செய்திக்கான இணைப்பு ———————— இது.
இந்தச் செய்தி ஒரு பக்கம் மகிழ்ச்சி தருவதே. மறுபக்கம் ஒருவர் பாரம்பரியமான தொழிலை மட்டுமே செய்யும் அணுகுமுறையை மத்திய அரசு திறந்தநிலைப் பள்ளிகளில் ‘நெசவாளர் மாணவர்கள் நெசவுத் தொழில் சார்ந்த கல்வியை இலவசமாய்ப் பெறலாம்’ என்பதில் வெளிப்படுத்துகிறது.
உண்மையில் எல்லா அரசியல் கட்சிகளுமே ஜாதி சார்ந்த தொழில் விஷயத்தில் மௌனம் சாதிக்கின்றன. நகை நகாசுத் தொழில் இன்று வரை பெரிய அளவில் எந்த மாணவரும் கற்கும் ஒன்றாக இல்லை. அந்தத் தொழில் நல்ல வருமானம் தருவது வெளிப்படை.
விவசாயம் மற்றும் நெசவு என்றும் ஏழைகளின் தொழிலாகவே நின்று விட்டன. விவசாயிகள் நிரந்தக் கடனாளிகளாகவும் , கடனை ரத்து செய்யக் கோரும் நிரந்தர நலிவிலும் இருப்பதை நாம் 70 வருடமாக மாற்ற முடியவில்லை.
இதற்கான காரணம் மிக வெளிப்படையானது. விவசாயி (சிறு விவசாயி) தனது அறுவடையை மிகவும் சல்லிசான விலைக்கே தர முடியும். அரசோ அல்லது தனியார் கொள்முதலோ அந்த விலை என்றும் அவருக்கு நல்ல வாழ்க்கைக்கான வருவாயைத் தராது. இடைத் தரகர் அவருக்கு மோசமான விலையையும் , நகரத்தில் அதை வாங்குவோருக்கு அதிக விலையையும் முடிவு செய்வார். இது எந்த அரசியல் கட்சியாலும் கவனிக்கப் படாது. ஏன் ? கட்சிகளில் பெரிய அளவில் இடைத் தரகர் – வணிகர் இவர்களது ஆதிக்கமே உண்டு.
விவசாயம் நெசவு , இவற்றைத் தொழிலாகக் கொள்வோர் இன்றும் பரம்பரைத் தொழில் என்பதாலேயே அதைச் செய்கிறார்கள். முதலில் இடைத் தரகரின் கட்டுப்பாட்டின் மீது அரசின் கட்டுப்பாடு வர வேண்டும். அப்போது இந்தத் தொழில்கள் பரம்பரை அடிப்படையில் இல்லாமல் கல்வித் தேர்ச்சி பெற்று சம்பாதிக்கும் ஒன்றாக மாறும்.
விவசாயக் கூலித் தொழிலாளி வர்ணாசிரம அடிப்படையில் எப்போதும் கீழ் நிலையில் தள்ளப் படுகிறார். மறுபக்கம் கடன் ரத்து என்பதை நிறையவே பயன்படுத்திக் கொள்வது பெரிய விவசாயி தான். அரசியல்வாதிகள் ஓட்டுக்குக் கூலித் தொழிலாளிகளுக்கு வேறு முகம் வைத்திருப்பார்கள். அவர்கள் கட்சியில் கை ஓங்குவதெல்லாம் பெரிய பண்ணைகளின் ஆட்களின் கூட்டமே.
70 வருடமாய் நாம் பேணிய சமூக நீதி இது.
(image courtesy:pinterest.com)