+2ல் ‘ரேங்க்’ முறையை நிறுத்திய உதய சந்திரன் ஐஏஎஸ்
+2 என்னும் வகுப்பு, தேர்வு மற்றும் அதன் முடிவு பெரும்பான்மைக் குழந்தைகளுக்கு -அவர்களின் பெற்றோருக்கு- கொடுங்கனவே. மனப்பாடம் செய்து, பழைய வருடங்களின் கேள்விகளைப் பல முறை எழுதிப்பார்த்து நல்ல மதிப்பெண்ணும் ‘ரேங்க்’ என்னும் தரவரிசையில் நல்ல இடத்தையும் பிடிக்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். பலசமயம் பந்தயக் குதிரைகளாக விரட்டப் படுகிறார்கள். பரீட்சை முடிவு தெரியாமலேயே தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் பலர்.
+2 படிப்பு, மேற்கல்வியில் தொழில்நுட்பப் பாடங்களை படிக்க ஒரு நல்ல அடித்தளம். மனப்பாடம் செய்யாமல், முக்கிய சூத்திரங்கள் எதற்கு, அதை எப்போது எப்படிப் பயன் படுத்த வேண்டும் என்னும் அணுகுமுறை குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் மற்றும் கல்வி முறையால் தரப்படுவதே இல்லை. மனப்பாடம் செய்யும் கிளிப்பிள்ளைகள் எவ்வளவு தூரம் மேற்கல்வியில் பிரகாசிக்க இயலும்?
பல்லாண்டுகளாக இருந்து வந்த இந்தக் குதிரைப் பந்தய முறையை மாற்றியவர் உதய சந்திரன் ஐஏஎஸ் என எஸ்.ராமகிருஷ்ணன் பதிவிலிருந்து அறிந்தேன். “போட்டித் தேர்வுக்கு தயாராகி விடாதே. மனப்பாடம் செய் – மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம் ” என, தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் பட்டாளம் குழந்தைகளை தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளும் பொது உதய சந்திரன் விடிவெள்ளியாக முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள். எஸ்ரா பதிவுக்கான இணைப்பு ————- இது
தமிழ் நாட்டுக்கு குழந்தைகளுக்கு உண்மையிலேயே நல்லகாலம் போல. அண்ணா பல்கலைக்கழகம் +1 வகுப்புக்குப் பொதுத் தேர்வு வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. ஏன் ? அடுத்த பதிவில்.