குருஷேத்திரம்
–சத்யானந்தன்
காலை மணி ஆறு. கோவிலின் பெரிய இரண்டு முன்வாயிற் கதவுகளில் ஒன்று ஒருக்களித்ததுத் திறக்கப்பட்டிருந்தது. பூக்கடைகள் மூடியிருந்தன. வாகன நிறுத்த மைதானம் காலியாயிருந்தது. அதன் எதிரே பழைய கட்டடத்தில் இருந்த காவல் நிலையத்துக்குள் நுழைந்து பழகிய தோரணையில் உள்ளே போனான் பாபு.
“யார்ரா நீ ?”
“எஸ் ஐ சாரைப் பாக்கணும்“
“உம்பேரு இன்னாடா? இன்னா விஷயம்?”
“அவரு டெய்லி வரச் சொன்னாரு.“
“கொழந்தைப் பையனா இருக்க? எதுக்கு டெய்லி வரச் சொன்னாரு?அக்யூஸ்டா நீ?”
“இல்ல சார்“
“பின்ன?”
“முன்ன ஒரு தபா பேப்பர் போட்ட வூட்ல ஒரு மொபைல திருடிட்டேன்“
“ஓ, ஜூவனைல் ஹோமா ? இப்போ பரோலா?”
“இல்லே சார்..ஜுவனைல் ஜெயிலுக்கு போவுல…”
“எப்டி?”
“எஸ் ஐ சார் அப்போ அடிச்சதிலே என் கை ஓடிஞ்சி போச்சி.” வலது முன் கையை நீட்டினான். நீளமான தையல் போட்ட தழும்பு. “இதப் பாத்து அந்த ஊட்டு ஐயா கம்லெயிண்ட் திருப்பி வாங்கிக்கினாரு.“
“அப்பாலே எதுக்குடா டெய்லி வர்ற?”
“இந்த வாரம் ஒரு வேலை இருக்குன்னாரு.“
“அவருக்கு டியூட்டி டைம் லேட்டா வரும். இப்போ அவரு வர மாட்டாரு.“
“சரி சார்.“
பாபு சைக்கிளை மிதித்து, கிழக்கு மாட வீதியில் நுழைந்தான். பின் சீட்டில் நிறைய செய்தித்தாட்கள். தெற்கு மாட வீதி மூலை பிள்ளையார் கோயில் வாயிலில் காலை ஊன்றி உள்ளே நோக்கினான். விஸ்வநாதன் தென்படவில்லை. “டேய் விசு,” குரல் கொடுத்தான். பதிலில்லை.
மீண்டும் சைக்கிளை மிதித்தான் பாபு.
அனுமார் சன்னதியில் புதுத் துண்டை விக்கிரகத்துக்கு அணிவித்துக் கொண்டிருந்தான் விஸ்வநாதன். அவனுக்கு பாவுவின் குரல் நன்றாகவே கேட்டது. ஆனால் தர்மகர்த்தா கடந்த இரண்டு நாட்களாக காலை ‘ரவுண்டு’க்குசீக்கிரமே வந்து விடுகிறார். நண்பனுடன், அதுவும் பாபுவுடன், தென்பட்டால் அவனது வேலை போவது நிச்சயம். தர்மகர்த்தா வீடு அருகிலேயே தான். பல வருடங்களாக அங்கிருந்த குருக்களையே தூக்கி விட்டார்.
ராமைய்யாவுக்கு முதலில் பல தீப்பந்தங்கள் மட்டுமே தென்பட்டன. கணுக்கால் மேலிருக்கும் வேட்டி சரசரக்க நீள் வட்டமாய் நின்ற வீரர்களுள் ஒருவனை நெருங்கினார் அவர். அவனுக்கும் அடுத்தவனுக்கும் இடையே பத்தடி தாராளமாக இருக்கும். அதன் வழியே நுழைந்து மேற்செல்ல முயன்றார். இடது கையை உயர்த்தி, அப்படியே அதை அவர் நெஞ்சின் மேல் வைத்த அவன் கடுமையாக ஏதோ கூறினான். அந்த மொழி அவருக்குப் புரியவில்லை. ஆனாலும், தடுக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. “ஒரு தபா அவரைப் பாத்துட்டுப் போறேன்ப்பா.. உனக்குப் புண்ணியமாப் போவும்.” ஆனால் அவனது கை கீழிறங்கவே இல்லை.
“இங்கே நான் எப்படி வந்து சேர்ந்தேன்னே தெர்ல. கிட்டே போனா நா அவர என்ன பண்ணிடப் போறேன்?” சற்றே உயர்த்திய குரலில் அரற்றினார்.
