(ஆணின்) விருப்ப ஒய்வு தற்கொலையா?
(இந்தக் கட்டுரைத் தொடர் ஒப்பிட்டு ஒப்பிட்டு ஒரு ஆணைத் துரத்தும் நடுத்தர வர்க்கத்துக் குரூரத்தில் நொந்து போன எல்லா ஆண்களுக்கும் சமர்ப்பணம்)
நான் ‘ப்ளு வேல் கேம் ‘ விளையாடுகிறேன் என்றால் கூட என் சக ஊழியர்கள் கொஞ்சமும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நான் மூன்று வருடம் முன்பாகவே வேலையை விட்டு விடுகிறேன் என்றதும் ஆளுக்கு ஆள் துக்கம் விசாரிக்கத் துவங்கி விட்டார்கள்.
இட மாறுதல் எனக்கோ என் குடும்பத்துக்கோ புதிதே அல்ல. இந்தமுறை சூழ்நிலை வேறு. அதான். ஆனால் அதிர்ச்சி அலைகள் என் உடன் பணிபுரிவோரிடம் எக்குத்தப்பாக வெளிப்பட்டது. டெல்லியில் உயிருக்குப் போராடி, ரயில் பயணமாகச் சென்னை வந்து முயன்று மாதம் படுத்த படுக்கையாக இருந்த போது பல ஆண்டுகள் பழகிய யாரும் ஒரு வார்த்தை விசாரிக்கவில்லை. டெல்லி விவகாரங்களை வம்பளக்க என்னை அழைத்தவர்கள் கூட இருக்கிறாயா செத்தாயா என்று கேட்கவில்லை.
நான் அனாவசியமாக யாரிடமும் பேசுவதில்லை. எனவே என்னை அழைப்பவர்கள் குறைவு. ஆனால் கடந்த சில நாட்களாக ஏகப்பட்ட விசாரிப்புகள்.
இங்கிதம் என்பதற்கும் படித்த ஆட்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும் என் குடும்பப் பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் மானாவாரியாக அறிவுரைகள். எந்த இங்கித வரையறையுமே இல்லாத உரையாடல்கள்.
தன்னை எதிராளியுடனும், வேறு வேறு இருவரையும் ஒப்பிடாமல் ஒரு நாள் கூடக் கழியாது நடுத்தர வர்க்கத்துக்கு. விழாக்களில், கூடுதல்களில், எப்போதும் பொருளாதார மற்றும் அந்தஸ்து, குடும்ப விவாகாரங்கள் இவை யாவற்றிலும் ஒப்பிடுதல் மற்றும் முடிந்த அளவு காயப்படுத்துதல்.
குரங்கு குல்லாயைப் போட்டுக் கொண்டது போல, ஒரே போல இருக்க வேண்டும் என்பது என்ன கட்டாயம்? இது ஒரு சாராசரி குணம் தானே என்று தோன்றலாம். ஆனால் இதன் நகங்கள் மிகவும் குரூரமானவை.
ஒரு தனிமனிதனின் அந்தரங்கம் முதலில் பறிபோகிறது.
அடுத்தபடியாக அலுவலகத்தில் ஒருவர் இறந்து போனால் நம்முடன் இருந்தவரோ இருப்பவரோ ஒரு அஞ்சலிக்கூட்டம் கூட அரிதாகி வருவது ஒரு பக்கம். மறுபக்கம் தனது குடும்பத்துத் திருமணமோ அல்லது தனது பதவி உயர்வோ ஏதோ அந்த வளாகத்தில் உள்ள எல்லோருமே ஒரே குடும்பம் போலக் கொண்டாட்டம். இப்படி எந்தவிதமான நெஞ்சார்ந்த பிணைப்பும் இல்லாமல், ஜாதி மற்றும் பதவி, மற்றும் வருமான அந்தஸ்துக்களுக்கு உட்பட்டு நட்புக்கு கொண்டாடும் இவர்கள் ஒருவனது குடும்ப வாழ்க்கையையே மறைமுகமாக பாதிக்கிறார்கள். அவனது குடும்பம் தத்தளித்தாலோ, இவர்களை விட இம்மி வித்தியாசமாயிருந்தாலோ வம்பாலும் அறிவுரையாலும் அவனை நோக அடிப்பார்கள்.
‘உறவை விட உடன் பணி புரிபவன் முன் நான் கேவலமாவேன்’ என்றே தனது பெண்ணை, மகனை, படிப்பு மற்றும் திருமண விஷயமாக அடக்கிப் போட்டு அவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்கும் பெற்றோர் பெரும்பான்மையினர். தனது மக்களை தற்கொலையில் பறி கொடுத்த பெற்றோர் பலர்.
இதில் ஒரு பெண் விருப்ப ஒய்வு பெற்றால் அதை வேறு விதமாகவும் ஒரு ஆண் ஒய்வு என்றால் ஏதோ தற்கொலை செய்து கொள்வது போலவும் ஏன் பரபரக்கிறார்கள் என்பது எனக்கு குரூரத்தின் மூலத்தையே கண்டது போல இருக்கிறது. அப்படி என்ன கண்டேன்? அடுத்த பகுதியில் ….