‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன்
பிறரிடமிருந்து இலக்கியவாதி எந்தப் புள்ளியில் வேறுபடுகிறார் ? ஒரு சொல், காட்சி , அல்லது, செய்தி எழுத்தாளருக்குள் பல்வேறு பரிமாணங்களுள்ள எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. வன்னி மரம் அறிவோம் ; வன்னி என்னும் இலங்கையின் தமிழரின் வாழ்விடத்தை அறிவோம். ஆனால் வன்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்னும் ஒரு பொருள் உண்டு என நாம் அறிவோமா ?
நெருப்பு தொன்மைக்கால தமிழ் இலக்கியத்தில் எப்படியெல்லாம் இடம் பெற்றது ? நாஞ்சில் நம்முடன் பகிர்கிறார் சொல்வனம் இணையத்தில். கம்பர் திருவள்ளுவர் எப்படி நெருப்பை மைய படுத்தினார்கள் ? திருக்குறள் பற்றிய பகுதி இது :
‘ எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்பிழைத்துஒழுகுவார்.’
என்கிறது திருக்குறள். நெருப்பில் அகப்பட்டவர் பிழைத்தாலும் பிழைக்கலாம் ஆனால் பெரியாரை இகழ்ந்தவர்கள் உய்ய மாட்டார்கள் என்பது பொருள். இந்தக் குறளைத் திராவிடக் கழகத்தவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.’
என்பதும் திருக்குறளே. வைத்தூறு என்றால் வைக்கோல்.எரிமுன்னர் எனில் நெருப்பின் முன்னால் என்று பொருள். மற்றுமோர் சுவையான குறள்.
‘நெய்யால் எரி நுதுப்போம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்போம் எனல்.’
என்பது. நுதுப்போம் – அணைப்போம், கௌவை – பழிச்சொல்.
நெய்யை ஊற்றி நெருப்பை அணைப்போம் என்பது போல் இருக்கிறது பழிச்சொல் பரப்பி, அலர் தூற்றி, காதல் தீயை அணைக்கலாம் என்று சொல்வது என்று பொருள்.
————————————–
விரிவான இலக்கிய ஆய்வும் சுவையும் ததும்பும் அவரது பதிவுக்கான இணைப்பு ————— இது.