ஆணிகள் உதிர்க்கும் கால்கள்


(பிப்ரவரி 2017 இதழில் இந்தச் சிறுகதையை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்திய ‘தீராநதி ‘ பத்திரிக்கைக்கு என் நன்றிகள் )
கதைக்குறிப்பு
குழந்தைத் தொழிலாளிகளின் அவல வாழ்க்கை, அவர்களை வேலைக்குத் தள்ளும் குடும்பச் சூழல் ,அந்தக் குடும்பத்தின் கையறு நிலை பற்றி அக்கறையில்லாத மேல்தட்டு மக்களின் படிப்பறிவின் குறுகிய அணுகுமுறை இவை மூன்றுமே இந்தக் கதையில் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. வேலைக்குப் போகும் போது பிஞ்சுக் கைகளும் கால்களும் உலோகமாகி உழைப்பதை ‘ஒரு சிறுவனின் கால்கள் வேலைக்குப் போகும் போது காந்தமாகி ஆணிகளை ஈர்க்கிறது’ என்னும் மாய யதார்த்தம் மூலமாகவும் படித்தவர்களின் மேம்போக்கான அணுகுமுறையை ‘ஒரு பள்ளி ஆசிரியர் புத்தகம் அல்லது நாளிதழ் படிக்கும் போது பல அடி உயரமாகி விடுவார்’ என்னும் மாய யதார்த்தத்தின் மூலமாகவும் உணர்த்தி இருக்கிறேன். சட்டம் மற்றும் அரசாங்கத்துக்கும் இது பொருத்தமே. அடித்தட்டு மக்களின் வறுமை மற்றும் கையறு நிலைக்கு மாற்று நம்மிடம் இல்லை என்னும் புள்ளியில் கதை நிறைவாகிறது.
——————————-

ஆணிகள் உதிர்க்கும் கால்கள்

சத்யானந்தன்

‘டட் டட் டட் டட் டட்’

“யம்மோவ்”. பாலாஜிதான். இரும்புக் கிராதியை வீடே அதிரும்படி வேறு யார் தட்டுவார்? மரக்கதவைத் திறந்தாள். ‘மெக்கானிக் ஷாப்’ வேலை முடிந்து கிளம்பும்போதே சட்டையை மாற்றினாலும் அவன் மீது இன்னும் பெட்ரோல் வாடை.

“இவன் எங்கூட வேல பாக்குறான். சேகரு.” இவனை விட ஓரிரு வயது குறைவாய் ஒரு சிறுவன். கூடவே உள்ளே நுழைந்தான். உடனே அவன் கால், கைகளிலிருந்து பொலபொலவென சிறு ஆணிகள், இரும்புத் துண்டு துகள்கள் உதிர ஒற்றே அறையில் பாதி இடம் இரும்புக் குப்பையானது. “என்னாடா இது. தெனமும் ரோதன. இத்தையெல்லாம் கடையிலேயே தட்டிட்டி வர மாட்டே?” என்றாள் கனகா.

“எத்தினி தபா உன் கைலே சொல்வாங்க? வூட்ட உட்டு வெளியிலே நவுந்தாலே காலும் கையும் மேக்னெட் ஆயிடுது. மறுபடி வூட்டுக்குள்ளே வர்ச்சொல்ல நார்மலாயிடுது.”

“மேக்னெட்டுனா இன்னாடா?”

“காந்தம்மா. இரும்பையெல்லாம் இஸ்துக்கும்,” சொல்லியபடியே கைகளை ஒன்றோடு ஒன்றாய்ச் சேர்த்துத் தட்டினான். மேலும் துகள்கள் உதிர்ந்தன. எம்பிக் குதித்தான். கத்தையாய் கால்களிலிருந்து திப்பித்திப்பியாய் இரும்புத் தூள்கள். “கடையில் இன்னா பேஜாரு தெரியுமா? ஸ்குரு டிரைவரு ஸ்பானரு எல்லாமே வந்து ஒட்டிக்கிது. துணியைச் சுத்திக்கினு பைக் ரிப்பேரு பாக்குறேன்.

