மனசாட்சி புனிதமானதா ? -3
நம்பிக்கைகள் ஆழமாக மனதில் பதிந்ததைத் தவிர வேறு அடிப்படை இல்லாதவை. அதாவது தார்மீக அடிப்படை ஏதும் இல்லாதவை. மறுபக்கம் தார்மீக ஆவேசம் கொண்டவை. நம்பிக்கை எதுவுமே கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.
நம்பிக்கைகள் விதைக்கப்பட்ட துவங்கு புள்ளி, தனி மனிதனின் சுயவிமர்சனத்துக்கு ஆட்படுத்தப் படுவதே இல்லை. சமூகத்தின் மதிப்பீடுகள் வழி எதையும் நோக்கும் மனம் விமர்சனத்தையும் சமூகக் கண்ணோட்டத்திலேயே மேற்கொள்ளும். சுயவிமர்சனம் செய்து கொள்ளாத சமூகம் போலவே தனிமனிதனும் தனது நம்பிக்கைகளின் புனிதத்துவத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதே இல்லை.
பெண்களின் மீதான கட்டுப்பாடுகள், ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இவை தாண்டி என்றுமே சிந்திக்காத ஆழ்மனம் கொண்டவனே தனிமனிதன். ஒன்றை , தனக்கு நியாயமாகப் படும் ஒன்றை, நிலை நாட்டும் ஆவேசத்தை மனசாட்சியை அவன் கொள்வது நீர்க்குமிழி போல உள்ளீடற்றது.
தனது தனிப்பட்ட அவமானம் வழியில் தொடங்கும் ஆவேசம் சமூகம் நோக்கி விரியும் பொது மட்டுமே தார்மீக அடிப்படை ஓன்று உருவாகிறது.
தன்னை முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து வலுக்கட்டாயமாகத் தள்ளி விட்ட போது காந்தியடிகளின் மனதில் எழுந்தது தனி மனித ஆவேசம் மட்டுமல்ல. பின்னாளில் தென்னாபிரிக்காவின் இந்தியர் மற்றும் இந்தியா முழுவதுமான கோடிக்கணக்கான மக்களின் உரிமைக்கான ஆவேசமாக அது மாறியது.
நம்பிக்கைகளைத் தாண்டித் தான் நாம் உண்மையை நெருங்க வேண்டும். அதற்கான உந்துதல் தனி மனிதனுக்குப் பொறியாக சொந்த வாழ்க்கையில் கிடைக்கிறது. அதை பின் தொடர்ந்து சமூகம் பற்றிய விமர்சனத்துக்கான தளத்தில் அவன் நுழையும் போது மட்டுமே மனித நேயம் மற்றும் ஆன்மிகம் வழி அவன் முன் செல்ல இயலும்.
நமக்கு கற்பிக்கப் பட்டவற்றைச் சுற்றிய மனசாட்சியில் புனிதம் தார்மீக அடிப்படையில்லாத நம்பிக்கைகளால் ஆனதே. விழிப்பும் வெளிச்சமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
சுயவிமர்சனம் மட்டுமே தேடல் வழி மானுடம் மேலும் ஆவேசத்துக்கு வழிவகுக்கும்
(நிறைவு பெற்றது )
(image courtesy:travelphotos.everything-everywhere.com)