(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா? – பகுதி 10
ஒரு ஆணுக்கு- ஒரு பக்கம் மிகவும் வலிமையானவன் மறுபக்கம் ஒரு சுமை தாங்கி – என்னும் பிம்பமே நம் மனங்களில் காலங்காலமாக ஆழமாகப் பதிந்துள்ளது. ஜல்லிக் கட்டு மீது நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு சரியான உதாரணமாக இருக்கும். எந்த மாதிரி வலிமை அல்லது எந்த மாதிரி வீரத்தை நாம் முன் வைக்கிறோம் என்றால் அது மிகவும் நீர்க்கடிக்கப்பட்ட மேலோட்டமான ஒரு வலிமை அல்லது வீரம். மேலோட்டமான ஒன்று மிகைப்படுத்தப் பட்டது. இந்த மிகையால் ஆண்களுக்கு, தான் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றித் தெளிவு இல்லை.
மன வலிமை பற்றியோ அல்லது சவால்களை சந்திக்கும் வீரம் பற்றி யாருமே நமக்கு அறிமுகம் செய்யவில்லை. மாட்டை அடக்கியவன் நம் முன்னுதாரணம் – மனதில் உள்ள பலவீனத்தை வென்றவன் அல்ல. உண்மையில் மிகவும் மனவலிமை உள்ளவர்கள் பெண்களே. அவர்களது உணர்வு பூர்வமான பலம் மற்றும் மனத் திண்மை ஆண் முயன்று அடைய வேண்டியது. அது பெண்களிடம் இயல்பாகவே இருப்பது. பெண்கள் சந்திக்கும் சவால்கள் ஆன சமூகத்தில் அவர்களுக்கான இடம் மற்றும் அவர்களது முன்னுரிமைகள் பற்றிய பிரமைகள் மிகவும் ஆழ்ந்து அவர்களை பாதிக்கின்றன. அவற்றில் இருந்து அவர்கள் வெளியே வர விடாமல் அவர்கள் கவனம் உலகம் கொண்டாடுபவற்றில் பிணைக்கப்பட்டு வீணாய்ப் போவதே அவர்களின் பலவீனம்.
ஆண் தனக்கு ஆர்வமுள்ள துறையில் ஒற்றைக் கவனமாய் அர்ப்பணிப்பாய் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கும் இயல்பு உள்ளவன். குழந்தைகள் விளையாட்டில் காட்டும் கலப்படமற்ற முழுமையான மகிழ்ச்சி அவனுக்கு அதில் உண்டு. இந்த இயல்பு வெளிப்படும் அளவு அவன் வெற்றி அடைகிறான். சந்தோஷமாயிருக்கிறான். அவனை ஒரு கூண்டுக்குள் நீ வளைய வளைய வந்தால் ஜீவனம் ஓடும் என்று கட்டிப் போடும் வேலையைச் செய்யாமலிருந்தாலே போதும்.
ஒன்றை இந்தத் தொடரில் ஏற்கனவே நான் குறிப்பிட்டேன். ஜீவனத்துக்கு நம் கண்ணில் படும் நான்கைந்து வழிகளே நம் இலக்காக இருப்பது எளிய தீர்வு. ஆனால் நாம் எத்தனை வசதிகளைப் பயன்படுத்துகிறோம். எத்தனை சேவைகளால் வாழ்க்கைத் தரம் உயரக் காண்கிறோம். இந்த வாழ்க்கைத் தரம் உருவாக்கும் தேவைகள் பல வேலை வாய்ப்புக்களை உருவாக்குகின்றன. அதில் தன் ஆர்வமுள்ள துறையை அவன் தேர்ந்தெடுக்கவும் அதில் மிளிரவும் வேண்டும். ஆணுக்கு மகிழ்ச்சியாயிருக்கும் உரிமை உண்டு.
புத்தக வாசிப்பு பற்றி எழுதும் போது ஜெயமோகன் வாசிப்பு தொடர்ந்து செய்யப்படும் போது, அது கதை கட்டுரை மட்டுமல்ல எந்த ஒன்றையும் கிரகிக்கும் ஆற்றலை உள்ளுக்குள் வளர்த்து விடுகிறது என்று குறிப்பிட்டார். அது முக்கியமானது. ஒரு துறையில் ஒரு ஆண் தனது திறமையை நிரூபிக்கும் போது பல திறன்களின் ஆற்றல்களின் கதவுகள் அவனுக்குள் திறக்கின்றன. காலப் போக்கில் தனது துறைக்கு இணையாய்த் தன்னால் இயலும் மற்றொரு துறையிலும் அவன் கால் பதித்து வெற்றி காண வல்லவன்.
அரசியல்வாதிகளால் அல்லது ஊடகங்களால் முன்னே வைக்கப்படும் பரபரப்பு மட்டுமே நம் வாசிப்பையும் கவனத்தையும் பெருகின்றன. நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகம் இயங்கக் காரணமான பல பணிகள் மற்றும் அதன் சவால்கள் பற்றி வாசித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். மனம் விரிவடைய வாசிப்பு மட்டுமே ஒரே வழி. குறுக்கு வழி வேறு எதுவுமே இல்லை.
ஆணை மையப் படுத்திய உலகம் காலகாலமாக ஆட்டு மந்தைகள் உருவாக்கியது. அதனால் இப்போது மூச்சு முட்டுபவன் இப்போது பிறந்த ஆண். உண்மையில் எல்லாக் காலத்திலும் பெண்கள் மனதில் விரியும் வண்ணமயமான வாழ்க்கை பற்றிய கனவுகளே உலகை ஆட்டுவிப்பவை. ஆணின் உலகம் வண்ணமில்லாதது. அனேகமாகத் தட்டையானது.
வாழ்க்கையின் நிச்சயமின்மை, அதன் சவால்கள் மட்டுமே வாழ்வதை ரசனைக்குரிய ஒன்றாக, நம்மை உயிர்ப்புடன் மற்றும் ஒரு விளையாட்டு வீரனின் உற்சாகத் துள்ளலுடன் வாழ வைக்கின்றன. பாதுகாப்பான தண்டவாள வாழ்க்கை என்று ஒன்று இல்லவே இல்லை. அதன் போலியான ஒரு மாதிரியை வைத்துக்கொண்டு, ஆணை நாம் குரங்காட்டி போல ஆட்டி வைக்க முற்படுகிறோம்.
வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர் தம்
உள்ளத்தனைய துயர்வு
என்னும் குறளுடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். தொடர்ந்து வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.
(image courtesy:news18.com)