துடைப்பத்தால் கணிசமான இரும்புக் குப்பையைப் பெருக்கி அள்ளி நிமிர்வதற்குள், “யம்மா. கொஞ்ச நேரத்துல ரெண்டு பேருக்கும் சோறு வையி. இவனும் நானும் சினிமாப் போறோம்.”

“மணி எட்டாவது. ரெண்டாம் ஆட்டமா?”

“ஆமா. சீக்கிரம் போடு. நீ டிவி பாருடா,” என்று நண்பனை உபசரித்து மொட்டை மாடிக் குளியலறைக்கு விரைந்தான். கனகா வேலை பார்க்கும் வீட்டில் மீந்த பிரியாணி கொஞ்சம் தந்திருந்தார்கள். முழுவதும் இவனுக்குத் தரலாம் என்று ஆசைப்பட்டால் பங்குக்குக் ஆளைக் கூட்டி வந்து விட்டான். தோசையும் பிரியாணியுமாகத் தர முடிவு செய்தாள்.

‘டட் டட் டட் டட் டட்’

கனகா புரண்டு படுத்தாள். தொடர்ந்து சத்தம் இல்லை. பக்கத்து வீட்டில் யாராவது தட்டுகிறார்களோ? இருளில் கையால் துழாவினாள். தரை, தலையணை. சற்றே இடது பக்கம் புரண்டு கையால் துழாவினாள். நாற்று நட்டது போல உச்சிக் கற்றை முடி, அரும்பு மீசை கையில் பட்டன. அவனேதான். தான் அவனை உள்ளே விட்டுத் தாழ் போட்டதும் நினைவுக்கு வந்தது. அவன் எப்போதும் கவனமாக வாசற் கதவை சார்த்தவே மாட்டான். முதலாளி நாலு நாள் லீவு கொடுத்து ஐநூறு ரூபாயும் கொடுத்தாராம். அப்படி என்ன அவர் வீட்டில் விசேஷம் என்றால் இவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆம்பிளைப் பசங்களுக்கு வயது என்னவாயிருந்தாலும் எதையும் முழுசாக விசாரிக்கும் விவரமே இருப்பதில்லை.

ஏதோ நினைவுக்கு வந்தவளாய் அவன் முழங்காலுக்குக் கீழே தடவிப் பார்த்தாள். சடாரெனத் திரும்பிப் படுத்தான். மறுகாலின் பாதத்தை அழுத்திப் பார்த்தாள். நெளிந்தான். எலும்பும் சதையும்தான் தென்பட்டன. பதட்டம் குறைந்து நிம்மதியானாள்.

டட் டட் டட் டட் டட்’

இப்போது ஊர்ஜிதமாகி விட்டது. கதவை இவள் வீட்டில்தான் தட்டுகிறார்கள். எழுந்து கூந்தலை முடிந்து கொண்டாள். மரக்கதவை மெலிதாகத் திறந்தாள். விடியற்காலையின் மெல்லிய வெளிச்சத்தில் யாரென்று சரியாகத் தெரியவில்லை.

“நாந்தாண்டி கனகா. எம்மா நேரமாத் தட்டுறது?ஆசுபத்திரியிலே டோக்கனு வாங்ககத் தேவல?” பக்கத்துத் தெரு விமலா. அவள் மகன் சுந்தர் முன்பு பாலாஜியின் வகுப்புத் தோழன். இப்போது அவன் மட்டும் பத்தாம் வகுப்புப் படிக்கிறான்.

“உள்ளே வா விமலா. காப்பி போடுறேன்.”

“டைம் வேஸ்ட் பண்ணாதே கனகு. சைக்கிள்காரன் நமக்கு மின்னாடியே டீயோட தருமாஸ்பத்திரி க்யூவுல ரெடியா நிப்பான். நீ கிளம்பு, மல்லி வாராளான்னு பாக்குறேன்.”

