தேவதச்சனுடன் மனுஷ்- எஸ்ரா நேர்காணல்
தேவதச்சன் யார்? என்ற கேள்வி கூட வாசகரிடம் எழலாம். ஏனெனில் தமிழில் கவிதைக்குத் தரப்பட்டிருக்கும் இடம் அது தான். வர்ணனைகளும் வார்த்தைச் சங்கிலிகளுமான சினிமா பாட்டு எழுதும் ஆட்கள் கவிதையை மலினப்படுத்தி, நவீன கவிதையை வாசகரிடமிருந்து அந்நியப் படுத்தி விட்டார்கள். எனவே தேவதச்சன் பற்றிய ஒரு அறிமுகமாக எனது இந்தப் பதிவை வாசிக்கலாம். இணைப்பு —————- இது.
எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் மனுஷ்யபுத்திரன் இருவரும் ஒரு நீண்ட நேர்காணல் வழியாக நமக்கு நவீன கவிதை மற்றும் தேவதச்சன் இருவர் பற்றிய புரிதல் நிகழ ஒரு புத்தக வடிவிலான விரிவான நேர்காணல் செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியை எஸ்.ரா நம்முடன் பகிர்கிறார். அதற்கான இணைப்பு ———– இது.
தமிழில் கவிதைகள் கவனம் பெறவில்லை என்பது இது உரையாடலில் குறிப்பிடப்படுகிறது. கீழ்க்கண்டவாறு :
எஸ்.ரா. : கவிதை எழுதுகிற அளவிற்கு அது குறித்துத் தீவிரமான உரையாடுபவர்கள் குறைவாக இருக்கிறார்களே. கவிதை குறித்த விமர்சனம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா ?
தேவதச்சன் : அது உண்மை தான். கவிதைகள் குறித்து ஞானக்கூத்தன். பிரமீள், பிரம்மராஜன் போன்றவர்கள் தீவிர உரையாடல்களை உருவாக்கிறார்கள். குற்றாலம் கவிதை பட்டறை நல்ல உதாரணம். இப்போது கவிதை குறித்த உரையாடல்கள் தனிச் சந்திப்பில் நடைபெறுகிறதே அன்றிக் கூடி விவாதிக்கபடுவதில்லை. இந்திய கவிதையுலகில் தமிழ் கவிதையின் இடம் என்னவென்று யாரும் யோசிப்பதில்லை. உலகமயமாக்கலின் விளைவாகக் கவிதையில் என்ன மாற்றங்களை நடந்திருக்கிறது என யாரும் விவாதிப்பதில்லை. கவிதைகள் குறித்து பேசுவதற்கு நிறைய தேவையிருக்கிறது
————————————-
இந்த உரையாடல் முழு நூலின் ஒரு பகுதி தான். இருப்பினும் கவிதையின் முக்கியமான அடையாளமான ‘காட்சிப்படுத்துதல் பற்றி தேவதச்சன் குறிப்பிடுவது முக்கியமானது. ஒரு காட்சி நிகழ்த்தும் தாக்கம் கவிஞனுக்கு முற்றிலும் வேறானது. காட்சிப்படுத்துதலின் வழி வாசகரை கவிஞர் கற்பனையின் சிறகடிப்புடனான வாசிப்புக்கு இட்டுச் செல்லும் அளவு கவிதை நவீனமாய் புதிய தடத்தில் பயணிக்கிறது.
இந்த உரையாடல் நூலின் வலி பெரு நிகழ்வுகள் மற்றும் நுண்நிகழ்வுகள் இரண்டு பற்றிய புரிதல் நமக்கு நிகழ்கிறது. தேவதச்சன் சிந்தனை கீழே :
எஸ்.ரா. :உங்கள் கவிதைகளில் குற்றநிகழ்வை யாரோ வேடிக்கை பார்க்கிறார்கள். திடுக்கிடுகிறார்கள். ஒதுங்கிப் போகிறார்கள. நீங்கள் குற்றத்தைச் சமூக நிகழ்வாக மட்டும் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. புறநிகழ்வுகளைக் கவிதைகள் எப்படி எதிர்கொள்கின்றன. பதற்றமுற்ற மனிதனின் குரலில் உங்கள் கவிதை ஒலிப்பதை பற்றி சொல்லுங்களேன்.
