கலைப் படைப்பு பற்றி ஜெயமோகன் – என் எதிர்வினை
(1)
ஒரு படைப்பில் கலைத் தன்மை எங்கே உணரப் படுகிறது? எதனால் ஒரு படைப்பு கலைப்படைப்பு என்று அடையாளம் காணப்படும் ? ஜெயமோகனின் விரிவான பதிவுக்கு இணைப்பு ——————– இது.
கலை பற்றி அந்த நீண்ட பதிவில் அவர் குறிப்பிடும் இடம் இது :
திட்டவட்டமாக சில வரையறைகளை நம்மால் சொல்ல முடியும். நாம் உணர்வதை நாமே வகுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளாக அமையும். ஆனால் கலைப்படைப்பை உணர்வதென்பது முழுக்க முழுக்க அந்தரங்கமானது. கலைப்படைப்பின் மதிப்பீடுகள் எப்போதும் தன்னிலை சார்ந்தவை. அவற்றை நூறு சதவீதம் புறவயமான அனுபவமாக ஆக்கவோ, எதிர்ப்பவர்களிடம் அறுதியாக நிறுவவோ எவராலும் இயலாது. முழுக்க முழுக்க அகவயமான இந்த மதிப்பீடு ஒட்டுமொத்தமாக, ஒரு சமூக எண்ணமாகத் திரளும்போதுதான் ஒரு புறவயத்தன்மை அடைகிறது. டால்ஸ்டாய் உலக நாவலாசிரியர்களில் முதன்மையானவர் என நான் நம்புவது என்னுடைய அந்தரங்கமான மதிப்பீடு. ஆனால் இத்தகைய பல்லாயிரம் மதிப்பீடுகள் முன்வைக்கப்பட்டதனால் தான் புறவயமாக அவரே உலகத்தின் தலை சிறந்த நாவலாசிரியராகக் கருதப்படுகிறார்.
————————————————
(2)
இலக்கிய படைப்புக்களை மதிப்பீடு செய்யும் தளத்தில் கட்டுரை நீள்வதை நாம் காணலாம். என் எதிர்வினைக்கு முன்பு நவீனமும் கலையுமாய் எழுதிய இரு மாபெரும் இலக்கிய ஆளுமைகளின் இரண்டு படைப்புக்கள் பற்றிப்
பார்ப்போம். என் பதிவுகளில் இருந்து இவை :
முதலாமவர் முன்ஷி பிரேம்சந்த் :
முன்ஷி பிரேம்சந்த் ஹிந்தியில் எழுதிய ‘கஃபன்” என்னும் சிறுகதை புகழ் பெற்றது. “கஃபன்” என்னும் ஹிந்திச் சொல்லுக்கு “சவக்கோடித்துணி” என்று பொருள். தன் மனைவியை வாழ்நாளெல்லாம் வருமையில் ஆழ்த்தி அவள் உழைப்பில் குடித்துக் கும்மாளம் போட்டு அவள் மரணத்துக்குப் பின்னும் மனம் வருந்தாத ஒரு தகப்பன் அவனது இளவயது மகன், மற்றும் துரதிர்ஷ்ட வசமாக அவனுக்கு வாழ்க்கைப் பட்ட மருமகள் இவர்களே மூன்று கதாபாத்திரங்கள். குளிர்நாளில் குடிசை வாயிலில் மண்ணில் கரிகளால் கணப்புப் போல வைத்து அதில் உருளைக் கிழங்கை வேக வைத்து அதை உண்டபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள் தகப்பனும் மகனும். குடிசைக்குள்ளே இருந்து பிரசவ வலியில் கதறும் மருமகள் ஓலம் கேட்கிறது. “நீ போய்ப் பார். நான் போனால் வெட்கப் படுவாள்” என்கிறான் தகப்பன். “எனக்குப் பிரசவ வேதனையைப் பார்க்க பயம்” என்று சமாளிக்கிறான் மகன். இருவருக்குமே தான் நகர்ந்தால் அடுத்தவன் உருளைக் கிழங்கைத் தின்று விடுவான் என்னும் தயக்கம். அவளுடைய ஓலம் நிற்கிறது. உருளைக் கிழங்கு முழுவதும் தீர்ந்த பிறகு மகன் உள்ளே சென்று பார்க்கிறான். அவள் உயிர் நீத்து உடல் மட்டும் கிடக்கிறது. ஊரே சேர்ந்து அவர்களை அடக்கம் செய்யச் சொல்லுகிறது. சவக்கோடி வாங்கக் கூடப் பணம் இல்லை என் கிறார்கள் இருவரும். நல்ல மனம் கொண்ட சிலர் பணம் தருகிறார்கள். அந்தப் பணத்தில் குடித்துவிட்டு அவளது நல்லடக்கம் பற்றிக் கவலையில்லாமல் கிடக்கிறார்கள் இருவரும். கதை இங்கே முடிகிறது.