மல்லிகா என்றதும் திடுக்கென்றிருந்தது. “உன் சக்காளத்தி நல்லாப் பூசிட்டாக்கா. அன்னிக்கி மீனு வாங்குறப்போ பாத்தேன். தலையில பூவோட உம் புருஷங்கூட வந்திருந்தா,” என்று நாலு பேர் எதிரே பேசி ஒரு நாள் மானத்தை வாங்கி விட்டாள்.

“ரெடியா?” விமலா மீண்டும் குரல் கொடுத்தாள். “சாயங்காலமாச்சினா காச்சக் காயிதுன்றே. கிளம்புடி சீக்கிரம்.”

பல் துலக்கும் போதே இன்று டோக்கன் வாங்கி வர ஒன்பது மணியாகி விடும் என்பது நினைவுக்கு வந்தது. பகல் பதினோரு மணிக்குப் போனால் ஒரு மணியாகிவிடும் டாக்டரம்மாவைப் பார்த்து மருந்து வாங்கி வர. நாளை போய் நின்றால் இரண்டு வீட்டு எஜமானிகளும் முகத்தை சுளிப்பார்கள். இன்றே செல்லில் ‘எத்தனை லீவும்மா உனக்கு’ என்று எரிச்சல் படுவார்கள். ஜூரம் வரத் தொடங்கும்முன் மூன்று வீடுகளில் வேலை செய்தவள்தான்.

வெளியே வந்து வீட்டை உட்பக்கமாகப் பூட்டும்போது குசுகுசுவென்று விமலாவும் மல்லிகாவும் ஏதோ பேசிக் கொண்டிருப்பது கேட்டது. இறங்கியபோது விமலா, “இவளுக்கு வாத்தியாரு யாருன்னு தெரியாமப் போனா ஒண்ணுமில்லே. பையனும் அப்பங்ககாரன் போல அழுத்தக்காரனின்னு தெரிலே.”

“என்ன வாத்தியாரு? என்ன்ன அழுத்தக்காரன்?”

“உம் மவனைப் பத்தியும் அந்தத் தமிளு வாத்தியாரப் பத்தியிந்தான் பேசுறோம்.”

“பாலாஜிதான் இப்போ ஸ்கூலுக்கே போவுலியே?”

கொல்லென்று சிரித்தார்கள் இருவரும். “இதாங்க்கா, உங்கிட்டே புடிச்சதே. வெகுளி நீ,” மல்லிகா போட்ட புதிர் கனகாவுக்கு எரிச்சலூட்டியது.

வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனமாய் நடந்தாள். “முதல்லே அந்த

வாத்தியார இவுளுக்குக் காட்டிடுவோம். ஆஸ்பத்திரியாண்டயேதானே கீது கார்பரேசன் ஸ்கூலு,” என்றாள் விமலா உற்சாகமாய்.

“அவுங்க வூட்டுல வேல பாக்குறாளே வெண்ணிலா அவ கிட்டே இந்த மாசம் வாத்தியாரு சம்சாரம் எத்தினி புடவை வாங்கினான்னு தெரியும்.”

“உனக்கு என்னடி பொறாமை அவளுந்தான் இங்கிலீஸ் ஸ்கூல்ல வாத்தியாயிருக்கா,” என்றாள் விமலா பதிலுக்கு.