பீஷ்மரின் இமைகள் லேசாக அசைந்தன. அவர் வலது கையை மெல்ல உயர்த்தி ஆட்டினார். அருகிலிருந்த காவலாளி அவர் உதடுகள் ஏதோ முணுமுணுப்பதை கவனித்தான். தனது வாயைப் பொத்திக் கொண்டு அவரது முகத்தருகே குனிந்து, பீஷ்மர் மெலிந்த குரலில் என்ன கூற முயல்கிறார் என்று கேட்டான். பிறகு ஓடி ராமைய்யாவிடம் வந்து அவரை அவரருகே அழைத்துப் போனான்.
உடலின் மேலே, கீழே, பக்கவாட்டிலே என கழுத்துக் கீழே எல்லா இடங்களிலும் அம்புகள் தைத்திருந்தன. தலைக்குப் பின் பக்கம் மட்டும் ஒற்றை அம்பு.
அம்பு தைத்த இடங்களில் குழைத்துப் பூசி இருந்த மஞ்சள் அவர் உடைகள் மீதும் படர்ந்திருந்தது.
கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டார் ராமைய்யா. “சாமீ, நீங்க இன்னும் அம்புப் படுக்கையிலே தானா? நான் இங்கே வருவேன்னு தெரியாது,” என விம்மி விம்மி அழுத பின்னர் மௌனமானார்.
“போன வாரம் எங்க ஊருக்குப் போயிருந்தேன்.” சற்றே ஸ்திரமான குரலில் துவங்கினார். எங்க ஸ்கூலு ஹெட் மாஸ்டரு அய்யாவைப் பார்த்தேன். ரொம்பவும் தளர்ந்திட்டாரு. 95 வயசு ஆவுது. ஊருக்குள்ளே இன்னிக்கிம் அவரைத் தான் உசத்தியாப் பேசுறாங்க. பெரிய பெரிய தொழில் நடத்துற கோடீஸ்வரனெல்லாம், தன்னோட பழைய வாத்தியாரின்னு அவரைக் கும்பிட்டிட்டுப் போறானுங்க. இங்கே நான் ஒரு கோவிலுக்கே தர்மகர்த்தா. ஐயிரு தனி ரூட்ல பைசா சேர்த்தது தெரிய வந்ததும் பங்கைக் கேட்டேன். ஒரே ஒரு நாள் அவரோட 10 வயசுப் பையனைப் புடிச்சி வைச்சேன். பணம் கைக்கு வந்ததும் விட்டுட்டேன். சாபமெல்லாம் கொடுத்தாரு. பிஸினஸ் பார்ட்னர் சாபம் பலிக்காது. அது புரியிது. ஆனாலும் ஹெட்மாஸ்டர் ஐயா முகம் வந்து உறுத்துது. அவருக்கு ஒரு ஸ்டூடண்ட் அன்பா ஒரு பெரிய பங்களா கட்டிக் கொடுத்தாரு. ஆனா வாத்தியாரு அதை அனாதை ஆசிரமமா மாத்தி ஒரு ஸ்தாபனத்துக்கு தாரை வாத்துட்டாரு. அவரு முன்னாடி எந்த அளவு ஈனமாப் போயிட்டேன்னு ஒரு உறுத்தலு. நியாயம் தருமம்மென்னெல்லாம் ஏதும் இப்போ கிடையாது. என்ன சாமி செய்யிறது? சாபம் உறுத்தல. ஆனா அவரு கண்ணுல இருந்த கேவலப் படுத்துற பார்வையும் வெறுப்பும் உறுத்துது“.
பீஷ்மரின் கண்கள் அசைந்தன. சில நொடிகளில் இமைகள் மூடிக் கொண்டன. அருகிலிருந்த படை வீரன் ராமைய்யாவைத் தோளில் தட்டி அழைத்தான். மனித வளையத்தைத் தாண்டி அவரை விட்டுவிட்டுத் திரும்பத் தன் இடத்தில் நின்றான்.
தெற்கு மாட வீதி தாண்டி அண்ணா காலனிக்குத் திரும்பும் முட்டுச் சந்தில் சைக்கிள் மீது போலீஸ் வண்டி இடித்த வேகத்தில் பாபு நிலை குலைந்து விழுந்தான். மிச்சமிருந்த செய்தித் தாட்களில் பத்துப் பதினைந்து சைக்கிளுக்குக் கீழே இருந்தன. மீதி சுமார் ஐம்பது சாலை முழுவதும் சிதறி விழுந்தன. ‘ஜீப்’பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர், “என்னடா நா இல்லாத நேரமாப் பாத்து ஸ்டேஷனுல எட்டிப் பாக்கறே?” என்றபடியே அவன் தலைமுடியைப் பிடித்துத் தரையிலிருந்து தூக்கு ஓங்கி அறைந்தார்.
