போகிற வழி
-சத்யானந்தன்
பஞ்சுப் பொதியோ
வெங்காய மூட்டையோ
வைக்கோற் போரோ
அந்தக் கிடங்கு வாயிலைக்
கடக்க
முதுகில் ஏதேனும்
சுமை கட்டாயம்
என்னைக்கண்டதுமே
புறந்தள்ளி
பின்னால் பெரிய
மூட்டை தூக்கிய
ஆளை
உள்ளே அனுமதித்தார்கள்
வந்த வழியில்
எங்கே திரும்ப?
ஒற்றை அடிப் பாதையையே
மறைத்த
சுமைகள் மூட்டைகள்
அலைந்து திரிந்து
வழி தெரியாது தடுமாறி
இறுதியில்
நெடுஞ்சாலையை அடைந்தேன்
விரையும் வாகனங்கள்
என்னைத் தூக்கி
வீசக் கூடும் என
ஒதுங்கி நின்று
விட்டேன்
தனியே போகத்
தெரியாது
வழியே போகிறவர்கள்
பின்னே போவேன்
ஆடுகளுடன் ஒருவர்
கருக்கருவாள் இடுப்பில்
இருந்த பெண்கள்
அந்திக்கு முன்
தம் ஊர் நோக்கி
விரைந்து மறைந்தனர்
ஏன்
வழிப்போக்கராக யாருமே
இல்லை ?
இருட்டிய பிறகு
நெடுஞ்சாலை
இன்னும் சிக்கலானது
எட்டிப் போட்டு
ஓரமாய் நடந்தேன்
களைப்பும் இருட்டும்
கவிந்த போது
ஒரு வயலை ஒட்டி
அடுப்பு நெருப்பு
தெரிந்தது
சற்றே தள்ளி
அமர்ந்தேன்
உனக்குப் பசிக்கிதா
என்றார்
சமைக்கும் அம்மாள்
தலை நிமிராமலேயே
நான் மௌனித்தேன்
காரமாயிருக்கும்
என எச்சரித்து
நீர்க் குடுவையுடன்
அவர் இட்ட உணவுக்குப் பின்
உறங்கி விட்டேன்
வெய்யில் முகத்திற் சுட
விழித்தெழுந்தேன்
அவரும் குடும்பத்தாரும்
வேலைக்குப்
போய் விட்டிருக்க வேண்டும்
காலில் இடறிய சுள்ளியில்
தொடங்கி முன்னும் பின்னும்
சாலைக்கு இருபுறமும்
அலைந்து பெரிய
குவியலாய்ச் சுள்ளிகளை
சேர்த்து விட்டேன்
இதைக் கட்டாய்க் கட்டி
சுமையாய் ஆக்கி விட்டால்
ஏதேனும் ஒரு வளாகத்துக்குச்
செல்லும் வரிசையின்
பின்னே நித்தமும்
போய் வரலாம்
(தீராநதி ஏப்ரல் 2017 இதழில் வெளியானது )
(image courtesy:alamy.com)