காதல் நிறைவேறி மனிதப் பெண்ணை மணந்த கரடி – ஜக்கரியாவின் சிறுகதை
தடம் பிப்ரவரி 2017 இதழில் மலையாள எழுத்தாளர் பால் ஜக்கரியாவின் சிறுகதை ‘தேன்’ பிரச்சாரமாக இல்லாமல் நுட்பமாக ஒரு விஷயம் எப்படிச் சொல்லப் பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். மாய யதார்த்தமாய் சொல்லப் பட்டாலும் கதையின் சாராம்சம் மனதில் தைக்கும். மிகவும் நீண்ட கதை. காட்டு வாழ் உயிரினங்களுடன் நாம் பரிச்சயம் இல்லாமலிருக்கிறோம். ஜக்கரியா அவற்றை உற்று நோக்கி முதலில் காட்டுச் சூழலில் பல உயிரினங்களும் நமக்குக் கதாபாத்திரங்களாகும் வர்ணனையில் நம் மனதை வெல்கிறார். அதிலிருந்து ஒரு கரடியை அவர் மையமாக்கும் போது நாம் கதையில் ஆழ்ந்து விடுகிறோம். இந்த வெற்றி அவரது புனைவின் வீச்சுக்குச் சான்று. கரடி ஓன்று மனிதப் பெண்களின் அழகை ரசிக்கத் துவங்கி ஒரு இளம் பெண் மீது காதல் வயப் பட்டு அவளைத் திருமணமும் செய்து கொள்கிறது. பெண்ணைப் பெற்றவர்கள் முதலில் தயங்கினாலும், பின்னர் ‘வேறு இடத்தில் (காட்டில்) சென்று வாழும் பட்சத்தில் ஆட்சேபனை இல்லை’ என்று ஒப்புக் கொள்கிறார்கள். ஊர்க்காரர்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்வினையிலிருந்து தப்பிக்க என அவ்வாறு சொல்கிறார்கள். கரடியும் புது மணப்பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் பெற்றோர் ஆகிறார்கள். தாயைப் பார்க்க வரும் பெண் கரடி எந்த மாதிரி வேலைகளை வைத்துத் தொல்லை தருவது இல்லை எனப் பட்டியலிடுகிறாள். கரடி குளிக்காததால், ஆடை அணியாததால் துணி துவைக்கும் வேலையே இல்லை. இயற்கை உணவு. அதனால் சமையலும் இல்லை.
பெண் குடும்பத்தில் இயந்திரமாய், உணவு சமைப்பது – துணி துவைப்பது என குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் படுகிறாள். அதை அவள் கொண்டாடிக் கொள்வது போல ஒரு மாயை பல காலமாய் அவள் மீது சுமத்தப் பட்டிருக்கிறது. முத்தாய்ப்பாகப் பெண்ணைப் பெற்றவள் தனக்கும் ஒரு கரடியைப் பார்க்கும் படி மகளை வேண்டுகிறாள்.
பெண்களை மட்டுமல்ல, கால காலமாய் நாம் காப்பற்றி வரும் பல சமூக அடுக்குகளை மறுபரிசீலனை மற்றும் விமர்சனம் செய்யக் கோரும் இந்தப் படைப்பு நுட்பமானது.
(image courtesy:veethi.com)