மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -1
முதலில் தமிழ் ஹிந்து நாளிதழில் சமஸ் கட்டுரைக்கான இணைப்பு —— இது. நக்சல் இயக்கம் தோன்றி ஐம்பது ஆண்டுகளாகிய தருணத்தில் இந்தக் கட்டுரை வெளியாகிறது.
ஆயுதம் இல்லாமல் ஒரு கோட்பாட்டால் மக்களின் நலனைப் பாதுகாக்க முடியாதா? மாற்றுக் கருத்துடன் விவாதித்து மோதி மக்கள் மனதில் ஆழப் பதிய முடியாதா ?
கம்யூனிசத்தின் சாராம்சமாக “உழைப்பாளிக்கு அவனுக்கு உரிய ஊதியம் மற்றும் இடத்தைக் கொடு.சமத்துவம் என்பது மக்களுக்காக அரசாங்கம் உறுதி செய்ய வேண்டியது ” என நாம் கொள்ளலாம். விளிம்பு நிலை மக்களுக்கு அரசு மட்டுமே நீதி வழங்க முடியும் என்னும் கம்யூனிச கருத்து என்றும் நிலைக்கும்.
எதிர் துருவமாக வலது சாரிகள் முன் வைப்பது “வலிமையையும் கனவும் உள்ளவன் மேலே வருவான். அவன் வேலைகளை வாய்ப்புக்களை உருவாக்குவான். நீ அவன் பின் செல் ” என்பது. அரசாங்கம் அதிகம் தலையிடாத மக்கள் நலன் மற்றும் அவர்களுக்கான வாய்ப்புக்கள் என்பது கனவே. எளிய உதாரணம் அமெரிக்காவில் அந்த மண் மக்களுக்கே தனியார் வேலை தர எந்த முனைப்பும் கொள்ளவில்லை. வெளி தேசத்து மூளைக்கூலிகள் போதும் என அவர்கள் முடிவிலிருந்தார்கள் . டிரம்ப் அவர்களைத் தட்டிக் கேட்டது திருப்பு முனை.
இந்தியாவில் ஜாதி மற்றும் வறுமை என இரு முனைத் தாக்குதல் விளிம்பு நிலை மக்கள் மீது. இங்கே கம்யூனிசத்தின் தேவை உலகின் எந்தப் பகுதியை விடவும் அதிகம். ஆனால் ஏன் கம்யூனிசம் இங்கே தன்னை
நிலை நிறுத்திக் கொள்ளவில்லை ?
சமத்துவத்தை அரசாங்கம் உறுதி செய்வதும், ஒரு கட்சி ஒரு சிந்தனை மட்டுமே ஆட்சி செய்யும் என்னும் அரசியல் கட்டமைப்பினால் மட்டுமே கம்யூனிசம் கனவாக நின்று விட்டது. ஜனநாயகமும் கம்யூனிசமும் ஒன்றாக இருக்கவே முடியாது என்ற போக்கு வலது சாரி அல்லது முதலாளித்துவ சிந்தனைக்கு உதவியாகி விட்டது.
ஆனால் கம்யூனிசம் எடுத்துக் கொண்ட இரு பெரிய கேள்விகள் இன்னும் விடை இல்லாமல் இருக்கின்றன: ஒன்று தொழிலாளிகளின் உரிமைகள் மற்றும் நல வாழ்வு சம்பந்தப்பட்டது. மற்றது வர்க்கங்களாக இருக்கும் சமூக அடுக்குகளுக்கு இடைப்பட்ட மிகப் பெரிய இடைவெளி. இதை கம்யூனிச அணுகுமுறை இல்லாமல் ஆராய்ந்தாலும் நமக்கு “திட்டவட்டமாக என்றுமே நிலைக்கும் ஏற்றத் தாழ்வைப் போக்க ஏன் நாம் முனைவதில்லை’ என்று மனதுள் கேள்வி எழும். அரசு இயந்திரம் மட்டுமே நிலையாக மக்கள் நலனை உறுதி செய்ய இயலும். உணவு, உடை, உறையுள், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் இவை யாவும் அடிப்படை உரிமைகள் என உறுதி செய்யும் கொள்கையுடைய கட்சிகளும் அரசுமே இந்தியாவின் இன்றைய தேவை.
