தேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி
மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் உரையாடல்களைப் புரிந்து கொண்டேன். ஜெயராஜ் என்னும் இயக்குனர் 1996 ல் பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்ற படம் இது. யூ டியூபில் படத்துக்கான இணைப்பு — இது.
மிகவும் எளிய கதை. சங்கர மட்டத்தில் அடுத்த பட்டம் ஆன சங்கராச்சாரியார் (மதத்தின் தலைமைத் துறவி) தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஒரே வாரிசான பத்து வயதுச் சிறுவன் ஒரு பிராமணக் குடும்பத்தில் இருந்து தேர்வாகிறான். அவனால் தனது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, தோழி இவர்களை விட்டு இருக்க முடியவில்லை. இரண்டாம் நாளே பெரியவரிடம் அனுமதி பெற்று வீட்டுக்கு ஒடி வருகிறான். ஆனால் அவனை யாரும் ஏற்க முடியாமல் கண்ணீர் சிந்த அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். எங்கே போகிறான் என்பது தீர்மானமாகத் தெரியவில்லை.
பிராமணர்களையோ அல்லது மடங்களையோ விமர்சிக்கும் நோக்கில் இல்லை படம். வைணவ மடங்களில் அறுபது வயதான குடும்பத் தலைவரே மதத்தின் பீடத்தில் ஏறுவார். எனவே ஒட்டு மொத்த பாரம்பரியம் பக்கம் போகாமல் சைவ மடங்களில் வைதீகமான மடத்தைத் தேர்ந்தெடுத்துக் கதையைப் பின்னியிருக்கிறார். தாத்தா கதகளிக் கலைஞர். அவரது பாவங்கள் நமக்கு கதைகளின் கலை பற்றி சரியான அறிமுகம் தரும். மடத்தில் பட்டம் ஏற்கும் முன் உயிருடன் இருப்போருக்கும் தனக்கும் பின்னடம் வைக்கும் காட்சி மதத்தின் கத்தி முனையான அணுகுமுறையை நமக்குத் தெரியப் படுத்தும்.
துறவு புத்தருக்கு நிகழ்ந்தது போல் பொறியாய் மத அமைப்புக்களுக்குள் நிகழாது.
மதம் அமைப்புக்களின் அடைப்புக்களை அழுத்தமாக வைத்து ஆளும். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். நுட்பமான உணர்வுகளை திரைப்படமாக வார்த்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர்.
(image courtesy: wiki)