மான் கறி – சிறுகதை


Image result for deer hunted by tiger images

மான் கறி

—- சத்யானந்தன்

 சந்திரசேகர் ‘அசோக் பில்லர்’ நெருங்கும் போதே மேற்சென்று அலுவலகம் போக வேண்டாம் என்று முடிவெடுத்தான். பில்லருக்கு அருகிலுள்ள பூங்காவை ஒட்டி இரு சக்கர வாகனத்தை நிறுத்தினான். எதிரே டீக்கடையில் தேநீரை வாங்கி வெளியே நின்றபடி குடித்தான். கடைக்குள்ளே நிறைய பேர் இருந்தனர். பூங்காவுக்குள் ஓரிரு வயதானவர்களின் நடைப்பயிற்சி தவிர நடமாட்டம் ஏதுமில்லை. கைபேசியில் ஏதோ ஒரு செய்தி வரும் சமிக்ஞை ஒலி. கால் சராயிலிருந்து அவன் அதை வெளியே எடுக்கவில்லை. மேனேஜரிடமிருந்து வந்த செய்தியோ என மனம் குறுகுறுத்தது. 

 தேநீரை முடித்து தனது வண்டியின் மீது அமர்ந்து கைபேசியில் வந்தது என்ன என்று சோதித்தான். 

 ‘நண்பரே.. ‘இன்ஸ்டண்ட்’ செயலியிலிருந்து சில பயனுள்ள ஆலோசனைகள் உங்களுக்காக. இந்த இணைப்பில் சொடுக்கவும். ஒரு கணம் அந்த இணைப்பில் சொடுக்கினால் கைபேசியின் மென்பொருள் யாவும் கிருமித் தொற்றில் அழிந்து விடுமோ என்னும் அச்சம் எழுந்தது. அதற்கு முன் ‘இன்ஸ்டண்ட்’ என்று எந்த செயலியையும் அவன் தரவிறக்கியதுமில்லை. எப்படி அது உள்ளே வந்தது? முதலில் அந்த செயலியையே நீக்கி விட்டால்? பிறகு ஆபத்தே இருக்காது. 

 ‘செட்டிங்க்ஸ்— ஆப்ஸ்– இன்ஸ்டண்ட்’ தேடினால் அப்படி ஒரு செயலியே இல்லை. பிறகு எப்படி இது செய்தி அனுப்புகிறது? ‘நண்பரே. இது பயனுள்ள செயலியே.. உங்கள் ‘கைக்கருவி’ பழுதாகாது. நம்பி இணைப்பில் சொடுக்குங்கள்’ அடுத்த செய்தி உத்தரவாதம் தந்தது. கூகுளில் சென்று அந்த செயலி பற்றி துழாவினான். மோசமானது என்று யாரும் குறிப்பிட்டிருக்கவில்லை. அந்த செயலி ‘ஆண்டிராய்ட்’ கைபேசிகளை எளிதாய் ஊடுருவி விவரங்களைத் தரும் நவீன செயலி என்று தெரிந்தது. 

 துணிந்து இணைப்பில் சொடுக்கினான். ஒலியும் வரிவடுவமுமாய் ‘காலை வணக்கம் சந்திரசேகர். இன்று அலுவலகம் செல்லாமல் வழியிலேயே  திசைமாறி நின்று விட்டீர்கள்’ 

 எப்படி ஒரு செயலி இதையெல்லாம் கண்டுபிடிக்கிறது? ‘உங்கள் வண்டி பழுதென்றால் ‘ஒய்’ வேறு காரணமென்றால் ‘எஸ்’ ஐ அழுத்துங்கள். அவன் ‘எஸ்’ஐ அழுத்தியதும் ‘சில நொடிகள்’ என்றது செயலி. பிறகு அசோக் நகரில் போக்குவரத்து நெரிசல் எப்படி அருகிலுள்ள வங்கி எது மருத்துவமனை எது உணவகம் எது என்னும் தகவல்கள் வந்து விழுந்தன. விவரங்கள் வரிவடிவில் மட்டுமே வந்தன. அவை நின்றதும் மீண்டும் குரலும் எழுத்துமான செய்தி தொடர்ந்தது “நன்றி சந்திரசேகர். நேற்று இரவு உங்களுக்குப் போதுமான தூக்கம் இல்லை. பலமுறை ‘வாட்ஸ் அப்‘ , இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘ஃபேஸ்புக்” ஆகிவற்றுள் உலாவினீர்கள். இன்று நீங்கள்  பணியிடம்  போக விரும்பவில்லை’. அவனுக்கு ஒரு கணத்தில் முகமெல்லாம் வியர்த்து விட்டது. 

