யாழ் ‘கலை முகம்’ இலக்கிய இதழில் என் சிறுகதை


‘சூஹா ஜால்’ சிறுகதையை வெளியிட்ட யாழ்ப்பாண ‘கலை முகம்’ இதழுக்கு நன்றிகள் பல.

சூஹா ஜால்

சத்யானந்தன்

“மாமா… எந்திரிங்க​… டீ ரெடி,” வேலு என்கிற​ வேலப்பன் என்னை எழுப்பிய​ போதுதான் நான் விழுப்புரத்தில் இல்லை, நள்ளிரவே சென்னைக்கு வந்து விட்டேன் என்பது உறைத்தது. இரவு எட்டு மணிக்கே செண்பகா என்னுடைய​ பயணப் பையைத் தயார் செய்து விட்டாள்.

“பசங்க​ ஸ்கூலுக்குப் போவ​ என்ன​ பண்ணுவாங்க​?” என்ற​ என் ஒரே ஆயுதத்தை அவள், “பக்கத்து வீட்டுப் பசங்களோட​ ஷேர் ஆட்டோவுல​ போவாங்க​,” என்று நொடியில் மழுங்கடித்தாள். ஐநூறு ரூபாயை எங்கே ஒளித்து வைத்திருந்தாளோ என் கையில் திணித்தாள்.

கோயம்பேட்டில் இருந்து எந்தப் பேருந்தில் அரும்பாக்கத்தில் உள்ள​ வேலுவின் வீட்டுக்குப் போகலாம் என​ விசாரித்து விட்டாள். அதற்கு முன்பே அவள் வேலுவிடம் நான் இல்லாத​போது பேசி இருக்க​ வேண்டும்.

“அக்கா போடற​ டீ போல​ இருக்காதுன்னு பாக்காதீங்க​…இவன் பீகார் ஆளு. அவங்க​ ஊர்ல​ போடற​ மாதிரி இஞ்சி டீ நல்லாதான் போடுவான்.” சுமார் ஐந்தடி இருக்கும். இருபது வயது இளைஞன் என்னளவு கருப்பானவன். கை கூப்பி வணங்கினான்.

வேலுவின் அறையை நோட்டம் விட்டேன். எனக்காக​ நேற்று நள்ளிரவில் அவன் விட்டுக் கொடுத்த​ நாடாக்கட்டில் தவிர​ இரண்டு ‘பிளாஸ்டிக்’ நாற்காலிகள். அவற்றுள் ஒன்றின் மீது அவன் கையில் தினத்தந்தியுடன் இருந்தான். சுவரில் நான் செண்பகா மற்றும் குழந்தைகள் இருக்கும் படம், வேலு – செண்பகாவின் தாய்​ தந்தையர் இருக்கும் படம் இரண்டும் இருந்தன​.

அறையின் ஒரு மூலையில் சிறிய​ சமையல் மேடை. அதன் எதிர்புறமாக​ சிறிய குளியல் மற்றும் கழிப்பறை.​ மற்றொரு மூலையில் நான்கு தட்டு கொண்ட​ ஒரு சிமெண்ட் பலகைகளாலான​ சுவர் அலமாரி. அதன் மேற்தட்டில் வினாயகர் படம் வெங்கடாஜலபதி படம் வைக்கப்பட்டிருந்தன​. சிறிய​ பித்தளை விளக்கு ஒன்றும் இருந்தது. அடுத்த​ தட்டில் சமையற்பாத்திரங்கள், சாப்பாடு வைக்கும் நான்கு அடுக்கு ‘டிபன் கேரியர்’. அடுத்த​ தட்டில் பெரிய​ பயணப் பெட்டி அருகில் பெரிய​ பயணப் பை. அதை ஒட்டி ஒழுங்காக​ அடுக்கிய​ உள்ளாடைகள். கீழ்த் தட்டில் பழைய​ செய்தித் தாட்கள். அருகே ஒரு பெரிய​ தகரத்திலான​ பயணப் பெட்டி. பீகார்ப் பையன் மிகவும் மரியாதையானவன் போல​. அறையின் வாயிலை ஒட்டிய​ வராண்டாவில் அமர்ந்து கொண்டான். பையில் பல்துலக்கியைத் தேடினேன். “டீ ஆறிடும். வாயை கொப்பிளிச்சிட்டுக் குடிங்க​. பிறகு பல் துலக்கி இன்னொரு டீ குடிப்போம்.”

