அரசுத்துவம் என்னும் கொடிய மதம் – சமஸ் கட்டுரைக்கு என் எதிர்வினை
முதலில் சமஸ் கட்டுரையை வாசிப்போம். அதற்கான இணைப்பு ———————- இது.
சமஸ் கட்டுரையில் அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்துக்கள் இவை :
1. அரசுத்துவம் (புது வார்த்தையா ?) என்பது அரசு மக்களின் உணர்வுகளை அல்லது உரிமைகளைப் புறந்தள்ளி அரசே யாவும் என அதிகாரத்தின் அழுத்தம் மட்டுமே இயங்கும். எந்த எதிர்ப்போ அல்லது மாற்றுக் கருத்தோ நிராகரிக்கப்பட்டு அதன் குரல்வளை நெரிக்கப் படும்.
2. அரசுத்துவம் கை ஓங்கும் காலகட்டங்களில் ஆட்டு மந்தைகளாக மக்கள் அரசின் முடிவுகள் ஏற்பார்கள்.
3. மோடியின் காலத்தை அரசுத்துவத்தின் கோரத் தாண்டவமான காலமாகக் காணும் சமஸ் அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட காலம் , சீனப் போரின் காலகட்டம், இந்திராவின் நெருக்கடி நிலை இவற்றை முந்தைய அரசுத்துவ அபாயத்தை நாம் அனுபவித்தோம் என அவர் எடுத்துக் காட்டுகிறார்.
என் எதிர்வினை இது :
அரசுத்துவத்தின் சாராம்சம் என்ன சமஸ் ? ‘ என்னை விட்டால் வேறு வழியில்லை. இப்போது நான் செய்யும் இதை விட்டால் வேறு வழியில்லை. உங்களுக்குள் ஒத்த கருத்தோ அல்லது உங்களது பிரச்சனைகள் பற்றிய அறிவோ இல்லை. தீர்வுகளை முன்வைக்கும் யாருமே உங்களின் ஒரே குரலாக இல்லை. எனவே வாயை மூடிக் கொண்டு , பிரச்சனை செய்யாமல் அரசு ஒன்றே கதி என வாழுங்கள்.
இதற்கு இன்று 2017ல் நம்மிடம் பதில் உண்டா? மக்களுக்குத் தம்மை யார் பின்னிழுக்கிறார்கள் என்னும் விழிப்புணர்வு உண்டா ? மதம், ஜாதி, சுயநல வெறி தாண்டி எத்தனை பேர் வந்திருக்கிறோம்? வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் முன்வைக்கும் எத்தனை தீர்வுகள் விவாதத்துக்கு உள்ளாகின? எது கவனம் பெற்றது ? ‘ இது மக்களும் அரசும் வேறுபடும் புள்ளி என நம்மால் பெரிய பிரச்சனைகளில் ஏன் எதையும் சுட்டிக் கட்ட முடியவில்லை ?
மறுபக்கம் ‘நான் அரசாண்டால் உனக்கு இதைப் பிச்சை போடுவேன். அதைச் செய்து தருவேன். நீ வரியே கட்ட வேண்டாம். நான் மந்திரத்தில் மாங்காக் வரவழைப்பேன். எனக்கு இன்று கை தட்டு. நாளைக்கு ஒட்டுப் போடு ‘ என்னும் அரசியல்வாதியின் பிரச்சாரத்தின் சாராம்சம் மட்டும் வேறென்ன ? அரசுத்துவம் தானே ? ஒரே வேறுபாடு சிம்மாசனத்தை ஆக்கிரமிக்கும் அதிகாரத்தின் பின்னணி மட்டுமே மாறும் . இல்லையா ?
சரி ஏன் தான் இப்படி இருக்கிறோம் ? ஏன் ஆட்டுமந்தைகளாகவே இருக்கிறோம் ?
எளிய பதில். நாம் மன்னர்களையே தேடுகிறோம். ஜனநாயக முறையின் விழிப்புள்ள மக்களாக ஆக விரும்பவில்லை. நாட்டின் வளர்ச்சி, ஸ்திரத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் பிரச்சனைத் தீர்வுகளுக்கு நாம் பொறுப்பேற்க விரும்பவில்லை. நாம் தனி நபர் வழிபாட்டில் வெறியாயிருக்கிறோம். ஒரு ஆளுமை அதன் பின் அவரின் வாரிசு என்னும் பக்தியில் மெய் மறக்கிறோம்.
விவாதங்களைத் தவிர்க்கிறோம். அரசியல்வாதிகளின் ஜாலங்கள் நம் குறுகிய ஜாதி, மத, ஊழல் பிடிமானங்களுக்கு வருடலாய் அமைய நாம் முதுகெலுக்கும்போடு , திசை தெரிந்த முனைப்போடு குரலெழுப்பும் தார்மீக பலமற்றுப் போனோம்.
இடதுசாரிகள் குரல் தேய்ந்து, வர்க்கம் என்னும் அடையாளம் ஈடுபடாமல் , திசையே தெரியாமல் இந்தியா திணற இதுவே காரணம். இன்று கம்யூனிஸ்ட்டுகள் மக்களுக்கு அவர்களின் மாநிலத்தின் தனித்தன்மைக்கு ஏற்ற தீர்வுகள் இவை என தமது தரப்பை முன்வைக்க வேண்டிய கால கட்டம். தொழிலாளி என்பவர் முதலில் தமது துறை, ஊர் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சியைப் பற்றித் தெளிவும் அது தனது பொறுப்பே என்னும் பிடிப்பும் உள்ளவராக நிமிர வேண்டும். அரசியல் ஜாலங்கள் மற்றும் குறுகிய காலக் கண்ணோட்டம், தனது கோட்பாட்டுக்குள் வராதோர் தேவையில்லை என்னும் முரட்டுப் பிடிவாதம் இவற்றை விட்டுவிட்டால் இடதுசாரிகள் தமது வழிகாட்டுதலுக்காக வரலாற்றில் இடம் பெறுவார்கள்.
அது நிகழாவிட்டால், இந்திரா – பிறகு மோடி என்னும் வரிசையில் இன்னொருவர் கண்டிப்பாக வருவார்.
(image courtesy:globalresearch.ca)