“உங்களுக்காகத்தான் சார் வெயிட்டிங்க. சீக்கிரம் வந்து வண்டியை எடுத்துக்கங்க. இல்ல சார், கடையை இடம் மாத்துற மாதிரி ஒரு ப்ளான். அதான் இன்னிக்கே கடையத் திறக்கல. நீங்க சாயங்காலம் வந்தா வசதிப்படாது. ஒரு அவர்ல வந்துடுங்க,” ஜெயராஜ் முடித்தான்

“இன்னிக்கி மறுபடியும் ஓட்டல்காரன் கடையைத் திறந்துட்டான்பா. லாயர வெச்சிப் பாத்துக்கறேங்கறான்,” பக்கத்துக்கடை நாடார் பேச்சுக் கொடுத்தார். “இல்ல நாடாரு, ஓட்டல் மாதிரி வேலை இல்ல இது. பசங்களுக்கு வேலை பளகணும். வேலை நேரம் ஜாஸ்தி, அக்கம்பக்கத்துக்குப் பசங்கதான் சரிப்படுவானுங்க. எங்க வீட்டுக்கிட்டே இடம் பாத்துக்கிட்டும் இருக்கேன்.”

“மெயின் ஏரியாப்பா இது.”

“உங்களுக்குத் தெரியாததா நாடாரே. அந்த வாத்தியாரு இந்தப்பக்கந்தான் போய்ட்டு வந்திக்கிட்டு இருக்காரு.”

அன்று தமிழ் வகுப்புக்கள் குறைவு. ஓய்வு வேளையில் மூன்று தமிழ்ச் செய்தித்தாட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கையில் எடுத்தார் ஆசிரியர் முத்துசாமி. உடனே அவரது உயரம் பத்தடியானது. அமர்ந்திருந்த நாற்காலி அவரை இருத்த முடியாது நழுவி நகர்ந்தது. நின்றபடியே படித்தவர், முடித்ததும் நாளெட்டைத் தொப்பென்று கீழே போட பழைய உயரம் திரும்பியது. அமர்ந்தவர் கைப்பைக்குள் தேடி ‘கண்ணதாசனின் பாடல்களில் தத்துவம்’ என்ற நூலைக் கையிலெடுத்தார். மறுபடி பத்தடியானவர் நின்றபடியே படித்தார். பள்ளியின் நாளிறுதி மணி அடித்தபின் புத்தகத்தைக் கீழே போட்டு பழைய வடிவமாகி படித்தவற்றைப் பையில் அடைத்துக் கிளம்பினார்.

“இங்கே பாருடா.. ஒரே கடை வாசலிலே மூணு பாட்டில்,” முகம் மலர சதீழ் ‘ஷட்டர்’ மூடியிருந்த கடையின் வாசல் மேடையில் கிடந்தமூன்று பெரிய காலி போத்தல்களை முதுகுப் பையினுள் திணித்தான். பக்கத்திலேயே கிடந்த கசங்கிய ‘பிளாஸ்டிக்’ கோப்பைகளையும் ‘வாட்டர் பாக்கெட்’டுக்களையும் எடுக்கவில்லை. சதீஷின் மிதி வண்டிப் பின் இருக்கையில் இன்னும் பத்துப் பதினைந்து நாளேடுகளே மீதமிருந்தன. பாலாஜி அதைக் கையிலெடுத்துக் கொண்டு சதீஷ் கைக்கிளை மிதித்த பின் தாவி ஏறிக் கொண்டான். “ஒரு பாட்டிலுக்கு எவ்வளது தர்றாங்கடா?”

“ஒரு ரூபா. ஒரு நாளைக்கி எப்பிடியும் முப்பது தேறும் ஞாயித்திக் கிளமை, திங்கக் கிளமையின்னா மாதம் ஐம்பது அறுபது ரூபா கூடக் கிடைக்கும்.”

“ஸ்கூலுக்கு டைத்துப் போயிருவியா?”

“எங்கடா ஸ்கூலுக்குப் போவுறது. நாலு மணிக்கி எந்திரிச்சு பஸ்ஸ்டாண்டுக்கிட்டே போயி எல்லாப் பேப்பர் கட்டையும் இறக்கணும்.