வறுமை ஒரு மனிதனின் உடலைக் கொல்லுவது என்றே நாம் காண்கிறோம். அது அவனது தன்மானத்தை, நேர்மையை, மனித நேயத்தை, மனசாட்சியை என ஒவ்வொன்றாகக் கொன்று அவனது ஆன்மாவையே கொன்று விடுகிறது. அதுவே வறுமையின் மிகப் பெரிய அவலம்.
அடுத்ததாக நாம் புதுமைப்பித்தன் பற்றி பேசுவோம் :
சிறுகதையில் நவீனத்துவத்தை புதுமைப்பித்தனே தமிழுக்கு அறிமுகம் செய்தார். நவீனத்துவம் செவ்விலக்கியத்தில் இல்லாத மீறல்களைக் கொண்டது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘சாபவிமோசனம்’ என்னும் சிறுகதை அவரது படைப்புகளில் ஆகச் சிறந்தது என்று நாம் கருதலாம். ராமனும் சீதையும் மணமுடிக்கும் முன்பே வனவாசம் புகும் முன்பே அகலிகைக்கு சாபவிமோசனம் கிடைத்து விடுகிறது. கௌதமரிடம் மன மாற்றம் இருக்கிறது. மனமறிந்து குற்றம் புரியாத அகலிகை குற்றமற்றவள் – சினத்தால் சாபமிட்ட தானே குற்றவாளி என்னுமளவு அவருள் தெளிவு பிறக்கிறது. பிர ரிஷி பத்தினிகளின் இளப்பப் பார்வையும் ஏளனமும் அகலிகையை மனமுடையச் செய்கின்றன. வனவாசம் முடிந்து வரும் சீதையைச் சந்திக்கிறாள். அவளை அக்கினிப்பிரவேசத்தின் மூலம் ஊருக்குத் தன் கற்பை நிரூபிக்கச் சொன்னார் ராமன் என்று தெரிந்ததும் மீண்டும் கல்லாகி விடுகிறாள். மற்றொரு சந்ததி சதானந்தனைத் தவிர வேண்டும் என்று அவளை அணுகும் கௌதமர் கைக்கு அவளது கற்சிலையே கிடைக்கிறது.
ராமாயணத்தின் முக்கியப் பெண் கதாபாத்திரங்களான சீதை அகலிகை இருவரையும் வைத்துக் கற்பனையான சிறுகதை எழுதி பெண்களின் இழி நிலையைப் புனைகதை மூலமே தெளிவு படுத்தினார். இந்தக் கலைத் தன்மையே பிரசார நெடி இல்லாத படைப்பாகவும் அதே சமயம் சமுதாயத்தின் சிந்தனையில் மாற்றம் கோரும் படைப்பாகவும் இந்தப் படைப்பை உயர்த்துகிறது. புதுமைப்பித்தன் காலத்தில் இத்தகைய படைப்பு சக படைப்பாளிகளை விட கலையில் நவீனத்துவத்தில் சிறந்து நிற்பது.
சாப விமோசனம் கதைக்கான இணைப்பு —————— இது.
இப்போது என் எதிர்வினைக்கு நகரலாம் .
ஒரு படைப்பு எப்போது கலைப்படைப்பு ஆகிறது? என் படைப்பை நான் மட்டும் வாசித்து பூட்டி வைத்தேன் என்றால் அது கலையா இல்லையா என்னும் கேள்வியே இல்லை. எனது கற்பனையும் நானும் என்று தனித்திருப்பது இலக்கியமில்லை. வாசகர் தமது கற்பனை கட்டவிழ்ந்து படைப்பாளியுடன் அல்லது அவரை விஞ்சி வாசிப்புத் தளத்தில் முன் செல்கிறாரா என்பதே கலையைத் தீர்மானிக்கிறது.
படைப்பாளி உரத்துப் பேசும் படைப்புக்களில் கற்பனைக்கு இடமில்லை. யதார்த்தமும் பாத்திரப் படைப்பும் மிளிரும் படைப்புக்கள் தம்மளவில் பெரியவை. ஆனால் வாசகர் கற்பனையைத் தூண்ட அவை எந்த விதத்திலும் இடம் தராதவை. நவீன பின் நவீனப் படைப்புக்களில் கலை மாய யதார்த்தம் மற்றும் புராணங்களின் மறு வாசிப்பு போன்ற புதிய தடங்களில் கற்பனையின் வாயில்கள் திறக்கின்றன.
காவியத்தின் மிகப்பெரிய உள்ளார்ந்த பலவீனம் அது கற்பனையின் கூர்மையும் சிறகுமான பறத்தலுக்கு ஒத்துவராத அளவு கனமானது. பண்பாட்டின் இறுக்கமான சுவர்களின் ஊடே மட்டும் ஒரு உலகத்தைக் காணும் கட்டாயம் செய்வது. புதிய தடங்கள் நோக்கி விரிவதும், கற்பனையின் தளத்தில் வாசகர் மற்றும் படைப்பாளி கை கோர்ப்பதும், நுட்பமும் , ஒவ்வொரு வாசிப்பில் ஒவ்வொரு பொறி வெளிப்படும் செறிவும் கலைப் படைப்புக்கான அடையாளம். இதுவே என் எதிர்வினை.
(image courtesy:veethi.com)