இழிவு செய்யும் பழமொழிக்கு பெண் குழந்தையின் பதிலடி – முகநூல் பதிவு
வாட்ஸ் அப்பில் தோழி முக நூல் பதிவு ஒன்றைப் பகிர்ந்தார் . அது கீழே :
———————————————————-
பெண்களைத் தாழ்த்திப் பேசும்
பழமொழிகள் பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது மகள் அந்தப் பக்கம் வந்தாள்.
நாங்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று தலையில் அடித்து
“இது விடுங்க ’உண்டி சுருக்குதல் பெண்டிருக்கு அழகாம்’ கேர்ள்ஸ் கம்மியா சாப்பிடனுமா. பொறம்போக்கு அவன அடிக்கனும்” என்றாள்.
எனக்கும் அப்பாவுக்கும் அதிர்ச்சி.
அவள் பொறம்போக்கு என்று சொன்னவிதம் ஒருமாதிரி கேஸுவலாக இருந்தது. ’பொறோஒம்போக்கு’ என்று சொன்னவிதம் அப்பாவை பாதித்திருக்கும் போல. கொஞசம் சீரியஸாகி என்னை நோக்கி “நீ இப்படி எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து நாளைக்கு ஒரு பப்ளிக் பிளேஸ்லையும் இப்படித்தான் பேசுவா பாரு” என்று கடிந்து கொண்டார்.
”ஏய் அப்படியா சொல்வாங்க” என்று மகளைக் கேட்டாலும் அவள் சொன்னதை முழுமையாக என் ரகசிய ஆழ் மனம் ரசித்தே இருந்தது.
நிச்சயமாக பொறம்போக்கு என்ற சொல் நானும் பேசுவதில்லை. மனைவியும் பேசுவதில்லை. வேறு எங்கோ கற்றிருக்கிறாள். ஆனால் உண்டி சுருக்குதல் பெண்டிருக்கு அழகு பழமொழி பற்றி நான் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அதைச் சொல்லி இரண்டு வருடங்கள் இருக்கும். ஒருநாள் காலை வாக்கிங் போகும் போது சொன்ன ஞாபகம். அதை இந்த இடத்தில் இப்படி பேசுவாள் என்று எனக்குத் தெரியாது.
அப்பாவின் இந்த ரியாக்சன் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. அப்பா சொல்வது சரிதான். நிச்சயம் இது மாதிரி பொது இடத்தில் பேசினால் அப்பா அம்மாவுக்கு கொஞ்சம் கஷ்டம்தாம். மேலும் அவளுக்கே கஷ்டம்தான்.
கொஞ்சம் மார்க் குறைந்தாலும் உலகம் கண்டதையும் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் என்று சொல்லும்.
இன்னும் அவள் பதின் பருவம், வளரும் பருவம் அனைத்திலும் அவளைக் கண்கானிக்கும் உலகமும் சொந்த பந்தமும் இதையே அவ்வப்போது சொல்லலாம்
மனைவி கூட சில சமயத்தில் திட்டலாம்.
பெரியார் அம்பேத்கரை அறிமுகப்படுத்தி வைப்பதையே இங்கே பல குடும்பஸ்தர்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். அதை ஒரு திணிப்பாக பார்க்கிறார்கள்.
எனக்கு எப்படித் தோன்றும் என்றால் இதையெல்லாம் குழந்தையிடம் இருந்து மறைப்பதுதான் அவளுக்கு செய்யும் துரோகம் அல்லது அநியாயம் என்று படும்.
குழந்தை வளர்ப்புக்கென்று இங்கே எந்த நியதியும் இல்லை என்றே நினைக்கிறேன்.
குழந்தைகள் சமஸ்கிருத ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் போது நிம்மதியடையும் நம் மனம் கடவுள் மறுப்பு பற்றி தர்க்கமாக பேசும் போது பதறிவிடுகிறது.
இதை விட அப்பாவாக என்னைப் புண்படுத்தும் விஷயம் “ம்ம்ம் புரட்சியாக வளர்க்கிறீங்க” என்பதான அர்தத்தில் பேசப்படும் சொற்கள்தாம். புரட்சியை அர்த்தப்படுத்தி புரட்சியாக என்று சொன்னால் பரவாயில்லை. அந்த புரட்சியே ஒரு கிண்டலான தொனியில் ஒலிக்கும் போது கொஞ்சம் கடியாக இருக்கும்.
இப்படியாக குழந்தையை எப்படி வளர்ப்பது என்ற குழப்பம் வந்து கொண்டே இருக்கிறதுதான்.
உதாரணமாக மகள் அதிகமாக அலங்காரம் செய்து கொள்ளும் போது நான் அதை மெலிதாக விமர்சனம் செய்து கொண்டேதான் இருப்பேன்.
முடி நீளமாக வளர்க்க ஆசை கொண்டால் அதையும் “ இது உனக்கு ஒரு தேவையில்லாத வேலை செல்லம். நீ கிராப் வெட்டிடு இரு அதுதான் உனக்கு ஈஸியான வேலை” என்பேன்.
