மாவோயிஸ்டுக்கள் பற்றி தமிழ் ஹிந்து , காலச்சுவடு – இரண்டு கட்டுரைகள் -2
‘கத்தார் ‘ என்னும் நக்சல் இயக்கத் தலைவர் கோயில்களுக்குப் போகிறார் என்னும் சுருக்கமான குறிப்புடன் , விரிவாக மதச்சார்பின்மை பற்றி விவாதிக்கிறார் :
—————————————-
மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டைப் பற்றிப் பேசுவது சற்றே அயர்ச்சியான அனுபவம்தான். அந்த அளவுக்கு இதுபற்றி விரிவாகவும் எரிச்சலூட்டும் வகையிலும் பேசித் தீர்த்தாகிவிட்டது. ஆயினும், அடிப்படைப் புரிதல் ஏதுமின்றியே இவை நடந்தேறியிருக்கிறது. இந்தியாவின் முதன்மையான சமூக அறிவியல் அறிஞர்கள் பலரும் பலமுறை விவாதித்த கருத்துதான்; ஆனாலும், நமது பொதுப்புத்தியில் அது ஏற்றப்படவில்லை. மத நிராகரிப்பை மதச்சார்பின்மையின் மையமாக நவீன ஐரோப்பா உருவாக்கியது. அதற்கான வரலாற்றுப் பின்புலம் அப்படி இருந்தது. பிரஞ்சுப் புரட்சியும் ஜெர்மானியத் தத்துவப் பாரம்பரியமும் ஆங்கில தொழில் புரட்சியும் ஒரு புதிய பாதையை அவர்களுக்கு வகுத்துக் கொடுத்தன. புதிய சமூக, கலாச்சார மதிப்பீடுகள் உருவாகின. அதன் தொடர்ச்சியாக உருவான கருத்தியல் அம்சமே மதச் சடங்குகள், சம்பிரதாயங்களை முற்றாக நிராகரிக்கும் ‘மதச்சார்பின்மை’ என்னும் கருதுகோள்; இது பெரும் வீச்சில் மக்களைத் தன்வயப்படுத்திக் கொண்டது. நவீன ஐரோப்பிய மனம் இப்படியாகவே உருவாகியது. இதை ஒரு சமூக மதிப்பீடாகவே மறுமலர்ச்சிக்குப் பிந்திய ஐரோப்பா ஏற்றுக்கொண்டது. பின்னாளில் காலனிய ஆட்சியின் மூலமாக உலகமெங்கும் இந்த மதிப்பீட்டை நவீனத்துவத்தின் அடிப்படையாகவே ஐரோப்பிய ஆட்சியாளர்கள் முன்வைத்தனர். ஆக, நவீனத்துவம் என்றால் தங்களது வரலாற்றையும் பண்பாட்டையும் நிராகரிப்பது மிக அவசியம் என்ற நிலைப்பாடுமீது விரிவான கருத்தொற்றுமை உருவாகியிருக்கிறது. புதிய வரலாற்றையும் கலாச்சாரச் சமூக மதிப்பீட்டையும் நவீன யுகம் உருவாக்க வேண்டியது அவசியம் என்ற அறைகூவல் எழுந்தது. சரசரவென ஐரோப்பா தன்னைத் தயார்ப்படுத்தியதோடு மட்டுமல்லாது, இதுதான் உண்மையான நவீனத்துவம் என்ற கோட்பாட்டையும் முன்வைத்தது; தங்களது ஆட்சி அதிகாரத்தின் மூலமாக மூன்றாம் உலக நாடுகளில் அதை வெற்றிகரமாகவும் கொண்டு சேர்த்தது.
ஆக, நாம் இன்று உள்வாங்கியிருக்கும் நவீனத்துவம் என்பது ஐரோப்பிய கலாச்சார, சமூகச் சிக்கல்களில் எழுந்த கருத்தியல் கோட்பாடுதான். இது நமது வரலாற்றுப் பிரச்சனை அல்ல. காலனிய ஆட்சியில் இது நமக்கான பிரச்சனையாகத் தரப்பட்டது. இன்றுவரை அதை வைத்துப் போராடுகிறோம்.
———————————————–
விவாதங்களில் நான் முன் வைப்பது நமக்குத் தேவை மதச் சார்பின்மை அல்ல. மதச் சகிப்புத்தன்மை என்னும் கருத்தே. தனது மதத்தின் மீது ஈடுபாடும் விசுவாசமும் உள்ள ஒருவன் ‘மதச் சார்பற்றேன் ‘ என்று முழங்குவதை விடவும் ஒரு நகைச்சுவை இருக்க முடியாது. ஆனால் தேவை மதச் சகிப்புத் தன்மை. அதை காந்தியடிகள் மட்டுமே போதித்தார். பஜனைகள் வழி மக்களுக்கு எடுத்துச் சென்றார். இன்று கோட்பாடு மதம் என்னும் அளவு தீவிர ககம்யூனிஸ்டுக்களை ஆட்டி வைக்கிறது.
கம்யூனிசம் அடித்தட்டு மக்களின் உண்மையான விடுதலை மற்றும் அவர்களின் வர்க்கம் உரிமைகளைப் பெறும் கனவை முன்வைப்பது. அது மக்களின் மத உணர்வுகளை மதித்து “அதற்கு எதிரியல்ல எம் கோட்பாடு ஆனால் ஜாதி மதம் மறக்க வர்க்கம் எனும் அடையாளம் ஒரு புள்ளி ” என்ற அளவில் மக்களுடன் இணைய வேண்டும். அப்போது மட்டுமே வலது சாரிகள் முன்வைக்கும் ‘வலியோன் வாழவைப்பான். நீ அவனுக்கு வால் பிடி ” என்னும் நகைச்சுவை தோலுரிக்கப்படும்.
காலச்சுவடு கட்டுரைக்கான இணைப்பு ————- இது.
(image courtesy:gettyimages.com)