கட்டுரையின் துவக்கத்திலேயே ஒரு எச்சரிக்கை. இளம் பெண்கள் ஆண் நண்பரையோ, மாப்பிள்ளையையோ இணைய தளத்தின் சமூக வலைத்தள பின்னணியை வைத்து முடிவு செய்ய வேண்டாம். அவரது பின்னணி வலைத் தளத்தில், குறிப்பாக முகநூல் போன்றவற்றில் கட்டமைக்கப் பட்டதாக இருக்கலாம். தீர விசாரிக்காமல் யாரையும் நம்ப வேண்டாம். பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம். மாப்பிள்ளை பட்டியல் தரும் திருமண வலைத் தளங்களுக்கும் இது பொருந்தும்.
‘கணவன் , குடும்பம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம்’ இப்படி ஒரு தேடலை ஒரு இளம் பெண் இணையவெளியில் போட , பாவம் என் இணையதளத்தில் ‘தனிக் குடும்பமா அல்லது கூட்டுக குடுமபமா?’ என்னும் பதிவுக்கு அவரைக் கொண்டுவந்து விட்டு விட்டது. அந்தப் பதிவுக்கான இணைப்பு —- இது.
பொதுவாக எனக்கு மக்கள் என்ன தேடி என் இணைய தளத்துக்கு வந்தார்கள் என்பதை அறியும் ஆர்வம் உண்டு. வித்தியாசமான இது போன்ற தேடல்கள் அபூர்வமே.
சரி இப்போது இது என் உள்ளே வெகு நாளாய் இருக்கும் ஒரு கேள்வியை உசுப்பி விட்டது. இளைஞர்கள் (வாசிப்பும் இல்லாமல், குடும்பங்களைக் கூர்ந்து அவதானிக்கவும் செய்யாமல்) எப்படி வாழ்க்கை பற்றிய புரிதலை அடைகிறார்கள் ?
இதற்கான பதில் சற்று வருத்தம் தருவதே. சினிமா மற்றும் சமூக வலைத் தளங்கள் வாயிலாகவே அதில் கொட்டிக் கிடப்பவற்றைக் கொண்டே இளைஞர் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயல்கின்றனர். இது போதாதென்றால் தொலைக்காட்சியில் எல்லோரும் உளறிக் கொட்டும் நிகழ்ச்சிகள் இருக்கவே செய்கின்றன.
ஒரு இளம் பெண் , தமது வருங்காலக் கணவன் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றி முதலில் தமது குடும்பத்தில் இருக்கிற முன்மாதிரிகளைத் துவங்கு புள்ளியாகக் கொண்டே தமது புரிதலை மேலெடுத்துச் செல்ல வேண்டும்.
ஆணாதிக்கமும், குடும்பத்தின், ஜாதியின், மதத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் இவை தவிர்த்து அநேகமாகப் பெண்ணுக்கு என எதுவுமே இருக்காது. நகை, புடவை, வசதிகள், அந்தஸ்து இவையே என் முன்னுரிமை என்னும் பெண் இந்த ஆணாதிக்கம் – சடங்குகளுடன் ஐக்கியமாகி கிணற்றுக்குள் கிழக்கு மேற்கு வேண்டாம் என்று கிணற்றுத் தவளையாய் , தேடலில்லாத கோடானுகோடி பெண்களுள் ஒருவராய் வாழலாம். இப்போதைக்கு அது மட்டுமே கைவசம் இருக்கிறது. இரவு பத்துமணிக்கு அநேகமாக உணவகம் எதுவுமே இருக்காது. யாராவது திறந்து வைத்திருந்தாலும் ‘ஊத்தப்பம் மட்டும் தான் சார் இருக்கு ‘ என்பார். அதே தான் குடும்பத்திலும். பாரம்பரிமான அடிமைத்தனமும் , பணம் மற்றும் உலக வசதி விவகாரங்களும் ஆன பெண் என்றால் பிரச்சனையே இல்லை. படித்து, வேலைக்கும் போகும் பெண்கள் பலரும் இந்த வட்டத்துக்குள் அடங்குவர்.