“நீ சீக்கிரமே குளிச்சிட்டியா வேலு…?”

“இல்ல​ மாமா. வழக்கம் போலதான். இப்போ மணி எட்டாவுது. நாம் சுமார் ஒம்பது மணிக்கிக் கிளம்பினம்னா பத்து மணிக்குள்ளே நா வேல​ பாக்குற​ ஓட்டலுக்குப் போயிரலாம். கண்ஷ்யாம்” ”

வேலைக்காரப் பையன் வந்தான். “நீ கெளம்பு. மாமா ஸாப் என்னோட​ வருவாரு,” என்றபடி சுவர்க் கொக்கியில் தொங்கிக் கொண்டிருந்த​ தனது சட்டையில் இருந்து இரு பத்து ரூபாய்த் தாட்களை எடுத்துக் கொடுத்தான். வாங்கிக் கொண்டு அவன் மாடிப்படியில் பாதி இறங்கி இருக்க​ மாட்டான் அறை வாயில் வரை போய், “சூஹாஜால் வெச்சியா?” என்றான். “வச்சிருக்கு ஸாப்.”

“சூஹா ஜால்னா என்ன​?” என்று நான் கேட்க​ வாயெடுப்பதற்குள், “மாமா நீங்க​ உள்ளே தாப்பாப் போட்டுக்கிட்டுக் குளிங்க​. நான் மொபைல் டாப் அப் பண்ணிக்கிட்டு வரேன்,” என​ சட்டையைக் கொக்கியிலிருந்து எடுத்தவன் அதை மாட்டியபடியே படி இறங்கி விட்டான்.

இரவில் முழுத்தூக்கம் இல்லை. கண் எரிச்சல். அரும்பாக்கத்தில் இருந்து வெகு நேரம் நத்தை போல ஊர்ந்து சென்ற பயணத்தில் வேலு தனது இருசக்கர வாகனத்தை பல பெரிய வாகனங்களுக்கு இடையே நுழைத்து முன் சென்று வித்தை காட்டினான். விழுப்புரத்தில் நான் பயன்படுத்துவது சிறிய மொபெட் வண்டி. வேலு அதனுடன் ஒப்பிட மிகுந்த சக்தி உடைய மோட்டர் சைக்கிள் வைத்திருந்தான்.

முடியவே முடியாது நீளுமோ எனத் தோன்றிய அந்தப் பயணம் வண்டி ஒரு ரயில் பாதைக்குக் கீழ்ப்பட்ட பாலத்தைக் கடந்த பின் விரைவு பட்டது. ஒரு நாற்சந்தியில் சற்றே சிக்கினோம். அதன் பிறகு வளைந்து நெளிந்த சாலையின் முடிவில் இடது பக்கம் கூவம் வந்த பின் நேரான சாலை தென்பட்டது.

“இதுதான் கிரீம்ஸ் ரோடு” என்றான் வேலு. அதில் நுழைந்து சிறிது தூரத்தில் வலது பக்கம் காட்டி, “இது தன் அப்போல்லோ ஆஸ்பத்திரி,” என்றான். அதைப் பார்ப்பதற்குள் அதுவும் கடந்து விட்டது. இது பிஎஸ் என் எல், இது பிரஸ்டீஜ் பல்லடியம் என்று சொல்லிக் கொண்டே வந்தான் . எல்லாமே நான் பார்ப்பதற்குள் காணாமற் போயிருந்தன. உயரமான கட்டிடங்கள் அவை என்பது மட்டும் பிடிபட்டது.