“ஐய்யோ… சார்,” என்றபடி அவர் காலைப் பிடித்தான்.
“என்னடா…இப்போ காலைப் புடிக்குறே? ஐயிரு கிட்டே எவ்ளோ வாங்கினே?”
“ஒண்ணும் இல்லே.“
“பொய்யா பேசுறே பொய்யி,” எட்டி உதைத்தார்.
தரையில் அமர்ந்தபடியே, “ஆயிரந்தான் குடுத்தாரு… அவராப் பிரியப்பட்டு.“
மறுபடியும் இன்ஸ்பெக்டர் காலை உயர்த்த “நெசமா ஸார்… அம்மா சத்தியமா .. அவரு பையனப் பத்திரமாப் பாத்துக்கினத்துக்கு.. நானாக் கேக்கலே சார்“
“மவனே… பஞ்சாயத்தையெல்லாம் நான் தாண்டா பண்ணுறேன். எனக்குத் தெரியாமே பண விவகாரமா உனக்கு..?”
“இனிமே இல்லே சார்.“
” ரேஸ் பைக்கு வாடகைக்கு எடுக்குற அளவுக்கு உனக்குத் தெனாவட்டு, ம்?“
பாபு அழுதபடியே தரையில் கிடந்தான். இன்ஸ்பெக்டர் வண்டியில் ஏற அது மெதுவாக நகர்ந்தது. “கோயில் அய்யர் பஞ்சாயத்துலே உனக்குக் கொடுத்தது சின்ன வேலைடா. பெரிய வேலை கொடுத்தாலும் பணப் பட்டுவாடா நாந்தாண்டா பண்ணுவேன்,” என்று அவனைப் பார்த்து வலது கைச் சுட்டு விரலை ஆட்ட வெகுவேகமாக, செய்தித்தாட்களின் மீது டயர் கறைகளை உண்டாக்கி விட்டுப் பறந்தது.
ராமைய்யா வீடு இருக்கும் குறுகிய சந்தில் ஆம்புலன்ஸ் நுழையும் போதே வீட்டு வாயிலில் குழுமியிருந்த பெண்கள் பெரிய குரலில் அழுதார்கள்.
சந்து முனையில் இரண்டு இளைஞர்கள், “பெசண்ட் நகர் சுடுகாட்டுக்குப் போனா புகையே கிடையாது. சாம்பலை ஒரு பாக்கெட்டில கொடுத்திடுவாங்க,” என்று நினைவு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
போருக்குப் போகும் வழியில் துரியோதனனது ரதம் நின்றது. அவன் பீஷ்மரை கண்ணெட்டும் தூரத்திலிருந்தே பார்த்தான். படை வீரர்கள் தலை குனிந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.
திருதிராஷ்டிரர் சஞ்சயனிடம், “பீஷ்மரைத் தவிர்த்தும் நம்மிடம் பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். துரியோதனனின் அடுத்த திட்டம் என்ன என்பதுதான் தெரியவில்லை.“
“இதற்கு முன்பும் உங்களுக்கு அது தெரிந்ததில்லையே,” என்றார் சஞ்சயர்.
பருத்தி வேட்டிக்காரர் பக்கத்திலிருந்து பட்டு வேட்டிக்காரரை தர்மகர்த்தாவிடம் காட்டி, “இவருக்கு ஆகம விவகாரமெல்லாம் அத்துப்படி. 2017 பொங்கலுக்குள்ளே நாலைஞ்சு ஹோமம் ஏற்பாடு பண்ணிடலாம். பரிட்சை சமயத்தில ஹயக்ரீவர் ஹோமம் வைக்கலாம். ரெண்டு லட்சமாவது கையிலே நிக்கும். மாடி கட்டி அதிலே வெங்கடாசலபதி, தன்வந்த்திரி சன்னதியெல்லாம் கட்டிடலாம்.“
“ஹோமத்துக்கான ரசீது விவகாரமெல்லாம் நானே பாத்துக்குறேன். கலெக்ட்ஷனை டெய்லி கறாராக் கொடுத்திடணும்,” என்றார் தர்மகர்த்தா.
“அண்ணா நகர்லேயிருந்து பெசண்ட் நகர் வரைக்கும் இருபத்தி அஞ்சு கிலோ மீட்டர். நீங்க எந்த பைக்கு எந்த ரூட்டுங்கறது ரேஸ் ஓட்டறவன் திறமை. நாங்க சிக்னல் கொடுத்த உடனே கிளம்புங்க.“
பாபுவும் விஸ்வநாதனும் ‘ஹார்லி டேவிட்ஸன் ‘அருகே தயாராக நின்றிருந்தனர்.
(தீராநதி ஏப்ரல் 2017 இதழில் வெளியானது )
(image courtesy:quora.com)