மெயினு சப்ளிமெண்ட் ஃப்ரீ எதாவது இருந்தா அது அத்தனையையும் ஒவ்வொரு பேப்பருலே அடுக்கி முடிச்சி ஏஜெண்டு எண்ணித் தர்றதுக்கே ஆறு மணியாயாயிடும். ஆறரை மணிலேயிருந்து ஏளுமணிக்குளே எந்த மாடியிலே இருந்தாலும் எல்லா வூட்டுக்கும் பேப்பர் போட்டே ஆவணும். இல்லேயின்னா பேப்பர் ஆபிஸுக்கே கம்ப்ளெயிண்ட் போயி ஏஜெண்ட் டென்ஷன் ஆயிருவாரு. அதுனாலதான் பேப்பர் போட வேண்டியதப் போட்டுட்டுத்தான் இதையெல்லாம் பொறுக்குவேன். ஆனா இது மூணும் பெரிய பாட்டில். சின்னதுக்கு ஐம்பத பைசாதான் கிடைக்கும். அதான் இப்பமே எடுத்தேன். இதையெல்லாம் பழைய பேப்பர் கடையில போட்டு வூட்டுக்குப் போவுறதுக்கு மணி பதினொண்ணாயிரும்.”

“அப்புறம் நாள் புல்லா என்னடா பண்ணுவே?”

மத்தியான சாப்பிட்டுத் தூங்கிடுவேன். எளுந்து கொஞ்ச நேரம் செல்லுல கேம்ஸ் விளையாடுவேன். அஞ்சு மணிக்+கி மேலே கொளத்தாண்ட தட்டு வண்டிக் கடைக்கி வேலைக்கிப் போவேண்டா. ஆம்லேட்டு, சாட் அயிட்டமெல்லாம் போடுவாங்க’

“பிளேட்டை களுவணுமா?”

“பிளாஸ்டிக் பேப்பரைத் தட்டுமேலே சுத்தி வெக்கணும். கஸ்டமரு சாப்பிட்ட பிறகு பேப்பரை எடுத்டுட்டு வேறே பேப்பர் வெக்கணும். பத்துல ஒண்ணோ ரெண்டோதான் களுவர மாதிரி வரும்.”

“எவ்ளோ சம்பளம்டா?”

“ஒரு நாளைக்கி அம்பது உனக்கு மெக்கானிக்கு எவ்ளோ கொடுத்தாரு.”

“மாசம் மூவாயிரண்டா”

‘ஆனா அடிப்பாரில்லே”

“அடிச்சாலும் தொளிலு கத்துக்கலாம்டா. பெரியவனானா சொந்தமா தொளிலு செய்யலாம். பஸ்ஸ்டாண்டுக் கிட்டே ஒரு ஸ்கூட்டர் மேலே டூல்ஸ் வெச்சிக்கிட்டே நிக்கிறாரே. அவருக்கு ஒரு நாள் வருமானம் என்னன்னு தெரியுமாடா?”

“எவ்ளோ?”

“ஆயிரண்டா. அவரே ஒரு தபா சொன்னாரு. அதான் நான் பேப்பர் போடறதுக்கு வர்ற யோசிக்கிறேன்.”

“இப்போதிக்கி வா. சைக்கிள் எங்க அக்காதேபோதும்.”

“கொஞ்ச நாளைக்கி வருவேன். ஆனா வேற மெக்கானிக் வேலை கெடச்சாப் போயிருவேண்டா.”

காலை ஆறு மணி. முத்துசாமி தமது இரு சக்கர வாகனத்தை விட்டு இறங்கி ‘ஸ்டேண்ட்’ போட்டு முடிப்பதற்குள் ஒரு சேரிப் பெண் அவரது சட்டையைப் பிடித்து, “ஏய் வாத்தி… ஸ்கூல்ல பாடம் எடுக்கறதோட நிறுத்து. பசங்க வவுத்தக் களுவ வேலைக்கிப் போனா அத்த ஏன்யா கெடுக்கற? எங்க வவுத்துல மண்ண அள்ளிப் போடுற.”