ஒரு வழியாக ஓர் இடத்தில் வண்டி நின்றது. நடைமேடையின் மீது நான் இறங்கிய பின் வண்டியை ஏற்றி நிறுத்தினான் வேலு. உணவகம் வித்தியாசமாகவே இருந்தது. நுழைந்த உடன் இடது கைப்பக்கம் பெரிய தோசைக்கல் மட்டுமே ஒரு மூலையில் இருந்தது. அதைச் சுற்றி எவர்சில்வர் மேஜைகள் அதில் உணவை அட்டைப் பெட்டிகளில் அடைத்துக் கொண்டே இருந்தார்கள். ஓர் அடைப்பின் பின் பக்கம் அவை இருக்க முன்பக்கத்தில் கண்ணாடிக் கூண்டுக்குள் வரிசையாக எவர்சில்வர் அடுக்குகளுக்குள் சட்டினி, சாம்பார், பலவகை சாதங்கள், தயிர் வடை, சாம்பார் வடை எல்லாமே காட்சிக்கு இருந்தன.

அந்த அடைப்பு ஒரு பெரிய கூடத்தின் பாதிப்பகுதி. மீதிப்பகுதியில் ஒரு சிறிய நடை போக நான்கு அடி உயரத்துக்கு எவர்சில்வரில் செய்யப்பட்ட வட்டவடிவ மேஜைகள் நின்றன. அதில் ஒருவர் நின்றபடியே சாப்பிடலாம். நான் அப்படி ஒரு மேஜை அருகில்தான் இருந்தேன்.

பரோட்டாவின் மாவை நான் வழக்கமாக எப்போதுமே சிறு வளையங்களைப் போல வரிசையாக வைத்து விடுவேன். பிறகு கும்பலைப் பொருத்து அதைச் சுழற்றிச் சுழற்றிப் பிறகு மெதுவாக சப்பாத்திக் கட்டையில் சமன் படுத்தி கல்லில் இட்டு எடுப்பேன். இங்கேயோ ஏற்கனவே சமைக்கப்பட்ட பரோட்டாவை வெறுமனே கல்லின் மீது சூடு செய்வது மட்டுமே இவர்கள் வேலை.

“சாப் ..இட்டிலி சாப்டு,” வேலு வீட்டு வேலைக்காரப் பையன்.  இரண்டு இட்டிலி வடை இருந்த தட்டை நின்றபடி சாப்பிடும் மேஜை மீது வைத்தான். கை கழுவுமிடம் ஒரு நீண்ட நடையின் முடிவில் இருந்தது. அதன் இடப்புறம் பரிசகர்கள் பரிமாறும் மேஜைகள் நிறைந்த கூடம். விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

நான் சாப்பாட்டு மேஜையை நெருங்கியபோது வேலு அங்கே இருந்தான். “இந்தப் பையன் எப்படி இங்கே?” என்ற‌ என் கேள்விக்கு, “அவன் வேலை பாக்குறதே இங்கினதான். தங்கறதுதான் என் ரூம்ல,” என பதிலளித்தான்.

“வாடக குடுப்பானா?”

“வாடகயெல்லாம் தரமாட்டான். இவுங்க தர்ற ஆறாயிரத்துல ஐயாயிரத்தை வீட்டுக்கு அனுப்பிடுவான். மிச்சம் ஆயிரம்தான். சாப்பாடு இங்கயே கெடைச்சிரும்.”

“உனக்கும் வீட்டு வேலைக்கு ஆளாச்சு.”

“அவன் கிடைச்சதக்கு இங்கே வேல பாக்கற தமிழ் பசங்கதான் காரணம்,”

அப்போதுதான் கவனித்தேன். தென்பட்ட இருபது பேரில் தமிழ் ஜாடை இருந்தவர்கள் மூன்று நான்கு பேர்தான்.

“இந்தத் தமிழ்ப் பசங்களோடதான் இவன் இருந்தான்.” தொடர்ந்தான் வேலு, “ராத்திரில‌ அவனுங்க தொல்ல தாங்காம என் கிட்டே அடைக்கலமானான்.”

“குடிச்சிட்டு கலாட்டாப் பண்ணுனானுங்களா?”

“அதில்ல. நாலு பேருல ஒருத்தன் நடுராத்திரி இவன் தனியா இருக்கும் போது தொந்தரவு செஞ்சதுல‌ இவன் அலறி அடிச்சிக்கிட்டு எங்கிட்ட ஓடி வந்திட்டான்.”

