கவண் திரைப்படம் – ஊடக தர்மத்தை நினைவூட்டும் வணிக சினிமா
முதலில் ‘பத்திரிக்கை தர்மம்’ (Journalism ethics) என்ற அறம் மட்டுமே புழக்கத்தில் இருந்தது. தொலைக்காட்சி , வலைத்தளங்கள் மற்றும் சினிமா ஆகிய ஊடகங்கள் வந்த பின் ‘ஊடக தர்மம்’ (Media ethics) என்னும் விழுமியம் பேச்சளவில் இருக்கிறது. 1976 வரை ஊடகம் அரசின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு அடங்கி இருந்தது. 1977 ஜனதா ஆட்சிக்குப் பின் சுய கட்டுப்பாடு ஒன்றே அரசின் எதிர்பார்ப்பு. தேர்தல்களின் பொது பணம் பெற்று செய்தி வெளியிடும் வியாபாரம் தேர்தல் ஆணையத்தால் கவனிக்கப்படும் அளவு வளர்ந்துள்ளது. ஓர் ஆளின் அல்லது கட்சியின் பிம்பம் கட்டமைக்கப் படுவது சர்வ சகஜமான காலம் இது. அது ஒரு வியாபாரம்.
அழகு சாதனங்கள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் மிகவும் லாபம் கொழிக்கும் சந்தைப் பொருட்கள். குழந்தைகளுக்கான பாட்டுப் போட்டிகள் இந்த வணிகத்தை மைய படுத்தி தொலைக்காட்சிகளுக்கு பெரும் செல்வம் சேர்ப்பவை. அதன் ‘நீதிபதிகள்’ பற்றி ‘கவண் ‘ திரைப்படம் சித்தரிப்பவை சிந்தனைக்கு உரியவை. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் பெண் ஒரு பரப்புச் செய்திக்கான கச்சப் பொருளாகிறாள். திரைப்படம் இதை அரச சீற்றத்துடன் நம் முன் வைக்கிறது. கற்பு, கற்பழிப்பு என்னும் சொற்கள் பெண்ணின் உடலின் மீது உள்ளஆணாதிக்கத்தின் அடிப்படையிலானவை. அதைத் தவிர்த்திருக்க வேண்டும் திரைப்படக் குழு .
கவண் ஒரு வணிக சினிமா. திருப்பங்களும், அடுத்து என்ன என்னும் திகிலும் உள்ள வேகமான படம். ஒரு தொலைக்காட்சி நிறுவனம் பெரிய வில்லனாகச் சித்தரிக்கப்படும் கரு ஒன்றைத் தெளிவாக்குகிறது. எந்த அளவு ஊடகங்களின் வியாபாரம் அந்த நிறுவனங்களின் தராதரத்தைப் பற்றி மோசமான கருத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதே அந்தத் தெளிவான செய்தி.
வணிகம் தாண்டி ‘ஊடக தர்மம்’ பற்றிய எதிர்பார்ப்பும் எச்சரிக்கையுமான படம் இது. பாராட்டுக்கள்.