 ‘உங்கள் மேலாளரின் எண்ணைத் தொடர்ந்ததில் அவர் உங்களுக்கு அறிமுகமில்லாத ஓர் எண்ணில் யாருடனோ ‘சாட்டிங்’ கில் இருக்கிறார் என்பது தெரிந்தது. உங்கள் தேவையறிந்து மீண்டும் உரையாடுவோம். நன்றி”

 இதே போல் ‘மேனேஜரு’க்கும் தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொடுத்தால்? அவரது  எண்ணை அழைத்தான். மூன்றுமுறை முயன்றும் பதிலில்லை. ‘நேரடியாக ஃபீல்டுக்குப் போகிறேன்’ என்று செய்தி கொடுத்தான். முதல் நாள் இரவே ஒரு ‘கஸ்டமரி’டம் பேசியாகி விட்டது. அவர் ‘இன்றைக்கு ஊரிலிருக்க மாட்டேன்’ என்றார். அவரைப் பார்த்ததாக சமாளிக்கலாம். வெப்பம் கடுமையாக மேலே இறங்கியது. வண்டியை இயக்கினான். ஜாபர்கான் பேட்டையில் புகுந்து ‘ஜிஎஸ்டி’ சாலையை அடைய அவனுக்குத் தெரியும். சிறிய  சந்துகள் அனேகம்; அபூர்வமாய்ப் பெரிய தெருக்கள். புகுந்து புறப்பட்டு ‘கத்திப்பாரா பேருந்து நிறுத்தத்’தை அடைந்தான். நடைமேடையில் வண்டியை ஏற்ற வாகான இடத்தைக் கண்டு வண்டியை ஏற்றி நிறுத்தினான். நிறுத்தத்தில் இருந்த ‘குளிர்சாதன காத்திருப்பு அறை’க்குள் சென்று அமர்ந்தான். 

 “அம்மா தாத்தா பாட்டி சித்தி  எல்லாம் எங்கே?”

 “ஆஸ்பத்திரிக்கிப் போயிருக்காங்க. முதல்ல பல்லை விளக்கு.”

 “சித்திக்கி என்ன ஆச்சி?”

 “காயம்.”

 “எங்கே?”

 “உனக்குச் சொன்னாப் புரியாது.”

 “ஏன் புரியாதும்மா?”

 “டிவியைப் போடறேன். பாத்துக்கிட்டே பாலைக் குடிடி.”

 “பிள்ளைங்களா…இன்னிக்கி என்ன கதை தெரியுமா?  ஒரு மானோட கதை. ஒரு காட்டிலே ஒரு அம்மா மான், மூணு குட்டி மான் இருந்திச்சு. இப்போ நீங்க கார்ட்டூன்ல பாக்கறீங்களே அந்தக் குட்டி மான் மூணும் எப்பிடித் துள்ளுது பாத்தீங்களா?”

 அம்மாவின் கைபேசியில் விடாமல் மணி அடித்து நின்றது. அம்மா அதை எடுத்துப் பார்த்து விட்டுத் திரும்ப வைத்து விட்டாள்.

 சந்திரசேகர் முதுகுப்பையிலிருந்த போத்தலை எடுத்துக் குடிநீர் அருந்தினான். மீண்டும் செயலி. சொடுக்கியதும் “உங்கள் மேலாளரிடம் நீங்கள் பேசி விட்டீர்கள். உங்கள் வயதில் பணி மற்றும் வாழ்க்கைத் துணை இரண்டுமே முதன்மை பெறும். உங்கள் தொடர்புகளில் சமவயதுப் பெண்கள் மிகக் குறைவு. அதுவும் அவர்கள் உங்களிடம் தொடர்பில் இல்லாதவர்கள். எனவே உங்கள் தூக்கத்தை நீங்கள் தொலைக்கும் அளவு அழுத்தம் கொடுப்பது உங்கள் பணியாகவே இருக்க வேண்டும். ரசாயனத் துறையில் பணி புரியும் ஓர் இளைஞரின் ஓர் உரையாடலை உங்களுடன்