அவனுடைய கைபேசி ஒலிக்கவே நகர்ந்தான். வேலைக்காரப் பையனையும் காணவில்லை. திடீரெனத் தனியானேன். கிரீமஸ் ரோடில் ஒரு சுற்று சென்று வந்தேன். வேலு காட்டிய உயரமான கட்டிங்களில் இருந்து மதியம் ஒரு மணி சுமாருக்கு பலவித ஆடைகளில் ஆண்களும் பெண்களும் ஆங்கிலத்தில் கைபேசியில் வெளுத்துக் கட்டியபடி வந்தார்கள். சிலர் கைபேசியை கவனித்தபடியே மெதுவாக நடந்து உணவகம் வந்தார்கள். பெண்கள் ஆண்கள் தோளில் கூச்சமில்லாமல் கைபோட்டபடி வந்தது போதாதென்றால் ஒரு பெண் புகை பிடித்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி.

மதிய உணவுக்கும் வேலுவின் உணவகத்தில் சென்று நிற்க எனக்கு விருப்பமில்லை. சந்து ஒன்றில் கால் பிளேட் பிரியாணி 50 ரூபாய்க்குக் கிடைத்தது. இரண்டரை மணிவரை அந்த உணவகத்துக்கு நிறையவே கூட்டம். வசதியானவர்கள் நிறைய.

வேலு திடீரென கைபேசியில் அழைத்தான். “மாமா… சாப்பிட்டீங்களா?”

“ம்,” என்று பொதுப்படையாக பதிலளித்தேன்.

“மாமா… இங்கே மானேஜர் இன்னிக்கி ஊர்ல இல்லே. நாளைக்கி உங்கள அவருக்கிட்டே கூட்டிட்டுப் போறேன். ஏழு மணி சுமாருக்கு இன்னிக்கி வீட்டுக்குப் போலாம். சினிமா எதாவது பாக்குறீங்களா?”

“சரிப்பா,” என்று பதிலளித்தேனே ஒழிய எனக்கு சினிமாவில் நேரம் போக்க விருப்பமில்லை. எம்ஜியார் சமாதிக்குப் போய் வெகுநாட்களாயிற்று. அப்படியே கடற்கரையையும் பார்க்கலாம்.

மெரினாவில் எப்படி எந்த நாளிலுமே கும்பல் கூடுகிறது என்பது ஆச்சரியமாக இருந்தது. மெரினாவில் சுற்றித்திரிந்து எம்ஜியார் சமாதியில் வணங்கி வெளியே வந்தபோது 27பி என்னும் பஸ் கண்ணில் பட்டது.

கோயம்பேடு போகிற பேருந்து அது. கொண்டு வந்திருந்த பயணப்பையில் மற்றுமொரு மாற்றுடை உண்டு. பணம் ஏதுமில்லை. இப்போது விழுப்புரம் போனால் வேலு அக்காவைப் பார்க்க வரும்போது அந்தப் பையைக் கொண்டு வரட்டுமே. ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்கியும் விட்டேன்.

“கோயம்பேடு வந்துடிச்சு.இறங்கு,” என்று ஒருவர் தோளில் தட்டி விட்டு இறங்கிய போதுதான் விழித்தேன்.

டீ குடிக்க வேண்டும் போலிருந்தது. கைக்கு டீ வரும் முன்பே செண்பகாவிடமிருந்து ஃபோன்.

“மாமா எங்கே இருக்கீங்க? வேலு ஃபோன் பண்ணினாமே? நீங்க எங்கன்னு தவிச்சிட்டான்”

“தூங்கிட்டேன்.”

“எங்க தூங்கினீங்க? நீங்க ரூம்ல இல்லியாமே?”

“கோயம்பேடு வர்றப்போ டவுன் பஸ்ஸுல தூங்கிட்டேன்.”

“எதுக்குக் கோயம்பேடு?”

“என்னடி கேள்வி? விழுப்புரத்துக்கு பஸ் ஏறத்தான்.”

“பாருங்க மாமா… விழுப்புரம் சின்ன ஊரு… நீங்க சண்டைக்காரன்னு பேச்சுப் பரவியிருக்கு. இங்க வந்து வீட்டில உக்காந்து என்ன பண்ணப் போறீங்க?”

“என்னடி நீ ஸ்கூல்ல ஆயா வேல செய்யுற திமிரா? மூட்டை தூக்குவேண்டி.”

