கலிபோர்னியா என் புகைப்படங்கள் -8
ஒரு நல்ல நகரத்தின் அடையாளமாய் நாம் பூமிக்கு கீழே கட்டமைக்கப்பட்ட மின்சார மற்றும் தொலைத்தொடர்புக் கம்பிகளைக் குறிப்பிடலாம் . சென்னைப் பெருநகரின் உள்ளே தொடக்கத்திலிருந்தே மின் கம்பிகள் தரைக்கு கீழே தான். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் மின்கம்பிகள் தலைக்கு மேலே செல்வதும் , புயலில் அறுந்து விழுந்து பேராபத்தாவதும் நடைமுறை.
எனவே நான் சன்னிவேல் பகுதியில் என் மகளின் குடியிருப்புப் பகுதியில் இதை அவதானித்து வந்தேன். மிகவும் ஆச்சரியமளிப்பதாய், பல இடங்களில் தலைக்கு மேலே மின் கம்பிகள் செல்கின்றன. சரிதான் , பூமிக்கு கீழே மின்கம்பிகளே இல்லையோ என யோசித்தால் அதுவும் இல்லை.
முதலில் உள்ளது தலைக்கு மேலே மின்கம்பிகள் செல்லும் புகைப்படம். கீழே உள்ளது மின்விளக்கு கம்பம். (ஏனோ அது வீடியோவாக வந்து விட்டது) அதில் தரைக்கு கீழே இருந்துதான் மின்சாரம் வருகிறது.
எனவே அவர்கள் கட்டமைப்பு வளரும் போது தற்காலிகமாக தலைக்கு மேலே மின்கம்பி என்னும் சமாதானம் செய்து கொள்கிறார்கள். வார நாட்களில் சாலைகளை பழுது பார்ப்பதால் போக்குவரத்து பாதிப்பு இங்கும் உண்டு. ஆனால் சாலைகள் மிகவும் தரமானவை.
பெரிய சாலைகள். ஒழுங்கான போக்குவரத்து. ‘பாதசாரி என்ன செய்தாலும் சரி ‘ என என் மக்கள் புன்னகையுடன் கூறுவார். போக்குவரத்து ‘சிக்னல்’ உள்ள சந்திப்புகளில் நாம் ஒரு பொத்தானை அழுத்தி காத்திருக்க வேண்டும் . நாம் கடந்து செல்ல பச்சை விளக்கு வரும். அனைவரும் நூறு கார்கள் என்றாலும் அப்படியே நிற்பார்கள்.
அவர்கள் தான் ரொம்ப ஒழுங்கு நாம் மட்டம் என நாம் கூறவில்லை. நாமும் இவற்றை செய்ய முடியும். இன்னும் சாலைகள் விரிந்து இருந்தால் நாம் செய்ய முடியும்.