பகிர்கிறோம். அவர் உங்களைப் போல ரசாயனப் பொருட்களை நேரடியாகச் சந்தை செய்பவர் அல்லர். அவர் மருந்து விற்பனைப் பிரதிநிதி. ஆனால் இந்த உரையாடலில்   அவர், தான் தொடர்பில் இருக்கும் ஒரு தொலைக்காட்சி பற்றியும் பேசுகிறார். இவர் போல ஒரு பகுதி நேர வேலை உங்களுக்கு மேல் வருவாய், மன நிறைவு இரண்டையும் அளிக்க இயலும்.”

 “அட்மிட் பண்ணறத்துக்கு முன்னாடி போலீஸ் கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எங்கேயும் போவுல. நிச்சயமா,” என்றது பெண் குரல்.

“எந்த ஊரு?” வினவியது ஆண் குரல். 

“இப்போ சொல்ல முடியாது.”

“இப்படி நான் டிவி சானல் கிட்டே சொல்ல முடியுமா?”

“நான் டிடெயில்ஸ் எல்லாத்தையும் உடனே எப்படி ஷேர் பண்ண முடியும்?”

“என்னை நீ நம்பலாம்.”

“நம்பறேன். ஆனா சேனல்லே எனக்கும் இன்னொரு நர்ஸுக்கும் எவ்ளோ தருவாங்கங்கிறது முக்கியம்.”

“ரகசியமா அட்மிட் பண்ணி இருக்காங்கங்கிறது நிச்சயமா?”

“எப்படியோ எந்த டாக்டரையோ பிடிச்சி இங்கே ரகசியமா அட்மிட் பண்ணி இருக்காங்க.”

“ஊரும் தெரியாது. முழு டிடெயில்ஸ் இப்போ ஷேர் பண்ண மாட்டே. அப்போ நியூஸ் எடிட்டர் எப்படி இந்த கேஸ் பத்தி கன்வின்ஸ் ஆவாரு?”

“டியூட்டி நர்ஸ் கிட்டே சொல்லி வீடியோவே எடுக்கச் சொல்றேன். முகத்தை மறைக்கணும்.”

“கவலையே படாதே. சானல்லே அந்த ரிஸ்க் எடுக்கவே மாட்டாங்க… அமவுண்ட் கேட்டுச் சொல்றேன். நாளைக்கி விடியோ வேணும்.”

“அமவுண்ட் கமிட் பண்ணினா விடீயோ ஊரு ரெண்டுமே சொல்லுவேன். பேரு கிடைக்காது.”

“ஓகே.’ உரையாடல் முடிவடைந்தது. 

 யாருடைய சம்பாஷணையையோ கேட்டு எனக்கு என்ன பயன்? கைபேசியில் அடுத்த குரல் செய்திக்கான இணைப்பு வந்து விட்டது. “உங்களுக்கு உபயோகமுள்ள பணியமர்த்தும் நிறுவனங்களுக்கான சில இணைப்புக்களை மின்னஞ்சலில் அனுப்பியிருக்கிறோம். உங்கள் பெயர், தகுதிகளைப் பதிவு செய்ய எந்தக் கட்டணமும் கிடையாது.”

 அவள் விழிகளைத் திறக்க முயற்சித்தாள். ஆனால் அது உள்ளார்ந்த விருப்பமாக நின்றது. அதனாலேயே பகலா இரவா என்பது அவளுக்குப் பிடிபடவில்லை. கத்தியால் கீறி மிருகமாய் மேலே பாய்கிறவனிடமிருந்து தப்பித்து விட்டேனா இல்லை அவன் கொன்றதால் செத்து விட்டேனா. செத்திருந்தால் வலி எங்கே இருக்கும்? வலியின் உச்ச அவஸ்தை இது. மூச்சை உள்ளே இழுக்கும் போது அமிலத்தில் தோய்த்தெடுத்த கருவேல முட்கிளைகளும் உள்ளே நுழைந்து உடலின் உட்பக்கத்தைக் குதறிக் கிழிக்கின்றன. அமிலத்துளிகள் உள்ளே சுட்டெரித்து அடிவயிற்றிலிருந்து பிறப்பு உறுப்பு வரை கூர்மையாய்க் குத்தி வாட்டுகின்றன. வாய் விட்டு அழுதால் அலறினால் தேவலாம். உதவி கிடைக்குமோ இல்லையோ இந்த வலியின் கொடூரத்துக்கு ஒரு பதில் கூவலாய் அழுது தீர்க்கலாம். அடி வயிற்றில் துவங்கிய அழுகை அங்கேயே நின்றது. வாய் விட்டு அலற விடாது மூளையும் நாக்கும் ஒருங்கிணைய ஒட்டாது கருப்புப் பிசாசு ஒன்று வெறியாட்டமாடியது. 