“அம்மா நீங்க யாரு? ஏன் தகறாரு பண்ணுறீங்க?” கருப்பாய் ஒடிசலாய் கலங்கிய விழிகளாலானவளைப் பார்த்துக் கேட்டார்.

“யோவ்.. இந்தத் தெருவுல எந்தப் பையன் என்ன வேலை பாத்தா உனக்கென்ன?” கனகா சட்டையை விடவில்லை.

“யம்மா.. என்ன கலாட்டாப் பண்றே கடையாண்ட?”

‘பேப்பர்’ கடைக்காரர் எட்டிப் பார்த்தார்.

“ஏய், கடைக்குள்ளேயே இரு. இறங்கினே மரியாதை கெட்டுப் போயிரும்,” என்றபடியே சட்டையைப்பிடித்த கையாலேயே முத்துசாமியை பின்னே தள்ளினாள். எதிர்ப்பார்க்காததால் அவர் சுதாரிக்க முடியாமல் கீழே விழுந்தார். “மவ்னே மறுபடி பேனா எடுத்துப் பெட்டிசனு கொடுத்தே. ஊட்டாண்டே வந்து உன் பொண்டாட்டிய நாறடிச்சிறுவேன்.”

“வாக்கா போவலாம். இதுபோதும் இவனுக்கு,” மல்லிகா அவள் கையைப் பிடித்து இழுத்தாள்.

“விடுறி மல்லி, சொகுசா கவர்மண்டு சம்பளம் வாங்கினா ஏளங்களைப்பாத்தா இளப்பமாப் போயிருது. சோமாறிங்க,” செருப்பைக் கையிலெடுத்தபடி, “இன்னொரு தபா எதினாச்சும் எளுதிப் போட்டே. அம்மாளே செருப்படி தாண்டா,” செருப்பைத் தூர வீசிவிட்டு மற்றொரு செருப்பை உதறி விட்டு அழுதபடியே வெறும் காலுடன் நடந்தாள்.

மல்லிகா திரும்பி, “வாத்தி… எங்க ஜனம் எல்லாம் வந்திச்சி,.. நீயும் உம் பொண்டாட்டியும் ஊரை உட்டே ஓடிருவீங்க,” எச்சரித்து விட்டு கனகாவின் தோளைப் பற்றியபடி நகர்ந்தாள்.

கோயில் வாசலில் பூ விற்பவள், செய்தித்தாள் வாங்க வந்த லுங்கி- பேண்ட்-வெள்ளைசட்டை-டீ சர்ட் , டீக்கடைக்காரர் பேப்பர் போடும் பையன்கள், டீக்கடைக்காரர், தெரு பெருக்கும் ஆயாக்கள் எனப் பெரிய கூட்டமே கூடி விட்டது.

முத்துசாமி சுதாரித்து எழுந்தார். சட்டையெல்லாம் அப்பியிருந்த தெருப்புழுதி அவர் தட்டியும் போகவில்லை. எதுவுமே நடக்காதது போலக் கடைக்குள் சென்றார். கடைக்காரர் வழக்கமாக அவர் வாங்கும் மூன்று தமிழ் நாளிதழ்களைக் கொடுத்துக் காசு வாங்கிக் கொண்டார்.

வீதியில் இறங்கிய முத்துசாமி வண்டியின் மீது இரண்டு நாளேடுகளை வைத்து மூன்றாவதைப் பிரிக்கும் போதே கையில் அச்சுப் பிரதி என்ற எச்சரிக்கை உள்ளே மணி அடித்தது. உயரம் நீண்டு சில நொடிகளில் பத்தடி ஆகிவிடும். கடையை ஒட்டிய விளக்குக் கம்பத்தில் உள்ள ‘ஒயர்களில் இடிக்காமலிருக்க சட்டென நகர்ந்தார். தொடர்ந்து பெரிய செய்திகளை வாசித்தார். நிமிடங்கள் கடந்துமஉயரம் அப்படியே தான் இருந்தது. கூடவே இல்லை.

(image courtesy:theeranadhi)

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s