வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுடன் தமிழ் ஹிந்து சமஸ் நேர்காணல்
ஜெயமோகன் இணைய தளத்தில் இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் எதிர்த்தும் சில பதிவுகளைக் கண்டேன். எனக்குள் ஒரு புதிய சாளரம் திறந்தது. என்ன அது? இயற்கை வேளாண்மை மட்டுமே ஒரே பாதை, அது மட்டுமே நல்லது பிற எல்லாமே கேட்டது என்னும் ஒரு பொத்தாம் பொதுவான புரிதல் எனக்குள் இருந்தது. அது மெதுவாக அசையத் துவங்கியது. சிலர் பெரியவர் நம்மாழ்வார் மீது வசைகள் வீசியதாகவும் அறிந்தேன் .
எனவே பலருக்கும் வேளாண்மை (என்னைப் போலவே ) பொருள் விளங்கா உருண்டையாகவே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
தமிழ்ச் சூழலின் சிந்தனை மிகவும் எளிதானது. வசதியானது. வாகானது. ‘நல்லவர்- கெட்டவர்’ , ‘100% நல்லது- 100% நஞ்சு ‘ என்னும் இரு துருவங்களில் ஒன்றாகவே எந்த ஒரு ஆளுமையும் , தொழில் நுட்பமும் இருக்கும். ஓன்று நாம் கொண்டாடுவோம். இல்லை துரத்துரத்தி விரட்டியடிப்போம்.
இதே வேலையை நாம் இயற்கை வேளாண்மையில் செய்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் பொருத்தமாக சமஸ் , சுவாமிநாதன் வழியாக நமக்கு சில விஷயங்களைத் தெரியப்படுத்தியதற்கு நாம் பற்றிக் கடன் பட்டவர்கள். சுவாமிநாதனின் பேட்டிக்கான இணைப்பு இது .
பெரிய அளவில் விவசாயம் பலன் தருவதற்கு நமக்கு கண்டிப்பாக நவீன விவசாய யுக்திகள் தேவைப்படுகின்றன என்பதை சுவாமிநாதனுடைய நேர்காணலில் தெரிந்து கொள்கிறோம். ஆனால் ஒவ்வொரு விவசாயியும் பேராசை இல்லாமல், மக்களின் ஆராக்கியத்தையும் கவனத்திற் கொண்டு , அளவாக மட்டுமே உரம், பூச்சிக்கொல்லி இட்டு விவசாயம் செய்ய வேண்டும். செயற்கை உரம் தேவையே. மரபணு மாற்றிய எல்லாப் பயிர்களும் கெடுதியானவை அல்ல. இவற்றையும் நாம் நிபுணரான சுவாமிநாதனின் நேர்காணல் வாயிலாகத் தெரிந்து கொள்கிறோம்.
சுவாமிநாதன் பொருளாதார நிபுணர் அல்லர். ஆனாலும் விவசாயிக்கு அவரது முதலீட்டைக் கணக்கில் வைத்து 15% சேர்த்து விலை நிர்ணயம் செய்யப் படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். முதலீட்டைப் போல ஒன்றை மடங்கு அவர்களுக்குப் போய்ச சேர வேண்டும் என்று வாதிடுகிறார்.
விவசாயிகளின் பிரச்சனை இரண்டு விதமானது. ஓன்று விளைச்சலுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்.. இரண்டாவது குடும்பத்தின் பெரிய செலவுகளுக்கு ஒரு கடன் தரும் நிறுவனம் வேண்டும்.
இந்த இரண்டுமே இங்கே இல்லை. ஒரு தனி நபர் இதை பங்களாதேஷில் தீர்த்தார். அவர் பெயர் முகம்மது யூனுஸ். அவர் பற்றிய எனது பதிவுக்கான இணைப்பு —-இது.
அவருடைய ‘கிராமீன் பேங்க் ‘ வங்கியின் சிறப்புத் திட்டம் ஓன்று இருந்தது. கொடுத்த கட்டனைத் அடைப்போருக்கு மீண்டும் கடன் என்னும் திட்டம். இன்று அரசியல்வாதிகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதை ஒரு கோஷமாக்கி அவர்களை எப்போதும் கையேந்துவோராய் ஆக்கும் வழியே காட்டுகிறார்கள். பஞ்சம் உள்ள காலம் மட்டும் தள்ளுபடி. பிற நாட்களில் நல்ல விலை விளைச்சலுக்கு மற்றும் குறைந்த வட்டியில் கடன், திருப்பி கட்டுவோருக்கு மட்டுமே மீண்டும் கடன் என்னும் திட்டங்களைக் கொண்டு வந்தால் விவசாயி தலை நிமிர்வார்.
நல்ல நேர்காணலுக்காக சமசுக்கு நன்றி.
(image courtesy: tamil.thehindu.com)