 “தாவிக் குதிச்ச மான் குட்டிகள் மலைக்கி மேலேயும் போச்சு. அப்போ ஒரு குகையைப் பாத்ததும் மூணு குட்டி மானும் ஓடிச்சி.” மான்கள் துள்ளித் துள்ளி ஓடுவதை ‘கிராபிக்ஸ்’ அழகாகக் காட்டியது. மறுபடி அம்மாவின் ‘மொபைல்’ தொடர்ந்து அடித்தது. கையிலெடுத்த பின் அம்மா கைபேசியை அணைத்தே வைத்து விட்டாள். 

 “அப்போ பின்னாடியே போன அம்மா மான் காலிலே பல எலும்புகள் இடறிச்சு. எல்லாமே மானு ஆட்டுக்குட்டி மாதிரி சின்னச் சின்ன எலும்புகள் குகைக்குள்ளே. உடனே அம்மா மானுக்கு விளங்கிடிச்சு. அது ஒரு புலியோட குகை.’ கதை நின்று தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தது. “நண்பர்கள் மிரளணுமா? ரப்பர் பல்லி, குட்டிப்பாம்பு, தவளை எது வேண்டுமானாலும் சாக்லேட் வாங்கியதும் இலவசமாகக் கடையில் கேட்டு வாங்குங்கள்.”` அந்த சாக்லேட் பற்றி அம்மாவிடம்   பேச நிமிர்ந்தாள். அம்மா அழுது கொண்டிருந்தாள். 

 மறுபடி அந்த செயலியின் செய்தி கைபேசியில் ஒலித்தது. ஆனால் சந்திரசேகர் திறக்கவே இல்லை. அவனது கைபேசியில் ஒரு பூனை முப்பது நாற்பது கோழிக்குஞ்சுகளைத் துரத்தித் தாவிப்பிடித்துக் கவ்விக் குதறிக் கொண்டிருந்தது. ஐம்பது குஞ்சுகளை பூனை பிடித்ததால் அவனுக்கு அடுத்த கட்ட விளையாட்டு திறந்து கொண்டது. 

 மருத்துவ மனையின் அந்த சிறிய அறைக்குள் இருபது முப்பதுக்கும் மேல் மாணவ மாணவிகள். முகம் வீங்கியிருந்த நோயாளியின் முகத்தின் பெரும்பகுதியை ‘ஆக்ஸிஜன் செலுத்தும் கருவி’ ஆக்கிரமித்திருந்தது. பேராசிரியர் அவளது கண்களுள் ஒன்றன் இமைகளை இடது கை ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் இரண்டையும் பயன்படுத்தி லாகவமாகத் திறந்தார். கண்மணி மிகவும் மெலிதாக அசைந்ததும் அவர் விரல்களைத் தளர்த்த விழி மூடிக் கொண்டது. “வாட் டூ யூ ஸீ?” வினவினார். 

 ‘ஷீ இஸ் நாட் கான்ஷியஸ்.”

 ‘கமான். டாக் லைக் ய மெடிகல் ப்ரொஃபெஷனல்.”

 “ஷீ இஸ் இன் ட்ராமா.”

 “நேத்திக்கி நீங்க உடைஞ்ச ரிப்ஸ், வாஜினல் இஞ்சரீஸ், கட்ஸ் ஆன் ஹர் பிஸிக், ஸ்வெல்லிங்க் இதையெல்லாம் பாத்தீங்க… பட் ட்ராமா இஸ் நாட் எக்ஸாட்லி பிஸிகல்.”

