சூஃபி கவிதைகள் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்
என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளிவந்த பாரசீகக் கவிஞர் ரூமியின் ‘தாகம் கொண்ட மீனொன்று’ கவிதைத் தொகுதியை முன் வைத்து நமக்கு சூஃபி தத்துவத்தையும் கவனப் படுத்துகிறார் எஸ். ராமகிருஷ்ணன். அவரது பதிவின் மைய பகுதி இது :
————————-
சூஃபிக்கவிதைகள் நான் அற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. என், எனது என்ற. இருத்தலை பிரபஞ்ச ரீதியாக ஒன்றிணைக்கின்றன.
ஜென் புத்தமரபில் koan எனப்படும் புதிர்களுக்கு முக்கிய இடமிருக்கிறது. இந்தபுதிர்களை அவிழ்க்க முற்படுவது சீடர்களின் வேலை. தீர்க்கமுடியாத பெரும்புதிர் நமது பிறப்பு. அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஞானத்தேடலை விடை. ஒரு புதிரை யோசிக்கச் செய்து அதன் வழியே யோசனைகளே அற்றுப்போக வழி செய்ய ஜென் முயற்சிக்கிறது. ஒரு புதிருக்கு விடை கண்டுபிடிப்பதை விட அதன் வழியே ஏற்படும் தரிசனத்தை. சடாரென நிகழும் ஒரு பிரகாசத்தைச் சுட்டிக்காட்டுவதே அதன் நோக்கம்.
இதே தூண்டுதலைத் தான் சூஃபிக்கவிதைகளும் நிகழ்த்துகின்றன. ஆனால் புதிர்களைக் கொண்டல்ல. மாறாக இன்பத்தைக் கொண்டு. களிப்பையும் சந்தோஷத்தையும். நடனத்தையும் கொண்டு. இருத்தலின் மர்மத்தைப் பேசுகின்றன.
பிரபஞ்சத்தைக் கேள்வி கேட்கும் கவிதைகள் ஒருவிதம், அவை ஏன் பிரபஞ்சம் கருணையற்றதாக, மூர்க்கமாக இருக்கிறது என விவாதிக்கின்றன. ஆனால் சூஃபிக்கவிதைகளோ பிரபஞ்சத்தை எந்தக் கேள்விகளுமற்று ஆரத்தழுவி கொள்ளுகின்றன. உலகின் வேறுபாடுகளோ, பிரிவினைகளோ வெறும் புறத்தோற்றங்கள் எனக் கருதுகின்றன. கவிதையைத் தியானமந்திரம் போன்றதாக மாற்றுகின்றன.
———————————-
அவரது முழுக்க கட்டுரைக்குமான இணைப்பு ————– இது .
பிரபஞ்சம் மற்றும் மனிதன் இணையும் புள்ளி வாசித்து புரிந்துகொள்ளப்படுவதில்லை. தேடலால் புரிந்து கொள்ளப் படுவது. சரியாக எஸ்.ரா. ஜென் சிந்தனை முறையையும் சூஃபி தத்துவத்தையும் ஒப்பிட்டுள்ளார். பௌத்தத்தில் ஜென்னும், இஸ்லாமில் சூஃபி தத்துவமும் ஆன்மிகம் நோக்கி விரிபவை.
எந்த இடத்தில் அகம் அதிகாரம் இவை செயலற்றுப் போய் மனித நேயமும், மனித வாழ்க்கைப் புதிரும் முக்கியம் பெறுமோ அந்தப் புள்ளியில் ஆன்மிகத் தேடல் துவங்குகிறது.
எஸ்.ரா. கட்டுரையில் கவிதை பற்றி பல பதிவுகளை நான் பார்த்தேன். ஆர்வமானவை. ஆனால் கவிதை பற்றி அணுக்கமானவை அல்ல. கவிதை பற்றிய என் புரிதல் இது:
கவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுடன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த தரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.