற்றிய புரிதல் நிகழ்கிறது.
மிருகம் பறவை எனப் பார்க்காமல் நாம் நேசிக்கும் புள்ளியில் மனிதனுக்குள் இருக்கும் மென்மையான பரிவுணர்வு மேலோங்குகிறது. மிருகங்கள் நம்மை விட அறிவில் தாழ்ந்தவை. நம் பராமரிப்பில் அந்தக் காரணத்தினாலேயே அவை பாதுகாப்புப் பெற வேண்டும். நாமே அவற்றைத் துன்புறுத்துவது ஒருக்காலும் நடக்கக் கூடாததே.
பரிவும், மென்மையுமாய் மற்ற உயிர்களை நடத்துவதும் அவற்றைப் பராமரிப்பதும் ‘அறிவு -பண்பாடு ‘ என்னும் தளங்களில் மேலான மனிதனின் மனிதத் தன்மை ஆகிறது. இந்த மனிதத் தன்மையில் இருந்தே ‘மிருகவதைத் தடுப்பு’ என்னும் விழுமியம் துவங்குகிறது.
அசைவம் உண்பவரிடம் விலங்கு மீது நேயமும் இருக்கிறது . இதுவே உணவுக்காக விலங்கை அழிப்பதும், விலங்குகளைக் கொடுமைப் படுத்துவதும் ஓன்று அல்ல என்பதை நமக்குப் புரியவைக்கும் துவங்கு புள்ளி.
இன்று நடுவது தாண்டியவர் மட்டுமே ‘சர்க்கஸ்’ என்னும் சாகசப் பொழுது போக்கில் மிருகங்கள் செய்யும் விசித்திர செயல்களைக் கண்டு களித்திருப்பார்கள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளாகவே சர்க்கஸ் நடத்துவோர் மிருகங்களை சிரமப்படுத்தி வித்தை காட்டுவது நிறுத்தப் பட்டு விட்டது. யானை ஒரு சிறிய நாற்காலி அல்லது முக்காலி மீது அமரும். கிளிகள் புலிகள் எல்லாமே சிரமப் படுத்தப்பட்டன. அவை அடித்து சித்திரவதைப்பட்டே பயிற்சி பெற்றன. இன்று திரைப்படங்களில் ‘கணிப்பொறி வரைவுக்கலை’யில் மட்டுமே மிருகங்களின் பிம்பங்கள் காட்சிப் படுத்தப் படுகின்றன.
நடைமுறையில் ஏற்கனவே இருக்கும் சட்ட விதிகளின் படி கோழிகளை இரு சக்கர வாகனத்தில் கொத்தாகத் தொங்க விட்டுச் செல்லுதல் குரூரமானது. மிருகவதை.
புலால் உண்பதற்காக ஒரு மிருகத்தைக் கொல்வது உணவுக்காக என்னும் அடிப்படையில். அதுவும் துன்பம் தருவதே. அனால் நோக்கமும் கொல்லப் படும் முறையும் வேறு. ஒரு ஆட்டை சித்திரவதை செய்து கொன்று தின்றால் அந்தக் குரூரம் மனிதப் பண்பானதே அல்ல. கொடூரம் சித்திரவதை என்னும் குரூரம் மட்டுமே மிருகவதையின் அடையாளமாகும். உணவுக்காகக் கொல்வதில் இவை இல்லை.
இதே குரூரம் தூக்கு தண்டனை தருவதிலும் இருக்கிறது. அதை எதிர்ப்போரை கொச்சைப்படுத்துவோர் உண்டு.
குரூரம், சித்திரவதை இல்லாத ஜல்லிக் கட்டு முறைகள் எவையோ அவை கண்டிப்பாக, சரியாக நீதி மன்றம் முன் ஈடுபடும் என்றே நான் நம்புகிறேன்.
குரூரம் மனிதனோ மிருகமோ யார் மீதும் வெளிப்படுத்தப் படக் கூடாது.
கட்டுரையை முடிக்கும் முன் முக்கியமான ஒரு கேள்வியை அலசுவோம்.
peta என்னும் மிருகவதைத் தடுப்பு அமைப்பு தடை செய்யப் பட வேண்டும் என்பதை எல்லாக் கட்சிகளும் ஒரே குரலில் கூறுகின்றன. நாளை கட்சிகள் மற்றும் எந்த அமைப்புக்களையும் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று அர்த்தமாகி விடும் . ஜனநாயக முறைகளை நாமே கை விட்டுவிடுவது பெரிய பின்னடைவு.
நியாயமான கோரிக்கையை மைய படுத்த, எதிராளியின் குரலைத் தடை செய்யும் குரல் அல்ல விவாதிக்கும் குரலே வேண்டும்.
அந்தக் குரலே நீதி மன்றத்தில் எடுபடும் திராணி உள்ளது.