தேவதச்சன் : செவ்வியல் இலக்கியங்கள் மகத்தான வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது நவீன இலக்கியங்கள் நுண்ணிகழ்வுகளை எழுத துவங்கின. நுண்ணிகழ்வு எது என்றால் சமூகத்தினுடைய வலைப்பின்னல்களால் இணைக்கப்படாமல் உதிரிகளாக இயங்குகிறார்கள் அல்லவா? அவர்களுக்கு நடக்கின்ற எல்லாவற்றையும் நுண்ணிகழ்வு, அதாவது micro events என்று சொல்லலாம்.
நவீன கவிதைகள் தனது தொடக்கக் காலத்தில் புறநிகழ்வுகளை நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கியது. அதன் விளைவே உரத்தகவிதைகள்.. இன்று நிகழ்வுகள், நுண்ணிகழ்வுகளாகத் தம்மைப் பிரித்து அடையாளம் கொள்ளத் தொடங்கின. இந்த நுண்ணிகழ்வுகள் உலகம் பற்றிய நமது பார்வையை அடியோடு மாற்றியமைக்கின்றன.
உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலும் இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடுகிறது.
வரலாற்றிலிருந்து வரலாறின்மைக்கு நகரத் தொடங்கிவிட்டது இவ்வுலகம். இனி, பௌதீக உலகில் வரலாறு கிடையாது. இனி வரலாறு நமது மன அமைப்பில் மட்டுமே இயங்கத் தொடங்கும். இன்றைய கவிதை, நம்மை வரலாற்றின் சுமையிலிருந்து விடுவிக்கிறது. வரலாறு தன் கனத்தை இழக்கத் தொடங்குகிறது.
நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாகப் பெருகுவதை வரலாறு என்றும், பெரு நிகழ்வுகள் நுண்ணிகழ்வுகளாகக் கூர்மையடைவதைக் கவிதை என்றும் கூறலாம்.
நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாக விரிவடையும்போது, கவிதை அதை நுண்ணிகழ்வுகளாக மட்டுமே வைத்திருக்கிறது. அது, அதன் இயல்பு போலும். இந்த நுண்ணிகழ்வுகள் வரலாறுக்கும் தத்துவத்துக்கும் வெளியில் இருக்கிறது. சமூகத்தில் இந்த நுண்ணிகழ்வுகளால் மெல்லிய மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. இந்த நுண்ணிகழ்வுகள், அன்றாடம் என்ற ஒன்றில்லை என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருக்கின்றன.
சமூகத்தின் நுண்ணிகழ்வுகள், தனிமனிதனின் வாழ்வில் பெருநிகழ்வுகளாக அதிரக் கூடும். உதாரணமாக, ஒரு தனிமனிதன், தனது தனித்தன்மையை observe பண்ணும்போது அது பெருநிகழ்வாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், அவனது கருணையுணர்வு, பெருநிகழ்வாக மாறும்போது இன்றைய காலத்தில் அது ஜனநாயகமாக ஆகிறது
—————————————————
தேவதச்சனின் ‘ பெரு நிகழ்வுகள் மற்றும் நுண்நிகழ்வுகள்’ பற்றிய அணுகுமுறை நமக்கு விசித்திரமாய் மட்டுமே இருக்கும். ஏனெனில் நாம் சமூகத்தில் நிகழும் எதையும் அதன் எல்லாப் பரிமாணங்களுடன் காண முயல்வதில்லை. ஜாதி, வர்க்கம், மதம், பால், வயது, கர்வம் என்னும் எல்லைக் கோடுகளைத் தாண்டி நாம் சிந்திப்பதே இல்லை. அதனாலேயே சமூகத்தின் பிரச்சனைகள் நமக்கு அந்நியமாய்த் தெரிகின்றன. ஒரு குற்றம் எனக்கு அந்நியமாய் இருக்கிறது. நான் நல்லவருள் ஒருவன். குற்றவாளியோ கெட்டவர்களில் ஒருவன். எந்த மனப்பாங்கு இந்தப் பாரம்பரியம் குற்றம் மற்றும் வன்முறை மற்றும் சுரண்டலை சாஸ்வதமாக்கியதோ அதில் நான் ஊறியவன்.
கவிதை பெரிய மலையில் ஒரு துளியாய்த் துளைத்து அதன் அடி வரை செல்லும் அற்புதமான கூர்மையும் வீச்சும் கொண்டது.
நூல் வடிவத்தில் இந்த உரையாடலை வாசிக்க நாம் ஆவலுடன் காத்திருப்போம்.
(image courtesy:sramakrishnan.com & madhuram.org)