‘நான் சுதந்திர சிந்தனை உள்ளவள். எனக்கு சிந்திக்கவும் சுயமாய் முடிவெடுக்கவும் உரிமை வேண்டும். எனக்கு எனது பணி , தொழில் இவை குடுமபத்துக்கு இணையாக முக்கியமானவை. நான் பெண் சுதந்திரமுள்ள மாறுபட்ட சமுதாயத்தை, புதியதோர் உலகத்தைக் கனாக் காண்கிறேன் ‘ என்றெல்லாம் ஒரு இளம் பெண் கனவுகளை சுமக்கிறார் என்றால் அவர் கண்டிப்பாக தமது கணவனைத் தானே தேடித் கொள்வதே நல்லது. செக்கு மாடுகள் போன்ற தாய் தந்தையால் முதலில் பெண் உரிமை மற்றும் சுதந்திரம் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க இயலாது. மற்றும் அவர்கள் இந்தத் தேடலில் வெற்றி அடையவே முடியாது.
மறுபக்கம் ‘திருமணம் செய்து கொள்ள வேண்டாம்’ என ஒரு இளம் பெண் முடிவெடுத்தால் அதை அவர் கண்டிப்பாக நிலை நாட்டலாம். ஆனால் ஒரு தகப்பனாக இரண்டு விஷயங்கள் கண்டிப்பாக அவரிடம் நாம் சொல்ல விழைவேன் . தாய்மை ஒப்பற்ற பெரும் பேறு . அடுத்தது இந்தியச் சூழலில் ஒரு பெண் தனியாக வாழ , பெரிய போராட்டமும் சமூகத் தொல்லையும் மிகுந்த வாழ்க்கையை எதிர்கொள்ளத் தயாராய் இருக்க வேண்டும்.
முதலில் பெண்கள் வாசிக்க வேண்டும். கதை நூல்கள் அல்லது கட்டுரை நூல்கள் இவற்றுள் பெண் எழுத்தாளர்கள் , குறிப்பாக இந்தத் தலைமுறை பெண் எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை வாசிக்க வேண்டும்.
தோழிகள், உறவு முறைப் பெண்கள், அக்கம்பக்கப் பெண்கள், அம்மா, ஆசிரியை இவர்களிடம் மனம் விட்டுப் பேசலாம் தவறில்லை. ஆனால் இவர்களுள் சுதந்திர உணர்வு உள்ள பெண்களிடம் மட்டுமே பேச வேண்டும். இல்லையேல் ஆட்டு மந்தைக்குள் ஐக்கியமாக அதுவே வழி வகுக்கும்.
திருமணம் எந்த எந்த சவால்களை உள்ளே வைத்திருக்கிறது என்பதை ஒரு பெண் மருத்துவர் மற்றும் பெண்வழக்கறிஞர் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஜாதிக்கு உள்ளேயோ வெளியேயோ, அப்பா அம்மா பார்த்ததோ, தானே பார்த்துக் கொண்டதோ எந்த மாப்பிளை என்றாலும் அவர் பற்றி எந்தெந்த வழிகளில் முடியுமோ விசாரித்துக் கொள்ள வேண்டும். அவரிடமும் அவரது பெற்றோர் – சுற்றம் என்னும் முக்கிய ஆட்களிடமும் மனம் விட்டுப் பேச வேண்டும். இதை பெண் செய்யக் கூடாது எனப் பேசும் வரன்கள் மற்றும் அவரது உறவினரை முதலிலேயே நிராகரிக்க வேண்டும். தனது வாழ்க்கைக்கு ஆணோ பெண்ணோ , மணமாகப்போகும் இளைஞர் கண்டிப்பாகத் தானே பொறுப்பேற்க வேண்டும். முதலில் தெளிவு, தேர்வு செய்யும் முனைப்பு, பிறகு விவாதித்துத் தன் புகுந்த வீடு பற்றிய முழு அறிவுடன் மட்டுமே ஒரு இளம் பெண் முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும். பின்னர் வருந்திப் பயனில்லை.
(image courtesy:entouraaj.com)