24X7 – பரபரப்பு என்னும் நோய் – சமஸ் கட்டுரை
17.2.2017 அன்று ‘தமிழ் ஹிந்து’ நாளிதழில் சமஸ் எழுதியுள்ள கட்டுரை நம் எல்லோரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் பரபரப்புச் செய்தி தேடும் நோய் பற்றியது. இந்தக் கட்டுரையின் சிறப்பு என நான் கருதுவது அவர் ஒரு ஊடகத்தில் பணிபுரியும் நிலையிலும் ஊடக நிர்வாகங்கள் மற்றும் அவர்கள் மக்களின் விருப்பத்தின் பின்னே போகும் நிலைப்பாடு இவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————–> இது.
ஒரு காட்டமான கட்டுரையை வெளியிட்டிருக்கும் தமிழ் ஹிந்து கண்டிப்பாகப் பாராட்டுக்குரியது. அவர் கட்டுரையின் ஒரு பகுதியை நாம் பார்ப்போம்:
————————————
அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் தொடர்ந்து, சென்னையில் ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் எவ்வளவு துச்சமாக அணுகப்பட்டன? இதே சென்னையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் எவ்வளவு பரபரப்பாக அணுகப்பட்டது? இதெல்லாம் நம் மனசாட்சியின் முன்னின்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். பிரச்சினைகள் அல்ல; அந்தந்த நேரத்தின் பரபரப்புக்கான தேவைதானே ஊடகங்களை வழிநடத்துகிறது?
தமிழகத்தின் வறட்சி தொடர்பில் ஒரு தொடரை ‘தி இந்து’வில் திட்டமிட்டோம். தொடர்ந்து, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பில் தொடர் கட்டுரைகள் வெளியிடத் திட்டமிட்டோம். மக்களின் கவனம் முழுக்க அதிமுக உட்கட்சி சண்டையில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது அவை வெளியானால், எதிர்பார்க்கும் எந்தத் தாக்கத்தையும் சமூகத்தில் உருவாக்காது என்று கருதி இப்போது தள்ளிவைத்திருக்கிறோம். காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் முன்னத்திஏர்களாக உருமாறிவிட்ட நிலையில், மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்பப் பின்னத்திஏர்களாகப் போக வேண்டிய நிலைக்கு அச்சு ஊடகங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றன.
பிரெஞ்சு சிந்தனையாளர் பியர் பூர்தியு ஒன்று சொல்வார், “காட்டுவதன் மூலம் மறைப்பது.” ஒன்றை மறைப்பதற்காக மற்றொன்றைக் காட்டுவது ஆளும் அமைப்புகளின் உத்தி. பரபரப்புக்காக ஊடகங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி, மக்களின் கவனத்தையும் அதிலேயே உறைய வைக்கும்போதும் அதுவே நடக்கிறது. நாட்டின் ஏனைய முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பல இருட்டடிக்கப்படுகின்றன. மேலும், இவர்கள் திரும்பத் திரும்பக் காட்டும் அந்தப் பிரச்சினையிலும்கூடச் செய்தியைத் தாண்டிய உள் அரசியல் நோக்கி இவர்களால் விவாதத்தைக் கொண்டுசெல்ல முடிவதில்லை.
———————————
சமஸ் தனிப்பட்ட கருத்தாக மட்டுமே இதைக் கொள்ள முடியும். ஊடகங்கள் எது எளிய வணிக உத்தியோ அந்த வழியில் போகின்றன என்பது வெளிப்படையானது. சமஸ் கட்டுரையைப் பார்த்து எல்லா ஊடகங்களுமே ஒரே நாளில் சமூக முக்கியத்துவமுள்ள விஷயங்களுக்கே முதலிடம் என்று முடிவு செய்கின்றன என்று வைத்துக் கொள்ளுவோம். இரண்டு தடைகள் வரும்:
முதலாவது – சமூக ஊடகங்கள் தொடங்கி, தனிப்பட்ட உரையாடல்களிலும் தொடரும் வம்புக்கு அலையும் மக்களின் வியாதி.
இரண்டாவது – ஊடகங்களில் பணி இல்லையோ, பொது வாழ்வில் இருக்கிறாரோ பெரிதும் கொண்டாடப்படுவோரில் யாருக்குமே சரியான வாசிப்பு கிடையாது. விவாதங்கள் வழி சிந்திக்கும் சமூகம் உருவாக வேண்டும் என்னும் ஆசையும் கிடையாது. கருத்துச் சுதந்திரத்தின் மீது எந்தப் பற்றும் கிடையாது.
(image courtesy:personal.psu.edu)