அரசியல்வாதிகளால் விவசாயிகள் பிரச்சனைகள் தீராது
விவசாயியின் கண்ணீரை ஓட்டாக மாற்றுவது தவிர அரசியல்வாதிக்கு விவசாயி மற்றும் கிராமப்புற மக்கள் பிரச்சனைகள் மீது எந்த அக்கறையும் கிடையாது. 70 ஆண்டுகளில் எந்த அரசியல்வாதியும் இதைக் கண்டு கொள்ளாதது வெளிப்படை.
விவசாயிகள் பணம் கேட்டுப் போராடவில்லை. அவர்கள் மண்ணையும் விவசாயத் தொழிலையையும் நேசிப்பவர்கள். அவர்களுக்கு அதைத் தொடர முடியாத போது ஆற்றாமையும் வருத்தமும். அவர்கள் லாபமில்லாத ஒன்றைச் செய்தே வாழ்பவர்கள். நீர் பற்றாக்குறை, விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை. இந்த இரண்டுமே அவர்கள் போராடக் காரணம்.
உள்ளாட்சி அமைப்புக்கள் அவர்களுக்கு நேரடி சந்தையை ஏற்படுத்தித் தர வேண்டும்.அரசு கொள்முதல் விலை வெளிப்படையான நல்ல விலையாக இருக்க வேண்டும். இடைத் தரகர்கள் பெருமளவு பயனடைந்து விவசாயி தற்கொலை செய்து கொள்வது நிற்கும். கடனாக அவர்களுக்கு குறைவான பணமே தர வேண்டும். விதைகள், பாசனம் செய்ய மின்சாரம் மற்றும் தண்ணீரை கட்டுப்படியாகும் விலையில் அவர்களுக்குத் தரலாம். ஆனால் அதை வறட்சி காலத்தில் ஒரு விதமாகவும், நல்ல மழை பெய்யும் காலத்தில் வேறு விதமாகவும் பண மதிப்பிட்டுத் தர வேண்டும். இதை நான் குறிப்பிடுவது அவர்கள் பிச்சைக் காரர்களாக இல்லாமல் ஒரு
புரிந்துறவில் பயனடையும் தொழில் முனைவோராக இருக்க வேண்டும் என்பதற்காக.
நகரப் பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மரம் நடுதல் முற்றிலும் விவசாயிகள் ஒப்பந்ததாரர் ஆகும் விதமாக சட்டம்
வேண்டும். ஒவ்வொருவரும் மாதம் பத்து மரங்கள் நடுவதில் முனைப்புக் காட்ட வேண்டும்.
மாற்று விவசாயப் பயிலரங்குகள் எல்லா மாவட்டத்திலும் வருடம் முழுவதும் நடக்க வேண்டும்.
ஒவ்வொரு எம் எல் ஏ எனப்படும் சட்ட மன்ற உறுப்பினர் தனது தொகுதியில் உள்ள எல்லா கிராமங்களின் விவசாயக் குழுக்களை மாதம் பதினைந்து நாட்கள் சந்திப்பது கட்டாயமாக்கப் பட வேண்டும்.
நகர்ப்புற எம் எல் ஏ மாநிலம் முழுதும் நடக்கும் பயிலரங்குகள் மற்றும் நேரடி சந்தைக்கு மாதம் பதினைந்து நாட்கள் ஒதுக்க வேண்டும்.
முதலமைச்சர் தினமும் நீர்நிலை தூர்வாருதல் மற்றும் சீமைக் கருவேலன் அழிப்பு மற்றும் மரம் நடுதல் பற்றி ஒரு மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசித்து மெத்தனமில்லா நீர்ப் பாதுகாப்புக்கு வழி செய்ய வேண்டும்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
(image courtesy:mytimesnow.com)