திருமணம் என்னும் தவறான முறையை ரத்து செய்வோம் – காணொளி
மிராவ் மிச்செலி இஸ்ரேல் பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் புள்ளி. ‘திருமணம் மனைவியாகிறவருக்கு மிகவும் சங்கடமானது. இதன் மாற்றாக எந்த ஒன்றும் நன்மை பயக்கும் ‘ என்னும் பொருட்பட அவர் பேசியிருக்கும் உரையின் காணொளி மேலே இருப்பது. அதன் மீது சொடுக்க அந்த உரையைக் கேட்கலாம்.
இந்தியாவின் சூழலில் மனைவிக்கு அவர் குறிப்பிட்ட எல்லாச் சங்கடங்களும் உண்டு. மறுபக்கம் கணவன் மனைவி இருவருக்குமே ‘பரஸ்பர விவாகரத்து ‘ ஒப்பானது இல்லை என்றால் விவாகரத்து கிடைப்பதே மிகவும் சந்தேகமானது.
கணவனும் மனைவியும் காலமெல்லாம் சிறிய பெரிய வழிகளில் ஒருவரையொருவர் வார்த்தைகளால், செயல்களால் காயப் படுத்தி ‘குரூரச் சந்தோஷம்’ அடைவது மட்டுமே ஒரே வடிகாலாய் இருக்கிறது.
மத உணர்வு மிகுந்த சமூகம் நம்மை ஏற்க ஒரே ஒரு துருப்புச் சீட்டாகத் திருமணம் இருக்கிறது. ஆணை அண்டி வாழ்வதாக முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நிறையவே தர இயலும். தன்மானம் விரும்பியோ அல்லது உரிமைக் குரலில் நம்பிக்கை உள்ளவரோ திருமணத்தில் இருந்து பெற எதுவுமே இல்லை. ஊனம் சுமந்து வாழும் கட்டாயமே அவருக்கு.
இந்த உரையை நாம் முகச் சலிப்புடன் நிராகரிக்கலாம். ஆனால் வேறு வழியில்லாமல் அடைபட்டுக் கிடக்கும் சிறையே திருமணம் என்னும் உண்மை நமக்கு உள்ளூர உறுத்துவதே.