(ஆணின்) விருப்ப ஓய்வு தற்கொலையா? -பகுதி 8
பணியில் மனநிறைவு என்பது புழக்கத்தில் இல்லை; ஒரு இலக்காக இல்லை; வெறுமனே அகராதியில் மட்டுமே இருக்கிறது.
முதலில் மாத சம்பளப் பணிகள் பல இயந்திரத்தனமானவை. அவற்றை ஒரு ‘ரோபோ’ எனப்படும் இயந்திர மனிதன் செய்வதே பொருத்தமானது. புதுமைகள் அல்லது பரிட்சார்த்தமான முயற்சிகள் இவை கடுமையாக சாடப்பட்டு அடக்கி ஒடுக்கப் படுவார் ஊக்கமுள்ளவர். இலக்குகள் தரப்படும்; அவற்றுக்கான அணுகுமுறைகள் சர்வாதிகாரமாக முன் முடிவு செய்யப்பட்டுத் திணிக்கப் படும். இதனால் பணியாளர் தம் மூளையை மற்றும் புதிய கற்பனையை என்றுமே பயன்படுத்த அனுமதிக்கப் படாத மன அழுத்தத்துக்கு ஆளாவார்.
பணியில் மனநிறைவு என்பது என்ன ஒருவர் எதிர்பார்க்கக் கூடாத ஒன்றா? இந்தியாவின் பெரும்பான்மை எந்தத் தொழில்? கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம். விவசாயமே அது. அவர்கள் அனைவருமே பணியில் மன நிறைவு காண்பவர்கள். தமது பணியில் அர்ப்பணிப்பு உள்ளவர்கள். அதையே உயிராய் நினைப்பவர்கள். அந்த ஒரே காரணத்தால் தான் மூன்று நான்கு வருடம் சாகுபடி செய்ய முடியவில்லை என்றால் உயிரையே விட்டு விடுகிறார்கள். கடன் சுமை தவிரவும் அவர்கள் பெற்று வந்த அந்த நிறைவு அது தந்த ஊக்கம் பறிபோனதே காரணம். அவர்கள் பற்றி நான் வேறு சில பகுதிகளில் பதிவு செய்து விட்டதால் மறுபடி பணியில் மன நிறைவு பற்றிப் பேசுவோம்.
கலைஞர்களை எடுத்துக் கொள்ளுங்கள். 90% பேர் அதனால் வருமானம் அதிகம் இல்லாதவரே. ஆனாலும் அதையே முழு நேரமாகவோ – அல்லது, வயிற்றுப் பிழைப்புக்கு ஒன்று தன் காதலான கலை இது என இரண்டையும் செய்பவர்கள் அவர்கள். தோட்டக்காரர்கள், சமையற்காரர்கள் என அதிகக் கலைத் தன்மை இல்லாத பணிகள் செய்வோரில் துணி தைப்போர், சிகை அலங்காரம் செய்வோர் என சிறு தொழில் செய்வோர் எத்தனையோ பேர் மன நிறைவு அடைகிறார்கள். அது அவர்களை மேலும் மேலும் தமது பணியில் சிறப்பாகச் செயற்பட ஊக்குவிக்கிறது.
ஆனால் மாத சம்பளம் வாங்குவோருக்கு, அந்த ஊதியத்தைத் தவிர தரப்பட்டுள்ள வேலை, தான் நடத்தப்படும் முறை இவற்றின் மீது நிறையவே மனக்குறை உண்டு. அதனால் அவர்களது தூக்கம், தன்னம்பிக்கை, சுய மதிப்பீடு இவை யாவுமே காயப் பட்டு விடுகின்றன.
இன்றைய பணியிடச் சூழல் பற்றிய சரியான உதாரணம் – தெருவில் வண்டி ஓட்டிக் கொண்டு போகும் போது தான் தாறுமாறாக ஓட்டிய பின் நம்மைத் தகாத வார்த்தைகளால் திட்டும் ஆட்களைப் பார்கிறோமில்லையா? அதே போன்ற ஆட்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் நம் மேலதிகாரியாக இருந்தால் அந்த அருவருப்பான, கசப்பான, சித்திரவதையை அனுபவிக்கும் கொடுமையான அனுபவம் இரு மடங்கு மும்மடங்காகி விடுகிறது.
பெண்களுக்கும் இது நடக்கிறது. ஆனால் அவர்கள் புகார்கள் கொஞ்சமாவது எடுபடும். ஆண்கள் பாடு மிகவும் மோசம். மறுபக்கம் குடும்பத்தில் ஒரு பெண் வேலையை விடுவது அவரது பிறப்புரிமை. ஆனால் ஆணுக்குத் தற்காலிகமாக அதை விடுவதும் சாத்தியமே இல்லை.
பணியில் மன நிறைவு என்பதையும் வேலை பற்றிய நம் அளவீடுகளில் ஒன்றாக நாம் கொள்ள வேண்டும். நாம் அதனாலேயே இளைஞர்களை சரியான , தமக்குப் பிடித்தமான தடத்தில் பணி மற்றும் தொழில் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும். நடுவயது கடந்தவர் தம் வேலை அல்லது தொழிலை மாற்ற முயன்றால் தடை செய்யாமல் அவருக்கு ஊக்கம் தர வேண்டும்.
ஆனால் குடும்பங்கள் ஒரு மிகப் பெரிய பிரமையைப் பிடித்துக் கொண்டு அலைகின்றன. பணம் மட்டுமே அளவு கோல் என்னும் பிரமையே அது. பணம் கண்டிப்பாகத் தேவை. ஆனால் எதைப் பறி கொடுத்து வேண்டுமானாலும் அதை ஈட்டுமளவு அது மதிப்புள்ளதல்ல. நமக்கு மன நிறைவை, நிம்மதியைத் தரும் ஆற்றல் உள்ளதும் அல்ல.
பணத்தை முறையான வழியில் – அதே சமயம் மன நிறைவுடன் பணி அல்லது தொழில் செய்து ஈட்டும் வகையில் கண்டிப்பாக நாம் சம்பாதிக்க முடியும்.
வாழ்க்கையின் ஒரே லட்சியம் பணம் ஈட்டுவதாக என்றுமே இருக்க முடியாது. உண்மையில் ஒரு லட்சியமாக அது இருக்கும் தகுதியை அது என்றுமே அடைய முடியாது.
வாழ்க்கையின் லட்சியம் என்ன?
அடுத்த பகுதியில்
(image courtesy:wikispaces.psu.edu)