அசோகமித்திரனுக்கான நினைவேந்தல் கூட்டம்
படத்தில் உள்ள எல்லா எழுத்தாளர்களும் வராவிட்டாலும் நிறையவே வந்து தமது அஞ்சலியைப் பதிவு செய்தார்கள். நவீன விருட்சத்தின் ஏற்பாடு மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு அஞ்சலி தனிப்பட்ட முறையில் அமரரானவருடன் இருந்த தருணங்கள் பற்றி நினைவு கூர்வது இயல்பான ஒன்றே . மறுபக்கம் படைப்பாளி பற்றிய அவரது படைப்பு பற்றிய பகிர்தல் மட்டுமே அவருக்கு செய்யும் அஞ்சலியை நிறைவு செய்யும். இதை இந்திரா பார்த்தசாரதி உரையில் காண முடிந்தது எனக் கேள்விப்பட்டேன். அலுவலக வேளை பளுவால் நான் தாமதமாகப் போனேன். நான் போன பின்பு மனுஷ்யபுத்திரன் மற்றும் ஜெயந்தி சங்கர் இருவரது உரையில் படைப்பு பற்றிய ஒரு நல்ல பார்வை கிடைத்தது. அநேகமாக பேசிய எல்லோரும் அவரது பரிவு மற்றும் நகைச்சுவை பற்றிக் குறிப்பிட்டார்கள். அதனால் இறுக்கம் இல்லாத ஒரு கூடல் ஆக அது அமைந்தது. அசோகமித்திரன் நம்மோடு ஒரு நிமிடம் பேசினாலும் அதில் நகைச்சுவை மிகுந்த ஒரு குறிப்பு இருக்கும். மேடையிலும் அப்படித்தான் பேசுவார். மனதில் ஓன்று வைத்துப் பேசுவது அவரது இயல்பல்ல. ஆனால் நுட்பமான ஓன்று உள்ளே இருக்கலாம். நேற்றைய மாலை அவரைப் பற்றிய பல நினைவுகளை நம்முள் எழுப்புகின்றன.பரிவும் நட்புமான அவருக்கு அஞ்சலி செலுத்திய அந்த நிகழ்வு நேற்று நட்பு மிகுந்த ஒரு மாலையாகவும் சம்பிரதாயமற்ற ஒரு அமர்வாகவும் அமைந்தது பொருத்தமானதே. ஜெயந்தி சங்கர் தவறுதலாய் தமது உரையில் அசோகமித்திரனுக்கு பதிலாக மனுஷ்ய புத்திரன் என்று குறிப்பிட்டதை எல்லோரும் மனுஷும் புன்னகையுடன் எடுத்துக்கொண்டதும் அவருடைய இயல்பான ஒன்றே.