விநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை
இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை ஒன்றே ஓன்று மட்டுமே உண்டு. எந்த ஒரு பண்டிகை என்றாலும், அன்று வெற்றிலை முதல் பூ பழங்கள் இவற்றின் வணிகம் பல லட்சங்களை நடை பாதையிலேயே தாண்டுவது. எனவே இந்தக் கடைகள் முளைப்பதில் ஆதிக்கம் ஏற்கனவே அந்தப் பகுதியில் ஜாதி அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் வணிகரிடம் மட்டுமே என்பதை நினைவில் கொள்வோம். காவல்துறை மற்றும் கட்சி ஆட்களின் நல்லாசி இல்லாமல் நடைபாதைக் கடை என்று ஓன்று கிடையாது.
இதில் தமது இடத்தை உறுதி செய்ய நரிக்குறவர் எந்த அளவு போராடினார்கள் எப்படி வெற்றி கண்டார்கள் என்பது ஆச்சரியமான இன்ப அதிர்ச்சி. நேற்று திருவான்மியூர் கிழக்கு மாட வீதியில் நரிக்குறவர் கடை எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
ஒடுக்கப் பட்டவர்கள், வறியோர், விளிம்பு நிலை மக்கள் இவர்கள் தமது இடம் இது என்னும் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்பது மட்டுமே தீர்வு. போட்டிகளில் வெல்லும் தன்னம்பிக்கையும் வலிமையையும் மட்டுமே நீண்ட காலத்தில், ஒரு சமூகம் தலைமிர்ந்து நிற்பதற்கு வழி. இந்த வழியை அரசியல்வாதிகள் காட்ட மாட்டார்கள் அவர்கள் ‘என்னால் மட்டுமே உனக்கு விமோசனம்’ என்னும் மூளைச் சலவையில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள். சமூக நீதி நிமிர்ந்து நிற்கும் ஒடுக்கப்பட்டோரால் மட்டுமே உறுதியாகிறது. நிறையவே ஒடுக்கப் பட்ட , பிற்படுத்தப் பட்ட மக்கள் நிமிரட்டும்.