(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி -6
மனமுதிர்ச்சி இல்லாத ஒருவர் தம் வயது அல்லது தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா என்னும் உறவு முறையால் மட்டும் ஒரு குழந்தைக்கோ அல்லது குடும்பத் தலைவனுக்கோ எந்த வழிகாட்டுதல் அல்லது பரிந்துரை அல்லது அறிவுரை கூறவே முடியாது.
எந்த ஒரு தனி நபருக்கும் தனது பிரச்சனை என்னவென்று தானே விளங்கிக் கொள்ள நிறையவே கால அவகாசம் பிடிக்கும். அவர் மற்றொருவருடன் பகிரும் போது அந்த இரண்டாவது நபர் எவ்வளவு விவரமானவரோ இல்லையோ பேசும் முதல் நபருக்குத் தன்னைத் தானே சற்று விளங்கிக் கொள்ளும் சிறிய கதவு ஒன்று திறக்கும்.
ஆனால் குடும்பத்துக்குள் ஒருவர் மனம் விட்டுப் பேசவோ அல்லது தன் பிரச்சனையைக் கூறி ஆறுதலோ வழியோ காணவோ வாய்ப்பே இருப்பதில்லை.
அதிக பதட்டம் மற்றும் கவலை மட்டுமே உறவிடமிருந்து வெளிப்படுகிறது. அதுவும் பகிர்பவர் குழந்தை அல்லது இளைஞர் என்றால் கேட்கவே வேண்டாம். மிரட்டல், அடி, வசவு அல்லது அவ நம்பிக்கையான பேச்சு இவைகளே வெளிப்படும்.
இதனால் தான் மனமுதிர்ச்சி அவசியம் என்று சென்ற பகுதியில் நான் குறிப்பிட்டேன். எனவே நாம் மனமுதிர்ச்சி அல்லாத ஒன்றையே எதிர்வினையாகத் தருகிறோம் என்னுமளவு நாம் நினைவில் கொள்ளலாம்.
ஒரு குடும்ப உறுப்பினர் இன்னொரு உறுப்பினர் மீது இயல்பாகக் காட்டும் பாசம் மிகைப் படுத்தப் படுகிறது என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். இந்த மிகையினால் நாம் மேடை நாடகத்தில் பாத்திரம் ஏற்றது போல வசனமும் எதிர்வினையும் செய்யும்
பரிதாபமானவர் ஆகி விடுகிறோம்.
உணர்ச்சிவசப் படுவதும், பீதி அல்லது ஐயத்தை வெளிப்படுத்தி, நாம் நேசிப்பவர் இன்னும் நிலைகுலைந்து போகும் படி செய்து விருகிறோம்.
மன முதிர்ச்சி என்பது நாம் எந்த இடத்தில் அனேகமாக பலவீனமானவர் என்பதைத் தானே உணர்ந்து இருப்பதும், உலகில் உள்ள எல்லா நல்லது தீயதும் நம்மை பாதிக்கவே செய்யும் என்னும் புரிதல் இருப்பதும் ஆகும்
இந்த மன முதிர்ச்சி எந்தக் கடையிலும் கிடைக்காது. அது ஒரு நாளில் நடந்து முடியும் மலினமான ஒன்றல்ல.
நமக்கு சமுதாயம் மாற வேண்டுமென்ற கனவு ஒன்று இருக்க வேண்டும். அது எந்தத் துறையில் மாற வேண்டுமோ அதைப் பற்றிய தொடர்ச்சியான வாசிப்பு இருக்க வேண்டும். அந்த வாசிப்பு இயல்பாகவே அந்தத் துறை பற்றிய எல்லா தரப்புக் கருத்துக்களுடன் நமக்கு உண்மை நிலவரம் பற்றிய மிகவும் அணுக்கமான ஒரு புரிதலைக் கொடுக்கும். அந்தப் புரிதலும் நமக்கு முடிவெடுக்கப் போதுமானதாக இருக்காது. ஆனால் நாட்டு நடப்பு இது தான், ஒரு துறையின் சவால்கள் இதுதான் எனத் தெளிவு பெறும் போது நாம் பதட்டம் அடைவதுமில்லை; உறவு முறை அல்லது நமது அறியாமையின் அடிப்படையில் நமது புரிதல் சரிவராது என்பதால் நாம் நிபுணரை அணுகுவோம்.
குடும்பத்தில் ஒருவருக்கு நோய் என்றால் மருத்துவரை நாம் நாடுகிறோம். அதுவே கல்வி பற்றிய தொழில் பற்றிய ஒன்று என்றால் நாம் அந்தத் துறை நிபுணரை உடனே நினைவில் கொண்டு வருவது இல்லை.
பணம் எவ்வளவு சம்பாதிக்கலாம்? இதற்கு அளவு உண்டா? இல்லை. அதே போல் தான் மனமுதிர்ச்சி நாம் பக்குவமாய் அக்கறையாய் வாசித்து மேம்படுத்திக் கொள்ளுமளவு மிகவும் அதிகமாகப் பரிணமிக்கக் கூடியது. வாழ்க்கையின் சவால்கள், மனித உறவுகளின் , மனங்களின் முரண்கள் பற்றி வணிகமல்லாத புனைகதைகள் வழியும் நாம் தெரிந்து கொள்கிறோம். போதனையாய் இல்லாத அந்த இலக்கியம் வழி நாம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள முயலும் ஒரு தேடலுடையவராக மாறுகிறோம்.
இதெல்லாம் எதற்கு? நாமே நாம் நேசிப்பவருக்கு ஊறு செய்யாமலிருக்க…. மேலும் அடுத்த பகுதியில்
(image courtesy: allegany.edu)