தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்கள் -வெண்ணிலா தடம் இதழில்
தடம் இதழ் ஜூலை 2017 இதழில் தி ஜானகிராமனின் பெண் கதாபாத்திரங்களை அலசுகிறார் வெண்ணிலா. ஒரு ஆய்வுக்கட்டுரை என்றே இதைக் கூற வேண்டும். கணக்கில்லாத ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ‘மரப்பசு’ நாவலின் அம்மணி, குடும்பத்தினரின் முழுப் பார்வையில் அவர்கள் அறிய கணவனல்லாத ஆணுடன் உடலுறவு வைத்திருக்கும் ‘அம்மா வந்தாள்’ நாவலின் அலங்காரத்தம்மாள், ஆண் பெண் பேதமின்றி எல்லோரையும் அணைத்துப் பேசும் ‘உயிர்த்தேன்’ நாவலின் அனுசுயா, இரு ஆண்களை ஒரே சமயத்தில் சமமாகக் காதலிக்கும் ‘மலர் மஞ்சம்’ பாலி என மீறல்கள் மிகுந்த பெண் கதாபாத்திரங்களை வெண்ணிலா வரிசைப்படுத்துகிறார். சாமுத்திரிகா லட்சணம் என்று குறிப்பிடத்தக்க உடலழகு கொண்டவர்களே அவரது நாயகிகள். மனதை வருடும் வருணனைகள். யதார்த்தமில்லாத இனிய பொழுதுச் சித்தரிப்புக்கள் ஏற்கமுடியாவிட்டாலும், ரசிப்புக்குரியவையே என வியக்கிறார் வெண்ணிலா. அன்பும் அரவணைப்புமான ஆண்களையும் அவர் தாம் அவர்களால் அடைந்த தாக்கத்தை முன் வைத்துப் போற்றுகிறார்.
தி.ஜாவைக் கூர்மையாய் விமர்சிப்பவர்கள் ரத்தம் வர அவரது படைப்புக்களை உரசி விட்டார்கள் என ஆதங்கப் படுகிறார். ரசனை மட்டுமே ஒரு படைப்பின் வெற்றிக்கு அதன் நிறைவுக்கு அளவு கோல் எனப் பதிகிறார்.
வெண்ணிலா ஒரு பெண் என்னும் அடிப்படையில் தமது மனம் மீறல்களால் – பெண்களின் அசாதாரணமான தருணங்களால் வெல்லப் பட்டதை மட்டுமே அளவு கோலாய்க் கொண்டு புல்லரிப்புடனான ஒரு ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார்.
இந்தப் புல்லரிப்பு, வருடிக்கொடுக்கும் படைப்புக்களுக்கு ‘பல்ப்’ என்னும் ஆழமில்லாத, கிளர்ச்சியூட்டும் படைப்புக்கள் என்னும் அடையாளமே உண்டு. அதனுள் மாட்டிக் கொள்ளாமலிருக்க எந்த ஒரு முனைப்பும் தி.ஜாவிடம் இருக்கவில்லை.
“ஜாதிப்பூவில் கோயிலின் மணம், பூஜையின் மணம் வீசுவதைப் போல், அவரது படைப்புக்குள் அசலான வாழ்வின் மணம் வீசிக்கொண்டே இருக்கிறது” என்னும் இடத்தில் பெரும்பான்மைப் பெண்களின் தடத்தில் வெண்ணிலா பயணிப்பது தெளிவு.
ஒரு படைப்பு தனது சமகாலப் படைப்புக்களை மீறிச் செல்லும் அளவே அதன் புனைவின் வீச்சுக்கும் ஆழத்துக்கும் அடையாளம். தி ஜா தம்மை பாதித்த ஆளுமைகளின் மீது தமது ஆவல்களை ஏற்றிக் கற்பனையைப் பூசிய அளவில் நின்றுவிடும் எண்ணற்ற கிளர்ச்சிப் படைப்பாளுள், முதலிடம் பிடிக்கிறார் அவ்வளவே.
பெண்களின் மீறல்கள் அல்லது அவர்கள் மீறட்டுமே என சமுதாய மாற்ற நோக்கில் பெண் எழுத்தாளர்கள் அதிகம் எழுதவே இல்லை. இந்த ஒரே காரணத்துக்காக தி.ஜாவைக் கொண்டாட முடியுமா?
வெண்ணிலாவே அவரது பெண் கதாபாத்திரங்கள் அசாத்தியக் காம உணர்ச்சி கொண்டவர்கள் எனக் காண்கிறார். பெண்களின் காமம் ஆணைப் போல் உடல் மட்டும் சார்ந்ததே அல்ல. அது பன்முகமும் நுட்பமுமானது. உண்மையில் பெண்கள் வாழ்வின் விழாத் தருணங்களை, மின்னும் நொடிகளை, கொண்டாட்டங்களாய் அனைவரும் ஒன்று கூடும் வாய்ப்புக்களைக் கண்டு கிளரும் அளவு காமத்தில் ஈர்ப்பு உள்ளவர்கள் அல்லர். தனக்குத் தரப்படும் கவனம் அதாவது ஆணின் கவனம் மட்டுமே அவனுடனான காமதூரமான அவன் மீதான ஈர்ப்பைத் தீர்மானிக்கும். அதுவும் சமூகத்தில் தான் கிளர்ச்சியாய்க் கொண்டாடும் விழாக்களை ஒப்பிட கடைசிப் பட்சமாயிருக்கும்.
பெண்களின் பலம் அவர்களின் சமநிலையும் முதிர்ச்சியும் ஆணை ஒப்பிடப் பன்மடங்கு பலம் வாய்ந்தது. நீண்ட காலத்துக்கான வாழ்க்கை பற்றிய தீர்க்க தரிசனம் இயல்பாகவே பெண்களுக்கு உண்டு. குடும்ப உறவுகள், சமூக அங்கீகரிப்பு மிகுந்த கூடுதல்கள் இவைகள் பெண்கள் காரணமாகவே சமூக வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. ஆனால் பெண்களின் அசாதாரணமான தருணங்கள் மட்டுமல்ல சமூக வாழ்க்கையின் சித்திரம். தண்டவாளத்தடத்தில் மட்டுமே பயணிக்கும் நம் மனம் வசப்படுத்த முடியாத வாழ்க்கையின் புதிர்கள், மானுடம் சுரண்டலும், ஆக்கிரமிப்புமாய்ப் போராடும் முரண், மனித நேயத்தை மானுடமே நீர்க்கடிக்கும் சோகம் இவை யாவையும் கண் விரித்து வியக்கும் படைப்புக்கள், முன்முடிவில்லாமல் விடை தெரியாத கேள்விகளை நம்மோடு பகிர்ந்து ஒரு தரிசனத்தைத் தேடும் முயற்சிகளான நவீனப் படைப்புகள் இவையே தமிழ் இலக்கியத்தை இன்றைய செறிவான இடத்துக்கு இட்டு வந்தன.
புதுமைப்பித்தன் புதிய சாளரங்களைத் திறக்கும் அற்புதப் படைப்புக்களை வைத்தார். கிளர்ச்சி தராது. புளகாங்கிதம் தராது. நம் சிந்தனை தண்டவாளத் தடத்தை விட்டு விலகி புதிய தரிசனங்களை நோக்கி நகரும். இலக்கியத்தின் வெற்றி இந்தப் புள்ளியிலியே அடையாளம் காணப்படும்.