தடம் இதழில் சாருநிவேதிதா நேர்காணல்
தடம் ஜூலை 2017 இதழில் சாருவின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. சாருவின் இயல்பான முன்ஜாக்கிரதை ஏதுமில்லாத பதில்கள். அவரது இணைய தளம் வழியாக அவரைப் பற்றிப் புரிதல் உள்ளவர்களுக்கு அநேகமாகத் தெரிந்த விவரங்கள் தான். இருந்தாலும் இன்றைய சூழலில் தீவிரமாக இயங்கும் ஒரு படைப்பாளி மொழிவதும், பதிவு செய்பவையும் மிக முக்கியமானவை. வாசிப்போர் மிகவும் குறைவே. எழுத்தாளன் திரும்பத் திரும்ப புனை கதைகள், கட்டுரைகள் மற்றும் நேர்காணல் அல்லது சொற்பொழிவு வாயிலாகத் தனது கற்பனைகள், கனவுகள், பார்வைகளை முன் வைத்த படி இருக்கிறான். பண்பாட்டின் ஆகச்சிறந்த அடையாளம் இலக்கியம். அது புரியாத சமூகம் தமிழ் சமூகம். இதில் இயங்கும் எந்த ஒரு படைப்பாளியும் மிகவும் சுய ஊக்கத்தில் மட்டுமே இயங்குகிறான்.
எழுத்தாளனை ஒரு சமூகம் ஏன் கொண்டாட வேண்டும் என்னும் கேள்விக்கு சாரு தாகூரை காந்தியடிகள் குருதேவ் என அழைத்ததைச் சுட்டி பதிலளிக்கிறார். சமூகம் எழுத்தாளனைக் கொண்டாடுவது இரண்டாம் பட்சமென்றே நான் கருதுகிறேன். ஜெயகாந்தனின் கவிதையின் இந்தப் பத்தி பொருத்தமானது.
“என்னைக் கொல்வதும் கொன்று கோவிலில் வைப்பதும்
கொள்கை உமக்கென்றால் உம்முடன் கூடி இருப்பதுண்டோ ?”
கொண்டாடுவதும் கொள்வதும் இவர் இயல்பு. வாசிப்பும் , பண்பாட்டில் மேற்செல்வதும் ஒரு சமூகத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஆளுமைகள் சிறியவர்கள் தமிழ்ப் பண்பாடு வளர்ந்ததா ? சுயவிமர்சனம் வழியாகத் தேக்க நிலையை வென்றதா என்பவை என்றும் நிற்கும் கேள்விகள். பண்பாட்டுக்குப் பங்களிப்பு செய்கிற படைப்பாளியை விட சுய சிந்தனை இல்லாத சினிமா நடிகன் பெரியவனாயிருக்கும் இந்த ஜனங்களின் வாழ்விடம் தமிழ் நாடு.
பெண் படைப்பாளிகள் பற்றிய பதிலில் சாருவின் மனத்தடை வெளிப்படுகிறது. இது அநேகமாக எல்லா ஆண் எழுத்தாளர்களுக்கும் பொருத்தும். அவர்கள் ஆண் படைப்பாளிகள் பற்றியோ அவர்கள் பதிவு பற்றியோ எந்த அளவு வாசித்து விமர்சித்து எழுதியிருக்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் சாரு. பிரபஞ்சன் தவிர யார் பெண் படைப்பாளிகளை வாசித்து விமர்சித்தார்? நான் செய்யாததை ஏன் என் சக பயணியான பெண் படைப்பாளி மட்டும் செய்ய வேண்டும்?
பெண்கள் எளிதாய் இருப்பதால் கவிதை எழுதுகிறார்கள் என்கிறார் சாரு . புனை கதை எழுதும் புண்ணியவான்களுக்கு கவிதை என்றால் ஒரு அசூயை. ஏன் இது? உமா மகேஸ்வரி , யுவன், நான் ஆகியவ் மூவரே தீவிரமாக கதை, கவிதை இரண்டும் எழுதுவோர். எங்களுக்கு மட்டுமே தெரியும். கவிதை உள்ளே தோண்டி , உருக்கித் தங்கமாய் வெளிவரும் பெரிய போராட்டம். ஒரு மாதம் ஆகும் ஒரு ஆழ்ந்த கவிதை உருவாக்க. சாரு , கவிதைகளை வாசியுங்கள். மனுஷ்ய புத்திரன் தவிர பிறர் எழுதும் கவிதைகளையும் வாசியுங்கள். றஷ்மியின் கவிதைகள் பற்றிய என் விமர்சனக் கட்டுரைக்கான இணைப்பு——– இது.
கவிதை, பெண் படைப்பாளியின் மொழி மற்றும் கவிதை என்னும் வாகனம் பற்றிய புரிதலுக்கு என் விமர்சனம் உதவி செய்யும்.
சாருவை மட்டுமல்ல , வேறு எந்த ஒரு படைப்பாளியை நான் விமர்சிப்பதும் இலக்கியம் பற்றிய மேம்பட்ட புரிதலுக்காகவே. தனிப்பட்ட தாக்குதலுக்கோ சர்ச்சைக்கோ அல்ல .
சாரு ஆன்மிகம் பற்றியும் , தனது வாழ்வில் தான் இறையருள் உணர்ந்த தருணம் ஒன்றையும் பற்றிப் பகிர்கிறார். மிகவும் என்னால் அது புரிந்து கொள்ளக் கூடிய ஓன்று. பெரிய அடிகளும் மீட்சியும் பெற்றோருக்கு மட்டுமே இறையருள் வசப்படும். அதாவது இறைவன் கை தூக்கிவிடும் தொடுகையின் ஸ்பரிசம் பிடிபடும்.
சாரு நாடக முயற்சி செய்து கசப்பான அனுபவம் அடைந்தது எனக்கு புதிய செய்தி. பரீட்சார்த்தமான நாடகங்களுக்கான மேடை தமிழ் நாட்டில் இல்லை.
மாட்டுக்கறி விவகாரம் மையமாய் மோடியின் பாசிசம் பற்றி சாரு குறிப்பிடும் போது நம்பிக்கை தந்த ஒரு தலைவர் மிகப் பெரிய ஆபத்தாக நம்மால் அடையாளம் காணப் படுவது வெளிப்படுகிறது. பெரிய சவாலை வலது சாரி பாசிசம் உருவாகி விட்டது. இடதுசாரிகள் செல்ல வேண்டிய திசை பற்றியும் அவர் சுட்டிக் காட்டுகிறார். எனக்கும் அதே கருத்து உண்டு. இன்று கோட்பாடு அடிப்படையில் மக்களை நாம் ஓன்று திரட்ட முயலாமல் சுயசிந்தனைக்கும் சுதந்திரத்துக்கும் நாம் எதிரியல்ல என இடதுசாரிகள் விவாதங்கள் வழி சமூகம் சுதாரித்துக்கொள்ள உதவ வேண்டும். இன்று இடதுசாரிகள் பொறுப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது.
நேர்மையாய் பதில் தரும் சாதாரண மனிதன் குரல் சாருவுடையது. தடம் இதழுக்கு நன்றி.
(image courtesy: tatam magazine)