அடித்தட்டு மக்கள் மற்றும் தொழிலாளிகளின் நலன் தொடர்பாக எந்த நம்பிக்கை தரும் பரிமாணமும் முதலாளித்துத்தில் கிடையாது. ஆனால் சுயபரிசீலனை செய்து கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகம் மற்றும் கருத்துரிமைக்கு நாங்கள் எதிரிகள் அல்லர் என்பதை இந்தியாவில் கட்சிக்கு உள்ளேயும் தமது இயங்குதலிலும் பிரதிபலித்தால் இன்று வலதுசாரி சக்திகளின் பேரெழுச்சிக்கு ஒரு சவால் இருக்கும்.
சமஸ் கட்டுரையின் முக்கியமான பகுதி தீவிர கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட் தமது ஒத்த கருத்துள்ள ஆயுதம் ஏந்தாத இடதுசாரியை எப்படி வெறுக்கிறார்கள் என்பதை கீழ்கண்டவாறு காட்டுகிறது :
——————————————————————–
சதிக் கோட்பாடு எங்கிருந்து உருவாகிறது?
வன்முறையை அடிப்படையாகக்கொண்ட ஆயுத பாணி அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் சதிக் கோட்பாடு. எல்லாவற்றையுமே சதியாகப் பார்ப்பது. அடிப்படையில் மனிதர்களின் நல்லெண்ணங்கள் மீது நன்னம்பிக்கை வைக்கத் தவறுவது. உள்ளுக்குள்ளும் வெளியிலுமாக வதந்திகளையும் சதிகளையும் சதிகாரகளையும் தாங்களாகவே உருவாக்கிக்கொண்டே இருப்பது. ஆயுததாரி இயக்கங்களின் வரலாற்றைப் படித்தால், ஒவ்வொரு இயக்கமும் தமக்குள் கருத்து முரண்பட்ட எத்தனை பேரை திரிபுவாதிகள், துரோகிகள், எதிர்ப் புரட்சிக்காரர்கள், சதிகாரர்கள் என்று முத்திரை குத்திக் கொன்றிருக்கிறார்கள் என்பதை உணர முடியும். தம் சொந்த சகோதரர்கள் மீதே தாக்குதல் தொடுக்கும் இந்த மோசமான முத்திரைக் கலாச்சாரம் எப்படியோ கம்யூனிஸ இயக்கங்களில் அழிக்கவே முடியாத ஒரு வியாதியாக உறைந்துவிட்டது. இந்தியாவில் அந்த வியாதிக்கு இன்று அல்லும் பகலும் அயராது ரத்தம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்கள் நக்ஸல் ஆதரவாளர்கள்.
இவர்கள் மறைமுகமாக கம்யூனிஸ்ட்டுகள் மீது செலுத்தும் தாக்கம் அவர்கள் வழி ஏனைய தாராளவாதக் கட்சிகளையும் பீடிக்கிறது. ஆக, வலதுசாரிகளுக்கு இணையான வெறுப்பை உமிழ இடதுசாரிகளிலும் ஆட்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு தெருவில் அன்றாடம் இரவானதும் இரு மூர்க்கர்கள் நின்று கத்திக்கொண்டே இருந்தால், அவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள் எப்படி வெகுவிரைவில் அந்தத் தெருவிலுள்ள எல்லோரையும் தொற்றுமோ அப்படி இருபுறங்களிலும் ஓங்கி வளர்ந்த வெறிச் சொல்லாடல்கள் பொதுச் சமூகத்தையும் ஊடகங்களையும்கூட ஆக்கிரமிக்கின்றன.
————————————————————-
மதச் சகிப்பின்மை மிக்கவர்கள் மிகப்பெரிய காயத்தை மற்றும் இழப்பை தமது மதத்துக்கே நிகழ்த்துகிறார்கள். கோட்பாட்டில் மாறி நிற்கும் எதிரணியிடம் சகிப்பில்லாதவர்களும் அதே கெடுதலை தம் கோட்பாட்டுக்குச் செய்கிறார்கள்.
(image courtesy: India.com)