வாட்ஸ் ட்ராமா சைகலாஜிக்கலி?. யூ பீப்பிள் மஸ்ட் அண்டர்ஸ்டாண்ட். திஸ் கண்டிஷன்  ஈஸ் டெம்பொரரி பெரலிஸிஸ் ஆஃப் மைண்ட்.. நடந்த ட்ராமாவோட தொடர்ச்சியா ஃபைட்-ஃப்ளைட்- ஃப்ரீஸ் அப்படின்னு சைக்காலஜியிலே சொல்ற இனிஷியல் ரெஸ்பான்ஸ் ட்ராமா இன்னும் முடியலையின்னு ஆழ்மனசில பேஷண்ட் நம்பறதால கண்டின்யூ ஆகும். பாரலைஸ்டா. மறுபடி நார்மலுக்கு வராமலே போகலாம். நாளாகி குடும்பத்தோட அக்கறையால மனசு லேசாகி சுயநினைவுக்குத் திரும்பலாம். அது நடக்காமவும் போகலாம். இந்த கேஸ் ஒரு க்ளாஸிக் கேஸ் ஆஃப் சைக்காலாஜிகல் இம்பேக்ட் ஆஃப் டிராமா. டேக் நோட்ஸ் அண்ட் யூ பிபில் ஆர் லக்கி டு ஸ்டடி திஸ் கேஸ்.

” வஜினாவெல்லாம் ரணமாகிக் கிழிஞ்சு ரொம்பப் பாவம் சார் இந்த லேடி,” சொல்லி முடிக்கும் முன்பே ஒரு மாணவியின் கண்களில் நீர் திரண்டது. 

“லுக் பட்டிங்க் டாக்டர். எமோஷனலானா நாம ஒரு பேஷண்ட்டை ஒரு ஆப்ஜெக்ட் ஆப் பாக்காம தடுமாறிடுவோம். ஸ்டெடி யுவர்ஸெல்ஃப் நவ் இட்ஸெல்ஃப்.”

 “பசங்களா கிளம்புங்க. இது புலியோட குகை,” னு அம்மா மான் சொல்லிக்கிட்டிருக்கும் போதே புலியோட உறுமல் சத்தம் கேட்டிச்சி.” புலி குகைக்குள்ளே வந்தா என்ன ஆகும்னு தெரியுமில்லே குழந்தைங்களே. புலி அம்மா மான் குட்டி மான்கள் எல்லோரையும் அடிச்சி சாப்பிட்டிடும் இல்லையா?” திரையில் உறுமியபடி வரும் புலி குகைக்கு வெளியே.

 “அப்போ அம்மா மானுக்கு ஒரு யோசனை தோணிச்சு. அது குரலை மாத்தி கரகரப்பான குரலிலே, “குழந்தைகளே. நாம் புலிக்காகக் காத்திக்கிட்டிருக்கோம். நமக்கு இரையா இன்னிக்கி இரவு உணவாகப் போற புலி வந்திடிச்சி…” என்றது சத்தமாக. பெரிய மானும் குட்டி மான்களும் குகைக்குள்ளே திரையில் தோன்றின. இதைக் கேட்ட புலி ‘என்னை விட வலிமையான ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருக்கு. நான் தப்பிக்கணும்’ மின்னு நெனச்சு ஓடியே போச்சு. புலி குகைக்கு எதிர்திசையில் திரையில் ஓடியது.

 ‘இந்தக் கதை உங்களுக்குப் பிடிச்சிதா. ஏன் பிடிச்சிருக்கு அல்லது பிடிக்கலே அல்லது இந்தக் கதைபத்தி கேள்வி எதாவது இருந்தா அதையும் எஸ் எம் எஸ் ல அனுப்புங்க.” விளம்பரங்கள் தொடர்ந்தன.

 குழந்தை அம்மாவிடம் போனாள். “அம்மா இந்த மான் கதையைப் பத்தி ஒரு கேள்வி கேக்கணும். நீ எஸ் எம் எஸ் பண்ணுவியா?”

(பெமினா தமிழ் ஏப்ரல் 2017 இதழில் வெளியானது )

(image courtesy:shutterstock.com)

  

  

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s