கவுரி லங்கேஷ் கொலை – கருத்துச் சுதந்திரத்தின் மீது மீண்டும் ஒரு கோரத் தாக்குதல்
மூட நம்பிக்கை, மதவாதம் இவற்றைத் தொடர்ந்து விமரிசித்து வந்தோரில் கர்நாடக மாநிலத்தின் முக்கியமான பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் கொலை செயப்பட்டார். தமது பணிக்காக, சமூக விழிப்புணர்வுக்காக உயிரையே நீத்த அவருக்கு என் அஞ்சலி.
தொடரும் கொலைகள் , கருத்துக் சுதந்திரமும் மத நல்லிணக்கமும் கூடாது என்னும் செய்தியுடன் அலையும் ஒரு வெறி மிகுந்த கூட்டத்தின் அச்சுறுத்தல்கள். சிந்திக்கும் சமூகம் இதைக் கண்டிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான கருத்து பதிவாவதே அவர்களை எதிர் கொள்வதாகும். இது பற்றிய எனது முந்தைய பதிவு கீழே :
இரண்டு கொலைகள்- ஒரே கேள்வி
எம்.எம்.கல்புர்கர் என்னும் மூத்த கன்னட எழுத்தாளர் தமது ஜாதி எதிர்ப்பு மற்றும் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி விவாதித்தல் என்னும் முற்போக்கான பணிகளுக்காக சகிக்க முடியாத வெறியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2013ல் நரேந்திர டபோல்கர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை சகிக்கமுடியாத வெறியர்களால் கொல்லப் பட்டார். அப்போதும் நான் கண்டனக் கட்டுரை எழுதினேன். இப்போதும் மனம் நொந்து இதை எழுதுகிறேன்.
கருத்துச் சுதந்திரம், வெளிப்படையான விவாதம், நடுநிலையாய் சிந்தித்து உண்மையை உணர்தல், மாற்றுக்கருத்துக்கு ஜனநாயகத்தில் இடம் உண்டு என்று தெளிதல் இவை நம் நாட்டுக்கு அன்னியமானவை. தனது உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் தன் நிலையை வெளிப்படுத்திய இவர்களின் அச்சமின்மை, நேர்மை, சமூகம் மீதான அக்கறை இவை வணக்கத்துக்குரியவை.
கொலைகளின் மூலம் ஒரே செய்திதான் தரப்படுகிறது. சமுதாயம் மாற விரும்புவோருக்கு இங்கு இடமில்லை.
ஒரே கேள்வி தான் விடையில்லாமல் நீள்கிறது “கருத்துச் சுதந்திரம் என்று இந்தியாவில் அவதரிக்கும்?”
image courtesy:youtube.com