இங்கே நான் நிச்சயமாக திணிக்கிறேன்தான்.
ஆனால் பெண் என்றாலே முடி நீளமாக இருக்க வேண்டும் என்ற ஒரு விஷயத்தை சமுதாயம் அவள் மேல் திணிக்கவில்லையா ?
இந்த இடத்தில் அவள் விருப்பபடியே விட்டுவிடுவது என்று விடும் போது சமுதாயத்தின் திணிப்புக்குள் வந்து விடுகிறாள்தானே.
ஆக உலகம் எதிர்ப்பார்ப்பதற்கு மாறாக கொஞ்சம் வித்தியாசமாக ஒருவர் பேசினாலும் உலகத்தாருக்கு ஒருவித பதட்டம் வந்துவிடுகிறது.
பெற்றோர்கள் மீது அது குற்றச்சாட்டாக போய்விடுகிறது. கொஞ்சம் வலித்தாலும் அம்மா அப்பாவாக அதை ஏற்றுக் கொள்ளுதல்தான் முறையே தவிர குழந்தை வளர்ப்பை மாற்றிக் கொள்ளுதல் முறையில்லை என்றே நினைக்கிறேன்.
என் குடும்பத்தில் பார்ப்பேன்.
மாமாக்கள், அத்தைகள், சித்திகள், சித்தப்பாக்கள், இளைய தலைமுறையினர் என்று சொந்தங்கள் அனைவரும் படித்தவர்கள்.
ஆனால் சமூக நீதி விசயத்தில் சுத்தமாக விவரமில்லாதவர்கள்.
இதை கோபத்தில் சொல்லவில்லை.
ஒரு சமூகநீதி சார்ந்த Questionnaire கொடுத்தால் அவர்கள் சைபர் மார்க்தான் எடுப்பார்கள்.
அவர்களைப் பார்க்கும் போது எனக்கு உள்ளுக்குள் ”வளர்ப்பு சரியில்லை” என்றே இப்போதெல்லாம் தோன்றுகிறது.
அந்த “வளர்ப்பு சரில்லை” என்பதை நான் ஒரு அப்பாவாக சரிசெய்து வளர்க்கும் போது (குழந்த அதுவாக வளரும். வளர்க்கத் தேவையில்லை என்று மொக்கை போட்டுவிடாதீர்கள்) நிச்சயமாக கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்யும் எனறு நினைக்கிறேன்.
ஒரு அப்பா இப்படி ஒரு பெண் குழந்தையை வளர்த்து கண்கலங்கிய காட்சியொன்றை சொல்ல நினைக்கிறேன்.
தோழி ஒருவர் சிறுவயதில் இருந்தே அப்பா செல்லம்.
அப்பா ராணுவத்தில் வேலை செய்தவர் என்பதால் Rational ஆக இருப்பார். மகளை கொஞ்சம் தைரியமாக வளர்த்திருக்கிறார்.
பேஸ்கட் பால் பிளேயராக மகளை ஊக்கப்படுத்தி பள்ளில் விளையாடச் சொல்வாராம். கால் வலி என்று வீடு திரும்பும் மகளின் கால்களுக்கு எண்ணெய் போட்டு
நீவி விடுவாராம்.
இப்படி இருக்கும் போது நல்ல வரன் வந்துவிட்டது என்று அம்மா, சொந்தபந்தங்கள் என்று அனைவரும் வற்புறுத்த மரபை மீற விரும்பாத அந்த அப்பா மகளை திருமணம் செய்து கொடுத்து விடுகிறார்.
கல்யாணம் ஆனதும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அந்த காலத்தில் (25 வருடங்கள் ) முன்பு ஒரு நாசுக்கான அடிமை மொழியை பெண் வெளிப்படுத்தினால் மட்டுமே கணவருக்கு பிடிக்கும். இப்பெண்ணால் அப்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இப்படியாக சண்டை வர, பெரிய சண்டையாகி மகளைக் கொண்டு மாப்பிள்ளை வீட்டில் விட்டுப் போக ஒட்டுமொத்த சொந்தபந்தமும் “இவரு திமிரா பிள்ள வளத்த காரணத்தாலதான் இவ்வளவு பிரச்சனை” என்று திட்டி இருக்கிறார்கள்.
அப்பா முடிந்த மட்டும் அதையெல்லாம் சமாளித்தவர் ஒருநாள் மகளிடம் கண்கலங்கிக் கொண்டே “நான் எதாவது உன்ன தப்பா வளத்து உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனோம்மா” என்று சொல்ல மகளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டதாம்.
அவர் அப்பா எளிதில் அழுபவரல்ல. அப்பாவுக்கு வளர்ப்பு பற்றிய குற்ற உணர்வு வருவது கண்ட அப்பெண் அப்பாவுக்காக என்ன நடந்தாலும் புகுந்த வீட்டில் அடங்கி நடப்பது என்று முடிவெடுத்து அதன் படியே கணவனுடன் சென்றாராம்.
