காலச்சுவடு மே 2017 இதழில் றஷ்மியின் இரண்டு கவிதைகள்
‘ஒரு பெண்ணுக்குச் சொல்லப்பட்ட இரண்டு கவிதைகள் ‘ என்னும் றஷ்மின் இரண்டு கவிதைகளும் நவீனத்துவத்தின் நுட்பம் மிகுந்தவை.
கவிதைகளுக்கான இணைப்பு ——————————- இது.
முதல் கவிதை வாசிப்பில் எனக்கு “இளவரசி மிதப்பு ‘ (princess syndrome )என்னும் செல்லப் பெண்ணின் மனநிலை மையப் படுத்தப் பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தனது குடும்பத்தாரால் (பிறந்த வீட்டில் ) நன்கு பேணி வளர்க்கப் பட்ட பெண் தன்னை ஒரு இளவரசியாகவே மனத்துக்குள் உருவகப் படுத்திக்க கொள்வதன் சிக்கல்களை நாம் ‘பிரின்சஸ் சிண்ட்ரோம் ‘ எனக் கொள்ளலாம். அதில் துவங்கி ‘இல்லற நெருக்கம் ‘ மற்றும் அது மங்கி ‘ஆணாதிக்கம்’ தலை தூக்கும் காலம் இவை மாறி மாறி சொல்லப் பட்டிருக்கின்றன. ஏன் கவிஞர் மாற்றி மாற்றி சொல்ல வேண்டும் ? கவிதையின் வடிவம் நினைவடுக்களிலும் , காட்சிப் படுத்துதலின் வீச்சிலும் நகர்வது. செறிவான கவிதை.
இரண்டாம் கவிதையின் இந்தப் பகுதி நம்மை கவிதையின் மையக் கருவுக்கு இட்டுச் செல்லும் :
பேசப்படாத வார்த்தைகள்
விஷ யந்துக்களோடு கிடந்து ஊறும் கிடங்குகளில்
காடுகளின் மூலத்தை ஊன்றிப்ப தியமிடுகின்றாள்
கேள்விகள் விடமுட்களாய் ஆகும்படியாய்
நாற்றுக்களைப் பரிகரிக்கிறாள்.
இந்தக் கவிதை ஒரு ஆணின் தரப்பில் இருந்து எழுதப்படுகிறது. ‘பெண் ஒரு புரியாத புதிர்’ என்று ஒரே போடு போட்டு விடுவது ஆணுக்கு இயல்பான ஓன்று. ஏனெனில் பெண்ணின் உலகம் அவனுக்கு முழுதுமே அந்நியமானது. ஒரு யட்சினி போலவே ஒவ்வொருவன் வாழ்விலும் தனது மனக்கிடக்கையை வெளிப் படுத்துவாள். ஆண் போல அன்றி, பெண் உரிய தருணத்தில் மட்டுமே மனம் திறப்பாள். அப்படி மனம் திறக்கும் போது மட்டை திறந்தது போல் தன்னை வெளிப்படுத்துவாள். பெண் நிமிர்ந்து பேசினால் ஆணுக்கு யட்சிணி தானே.
சரி ஆண் வித்தியாசமான பெண்ணை இரண்டு வழிகளில் சந்திக்கிறான். ஓன்று அக்கவிடுதலை பெற்ற நிரந்தர யட்சிணி . மற்றவளோ அபூர்வமாய் தருணத்தின் எழுச்சியில் தன்னை வெளிப்படுத்தி பின்னர் மீண்டும் கூண்டுக்குள் அடைந்து போகிறவள். அதாவது தற்காலிக யட்சிணி. இப்படி யட்சிணிகளின் வழியில் போனால் அவனைப் பாவி என்றே (சமூக அடுக்குகளை மீறிய பாவி ) சமூகம் கூறும். அதைக் கீழ்க்கண்ட பகுதி அழகாய்ப் பதிவு செய்யும்:
நமது கூட்டுப் பாவங்களின் நிமித்தம்
தனியாளாய் தண்டிக்கப்பட்டவன் நான்
நீ திரும்பிப் போ
இரண்டு கவிதைகளும் ‘பெண் குரல்’ என்னும் படைப்பு முறையில் (genre) மிளிர்கின்றன. றஷ்மி கவிதையுடன் தந்துள்ள நவீன ஓவியங்களும் நுட்பானமானவை. புனைவின் வீச்சு மிகுந்தவை.பாராட்டுக்கள்.
(image courtesy:trekearth.com)