“சும்மா பேசாதீங்க மாமா… அதுக்கெல்லாம் உங்களுக்குப் பழக்கமே கிடையாது. பலமும் இருக்காது. இன்னிக்கி ஒரு நாள் இருங்க வேலுவோட. நாளைக்கி அவனோட மானேஜருக்கிட்டே இட்டுக்கிட்டுப் போவான்.”

“நா இன்னிக்கி வரக்கூடாதா?” என்னையும் அறியாமல் குரலை உயர்த்திக் கத்தினேன்.

“பசங்க கிட்டே நீங்க அங்கே வேலை பாக்கப் போறீங்க. வர்ற வாரம் எங்களுக்கெல்லாம் மெட்ராஸ் சுத்திக் காட்டுவீங்கன்னு சொல்லிட்டன்.”

“……………………….”

“கொஞ்ச நேரத்தில வேலுவை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டாண்ட வரச்சொல்லுறேன், மாமா. வாசல்ல‌ நில்லுங்க” அவள் போனை வைத்து விட்டாள்.

வேலு திரும்பப் போகும் வழியிலேயே உணவு வாங்கிக் கொடுத்தான். வீட்டை அடைய மணி பதினொன்றாகி விட்டது. கட்டிலில் அமர்ந்த உடன் ‘கீச் கீச் என்னும் சத்தம் கேட்டு பதறி அடுத்து எழுந்தேன். “கண்ஷ்யாம்,” வேலு அடித்தொண்டையில் கத்தினான்.

பதிலே இல்லை. “நவருங்க மாமா,” என்று கட்டிலுக்குக் கீழே குனிந்த வேலு ஒரு எலிப்பொறியை எடுத்தான்.உள்ளே ஓர் அணில்.  வேலு அதை அறை வாயிலில் வைத்தான்.

சற்று நேரத்தில் கையில் கொசுவத்தி டப்பாவுடன் அந்த வேலைக்காரன் தென்பட்டான்.

வேலு எலிப்பொறியைக் காட்டி, “சூஹாஜால்,” என்றான்.

“அச்சா,” என்று குனிந்து பார்த்த அவன் முகம் பிரகாசமானது. அதை எடுத்துக் கொண்டு படிகளில் இறங்கினான்.

சிறுகுறிப்பு

சத்யானந்தன்

பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சதங்கை, கணையாழி, நவீனவிருட்சம், சங்கு, உயிர்மை, மணிமுத்தாறு, சங்கு, புதியகோடாங்கி, இலக்கியச் சிறகு, கனவு, தீராநதி உள்ளிட்ட சிறு பத்திரிகைகளிலும், திண்ணை, சொல்வனம் உள்ளிட்ட இணையத்தளங்களிலும் தீவிரமாகத் தனது படைப்புகளைப் பிரசுரித்துள்ளார் கவிஞர், எழுத்தாளர் சத்யானந்தன் (முரளிதரன் பார்த்தசாரதி). இவரது சமீபத்திய கவிதைகள், கட்டுரைகள் பெரும்பாலும் திண்ணை இணைய இதழில் பிரசுரங்கண்டன. நவீன புனைகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகளை வித்தியாசமாகப் படைப்பவர். வாசிப்பையும் எழுத்தையும் இருகரைகளாகக் கொண்டு ஆரவாரம் இல்லாத மிக அமைதியான ஆறாக தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இவர் சமகால எழுத்துக்களை அலுக்காமல், சளைக்காமல், அமைதியாகத்தன் போக்கில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி, விமர்சித்து, கவனப்படுத்தி வருகிறார். 

sathyanandhan.mail@gmail.com
sathyanandhan.tamil@gmail.com

 

 

 

 

About Writer P.Muralidharan

Sathyanandhan is a thinker and writer in Tamil for more than a decade. His works have been published in literary magazines like Knaiyazhi. In the web his recent works are in Thinnai.com. His distinction is his ability to creatively write in all genre i.e. Short story, poem, article, novel, criticism and articles on a variety of subjects. He is popular for his works on Ramayanam and Zen published in Thinnai during 2011.
This entry was posted in சிறுகதை and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s