மனசாட்சி புனிதமானதா? -1
மனசாட்சி பற்றி ஜல்லிக்கட்டு விவகாரத்தின் போது நிறைய சிந்தனைகள் பிறந்தன. சற்று விவாதிக்க எண்ணுகிறேன்.
சைவ உணவுக்காரர் மற்றும் மாமிசம் உண்போர் என இரு சாரார் எப்போதும் இருக்கிறார்கள். உணவுக்காக மிருகம் கொல்லப்பட்டால் பின் என்ன செய்தாலும் அது ஓன்று தானே என ஒரு வாதம் முன் வைக்கப் பட்டது. மிருகத்தை வதைப்பது கொல்வது இரண்டும் ஒன்றே என்பதே அந்த வாதம். அதற்கு என் எதிர்வினையை ஏற்கனவே சொல்லி விட்டேன்.
மனசாட்சி பற்றி நிறையவே எனக்கு எண்ண ஓட்டம் இருந்தது. எனது தூரத்து உறவு இரு சகோதரர்கள் மாட்டுப் பாலைக் கூடக் குடிக்க மாட்டார்கள். beauty without cruelty என்னும் அமைப்பின் வழி அவர்கள் தோல் பொருட்கள் மிகவும் கொடூரமாய்த் தயாரிக்கப்படுகின்றன என என்னிடம் வாதிட்டார்கள். அப்போது நான் பதின்களில். ஒரு நூறு வருடம் ஆனாலும் ஒரு ஆட்டின் மூளை வளரப் போவதே இல்லை. அதைத் தின்று செரித்தால் பிறகு வரும் ஆடும் உணவான பழைய ஆடும் ஒன்றே என்று நான் வாதிட்டேன்.
அசைவ உணவு புரதம் மிகுந்ததாயிருந்தால் நல்லதே. விவேகானந்தர் அசைவம் வலு தரும் என்று வாதிட்டவர். அசைவ உணவுக்கு எதிரான மனநிலை மத அடிப்படையில் ஆனதே. அதற்கு வேறு எந்த உயர்ந்த நோக்குப் பின்னணி எல்லாம் கிடையாது.
மனசாட்சி சைவம் சாப்பிடுவோருக்கு ஒரு மாதிரியும் அசைவம் சாப்பிடுவோருக்கு வேறு மாதிரியும் வேலை செய்யும் என்பார்கள். ஆனால் ஒரு தீவீரமான நொடியில் எந்த ஒரு ஆளும் துணைக்கு அழைப்பது தன் மனசாட்சியைத் தான்.
மனசாட்சி பற்றி நிறைய பேசி அதன் வலிமையை கொண்டாடியவர் காந்தி அடிகள் மட்டுமே. அவர் முன் வைத்தவை அவருடைய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆனவை. தமது நம்பிக்கைகளின் மூலம் மற்றும் தராதரம் யாருக்குமே சுயவிமர்சனமாய் கண்டறியக் கூடியதாய் இருப்பதே இல்லை.
ஏனெனில் நம்பிக்கைகளே புனிதத்தின் அடிப்படை ஆக அமைகின்றன.
எனது புனிதம் எனது மனசாட்சி இவை எனது நம்பிக்கையின் அடிப்படையில் ஆனவை.
அடுத்த பகுதியில் நம்பிக்கைகள் பற்றி விவாதித்து மேற்செல்வோம் ….
(image courtesy: osv.com)