வாசகர் சாலை – நம்பிக்கை தரும் இளைஞர்களின் வாசிப்பும் விவாதமும்
வாழ்க்கையில் சந்தோஷப்பட என்ன வேண்டும் ? முதலில் சந்தோஷப்படும் நல்ல மனம் வேண்டும் (அது எனக்கு இருப்பதை நானே சொல்லிக் கொள்ள கூடாது. அவ்வளவு அடக்கம்). இன்னொன்று சந்தோஷப்படும் படி எதாவது நடக்க வேண்டும் ஐயா. அப்படி ஒன்று தான் இந்த வாசகர் சாலை சந்திப்பு.
ஒரு பக்கம் இந்தியா – நியுசீலாந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, மறுபக்கம் ஆர்சனல் , லிவர்பூல் போன்ற அணிகள் ஆடும் பிரிட்டிஷ் பிரிமீயர் லீகின் வாரக்கடைசி விறு விறு கால் பந்துப் போட்டிகள், குடும்பத்தோடு சினிமா அல்லது ஓட்டல் அல்லது இரண்டும் – இந்தத் தலை போகும் கொண்டாட்டங்களை விட்டு விட்டு, நாற்பதற்கும் மேற்பட்ட , முப்பது சராசரி வயதுள்ள இளைஞர்கள் வாசித்து, வாசித்ததைப் பற்றி விவாதித்து என் மனதை மிகவும் சந்தோஷப்படுத்தி விட்டார்கள். அதனுடன் இலவச இணைப்பான சந்தோஷம் இந்த மாதிரி ஒரு உருப்படியான கூட்டத்துக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் தந்தது.
இன்று நகைச்சுவைக் கதைகள் என்னும் தலைப்பில் இந்த மூன்று கதைகள் பற்றி வாசித்து விட்டு, உள்வாங்கித் தமது புரிதலை மற்றும் விமர்சனத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்:
ஆர்னிகா நாசரின் கதாநாயகன் தேர்வு
யுகபாரதியின் காமுஷியாவும் கருணாகரனும்
அ. முத்துலிங்கத்தின் எலுமிச்சை
இணையத்தில் படிக்க இணைப்பு இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் அவர்கள் வாசிக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். பேச அனுமதியும் வரவேற்பும் தரும் கருத்துச் சுதந்திரம் மிக்க அமைப்பு. கார்த்திகேயன் மற்றும் சில இளைஞர்கள் அருமையான இந்தப் பணியை ஒரு வருடமாகச் செய்து வருகிறார்கள்.
நான் நவீன, பின் நவீன, தீவிர எழுத்தும் வாசிக்கப் படவேண்டும் என்று ஆரம்பித்துப் பேசினேன். இது நான் செல்லும் முதல் கூட்டம். கார்த்திகேயன் தீவிர இலக்கியம் மற்றும் வணிக இலக்கியம் என்னும் பேதமில்லாமல் ஏற்கனவே
வாசிப்பதையும், கதைத் தேர்வு வெளிப்படைத்தன்மையுள்ள முறையே அங்கு பின்பற்றப்படுவதையும் பணிவுடன் எடுத்துக் கூறினார். பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
நிறைவில் ஞாயிறு மேடை என்னும் பகுதியில் இளம் பெண் இயக்குனர் ஜெனி (ரஞ்சித்தின் உதவி இயக்குனர்) ஒரு பெண் திரைப்படத் துறையில் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றிப் பேசினார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் மேலும் இரு நிகழ்ச்சிகளை அறிவித்தார் கார்த்தி. திரைப்படத் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறையில் பணி புரிவோர் பெரும்பான்மை.
தமிழை இந்தத் தலைமுறை வாசிக்கச் சிரமப்படுகிறது. அதை ஆங்கில எழுத்துக்களில் எழுதலாம் என்று ஜெயமோகன் எழுதிய போது நான் மறுப்புத் தெரிவித்தேன்.
என் நம்பிக்கை வீண் போகவில்லை.