நடப்பு அரசியல் பரபரப்பு – ஜெயமோகனின் அங்கதம்
அனேகமாக ஜெயமோகனுடன் நான் வேறு படும் புள்ளிகள் அதிகம். ஆனால் நடப்பு அரசியல் பரபரப்பில் அவரது அங்கதமும் அணுகுமுறையும் மிகவும் என்னால் ரசிக்கப்படுகின்றன. அவரது பதிவுக்கான இணைப்பு —- இது.
அதில் அவரது இந்த அங்கதம் என்னைக் கவர்ந்தது:
——————-
சார் நீங்க யாருக்கு எதிரா கருத்து வச்சிருக்கீங்க?” என்றார் பக்கத்துவீட்டு வங்கியாளர். “யாருக்கு எதிராவா? நானா?” என்றேன் திகைப்புடன். “ஏன் சார், அரசியலிலே ஒரு ஸ்டேண்ட் வேணும்லா?” வேண்டும்தான். ஆனால் ஏன் அது எதிராக இருக்கவேண்டும்?. “சார், என்ன சொல்லுதீக? இப்ப நாம எப்டி ஒரு முடிவ எடுக்குதோம்? நமக்கு இன்னாரைப் பிடிக்காது. அவருக்கு எதிரிய சப்போர்ட் பண்ணுதோம். அதுதானே ஸ்டேண்டு? நல்ல ஒரு எதிரி இல்லேன்னாக்க பின்ன மயிராட்டா ஸ்டேண்ட் எடுத்து வெளங்குகது?”
“ஆமாம்” என்றேன். “ஆனா எனக்கு எதிரின்னு ஒருத்தரும் இல்லியே” என்றேன். “அடாடா ஏன் சார்?” என்றார். “எனக்கு யாரையுமே தெரியாது சார்”. அவர் உற்சாகத்துடன் “அப்ப அவந்தான் சார் நம்ம எதிரி. எப்டி தெரியாம ஒளிச்சு இருக்கான் பாத்தியளான்னு ஆரம்பிக்கவேண்டியதுதானே?” நான் பம்மி “எதுக்குங்க?” என்றேன்.
”என்ன இப்டி கேட்டுட்டீக? ஒரு எதிரி இருந்தாத்தான் நாம ஒரு ஆளூண்ணு இருப்பம் சார். மோடிய இல்லாட்டி கருணாநிதிய கிளிகிளீன்னு கிளிச்சா நமக்கு ஒரு இதுதானே?” என்றார். ”நம்ம எதிரி இன்னின்ன மாதிரி சூழ்ச்சி பண்ணுதான்னு நினைக்குதோம். ஒடனே நாம அதுக்கு எதிரா சூழ்ச்சி பண்ணுதோம். காலம்பற எந்திரிச்சு கட்டன்சாய குடிக்கிற நேரத்திலேயே லைஃப் தொடங்கிரும்லா?”.
நான் குரல்கம்ம “நான் சூழ்ச்சில்லாம் பண்ணுறதில்லீங்க” என்றேன். “என்ன சார் சொல்லுதீக, இப்ப செய்யல்லேன்னாக்க எப்ப செய்ய போறீக? ஹைடைம்லா? வாங்க நானே சொல்லித்தாறேன். சூப்பரா செஞ்சுபோடலாம். சூழ்ச்சி பண்ணணும் சார். சூழ்ச்சி பண்ணேல்லன்னாக்க பின்ன என்ன அரசியல்?” என்றார்.
நான் “அத எங்க போயி பண்ணுறது?” என்று கேட்டேன். “ஃபேஸ்புக்கிலேதான்” என்றார். “எனக்குத்தான் ஃபேஸ்புக் அக்கவுண்டே இல்லியே” அவர் அயர்ந்து “ஓ” என்றார். பின்னர் “சவம், ஒண்ணை தொடங்கிப்போட்டா அதுபாட்டுக்கு கெடக்கும்லா?” என்றார். குரல்தாழ்த்தி “பயமாட்டிருந்தா ஃபேக் ஐடி போரும். நமக்கு நாலஞ்சு ஃபேக் ஐடியாக்கும் உள்ளது. சொந்தப்பேரில தொடங்கினாக்க வில்லங்கம் பாத்துக்கிடுங்க. மக கெட்டிப்போறதுக்கு நிக்காள்லா?”
——————
சமூக வலைத்தளங்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புக்கள், உரையாடல்கள் எதிலுமே ஒரு பரபரப்பு. பங்கேற்கும் ஆர்வம். வாழ்ந்தவர் மீது காட்டம். அந்த வீழ்ச்சியைப் பார்த்துக் குதூகலிப்பு. எதிரியின் எதிரி என இன்னொரு அணி மீது அபிமானம். மிகவும் புன்னகைக்க வைப்பவை. அரசியல் சூதாட்டங்களில் அவற்றால் மோசமாக பாதிக்கப்பட்டோர் இத்தனை ருசியுடன் இருப்பது நகை முரண்.
ஜெயமோகனின் அனுபவம் எனக்கும் வாய்த்தது. ஒரு வாரம் முன் நான் கேரளாவுக்கு ஒரு மங்கள நிகழ்ச்சிக்கு முதல் கட்ட பேச்சுக்காகப் போயிருந்தேன். இரண்டு மணி நேரம் பேசி ஒரு கட்டத்தை எட்டி சுமுகமாக அந்தப் பேச்சு முடிந்ததும் , கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தமிழக அரசியல் பற்றிப் பேச்சு அவர்கள் ஆர்வத்துடன் கேட்டதால். சுருக்கமாகச் சொல்லி விட்டு காமராசர் என்று ஒரு பெரியவர் இருந்தார் அவரே நாங்கள் பெருமைப்படும் நேர்மையாளர் என்றும் அண்ணாதுரை பற்றியும் கூறினேன். அவர்களுக்கு இருவரைப் பற்றியும் தெரியவே இல்லை.
(image courtesy: sify.com)