இது முற்போக்கா பிற்போக்கா என்பதை விட கொஞ்சம் ஒரு குழந்தையை தன்னம்பிக்கையாய் வளர்க்க ஏன் பெரியவர்கள் பயப்படுகிறார்கள் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். (இப்போது இந்த விசயத்தில் இந்த நிலைமை மாறியிருக்கலாம். நான் சொன்னது ஒரு பெற்றோருக்கு வரும் குற்ற உணர்வுக்கான ஒரு உதாரணம்).
இப்படியாக குழந்தை வளர்ப்பில் உள்ள குழப்பத்தை நினைத்து கொஞ்சம் குழப்பம் வந்தாலும் பல சமயம் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ஒருநாள் மகளை பேட்டரியுடன் வயரைக் கனெக்ட் செய்து பல்பை எரியச் செய்வதை செய்து காட்டி அதை வீடியோ எடுக்க தயாரானேன்.
அதற்கு முன்புதான் மனைவி எனக்கும் அவளுக்கும் விபூதி பூசிவிட்டு சென்றார்.
நான் வீடியோ எடுக்கும் முன் மகள் என்னைத் தடுத்து
“அப்பா நாம பேசப்போறது சயின்ஸ். அந்த வீடியோவுக்கு விபூதிகிட்டு ஏன் பேசனும். அத அழிச்சிரலாம்” என்று அழித்துக் கொண்டாள். நான் வீடியோ எடுப்பவனும் அதை அழித்துக் கொண்டேன்.
அவளுடைய இந்த கவனத்தை அதிகம் ரசித்தேன்.சராசரி மனிதன் மதத்தையும் ரசித்து விஞ்ஞானம் ரசிக்கலாம்தான். ஆனால் விஞ்ஞானத்தை ரசிக்க நிச்சயம் மத உணர்வு ஒரு தடைக்கல்தான்.
முடிவில் அங்கேதான் போய் மதவாதி முட்டிக் கொண்டிருப்பான். இதையெல்லாம் இவ்வளவு தெளிவாக அவள் புரிந்து கொள்ளாவிட்டாலும், ஏதோ ஒரு உணர்வு ரீதியாக புரிந்து கொண்டதாக தோன்றியது.
சரியான டிராக்கில் நான் செல்கிறேனா இல்லையா என்று காலம்தான் சொல்லவேண்டும். ஆனால் தமிழிசை போன்றவர்களை கவனிக்கும் போது பயமும் வருகிறது. காந்திவழி காங்கிரஸ்வழி குமரி அனந்தன் நிச்சயம் இவ்வளவு மதவெறியைச் சொல்லி வளர்த்திருக்க மாட்டார்தான் இல்லையா.
அப்புறம் டாக்சியில் வரும் போது மகளிடம் கேட்டேன் “ஏம் பிள்ள சட்டுன்னு அப்படி தாத்தா முன்னாடி பேசின. பொறம்போக்கு எல்லாம் தேவையில்லாத வார்த்தை. உனக்கு அடிதான் கொடுக்கனும்”
அதற்கு அவள் “அப்போ அந்த பழமொழியை சொன்னவனுக்கு முதல்ல அடி கொடுங்க.அப்புறம் எனக்கு” என்று சொன்னாள்
அப்போதும் முகத்தில் ஒரு சீரியஸான அலெட்சியத்துடன்தான் சொன்னாள்.
சரிக்கு சமமாக நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன் :
முக நூல் மற்றும் சமூக வலைத் தளங்களில் பிறப்பால் ஜாதி, ஜாதிக்கேற்ப மரியாதை என்னும் அடிப்படையில் பல பதிவுகளை நாம் காண்கிறோம். படிப்பு எந்த விழுமியங்களையும் போதிக்கவில்லை என்பதற்கு பல பதிவுகள் உதாரணம். முகமூடியில்லாத மேல்ஜாதிக்காரனை நாம் சமூக வலைத் தளங்களில் காண்கிறோம். பெண்கள் விதிவிலக்கே அல்ல. ஆனால் அவர்களுக்கு தம்மை அழுத்தி வைக்கும் ஆணாதிக்கத்தின் மறுபக்கமே ஜாதி வெறி என்பது ஏன் பிடிபடவே இல்லை என்பது வியப்பளிப்பது.
இந்த முக நூல் பதிவை நான் பகிரக் காரணம் ஒரு தகப்பனாக நான் இவற்றை எதிர் கொண்டவன். விரைவில் நடக்க இருக்கும் திருமணத்தில் என் மக்களின் விருப்பத்தை நான் ஆதரித்தேன். சமூக அசூயையை எதிர்ப்பை வலியுடன் தங்கி வருகிறேன்.
பெண்கள் உரிமை மற்றும் சமூக நீதி இவை இரண்டும் கனவாகவே நிற்கின்றன.
(image courtesy:shutterstock.com)