தடம் இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’
தடம் அக்டோபர் 2017 இதழில் போகன் சங்கரின் சிறுகதை ‘க்ளிஷே’ வெளியாகி இருக்கிறது.
சிறுகதையின் உருவமும் உள்ளடக்கமும் புதுமைப்பித்தனால் நவீனத்துவத்தின் நுட்பத்தை வாசகருக்கு உணர்த்தத் தொடங்கின. யதார்த்தமா நவீனத்துவமா என்பதை அனேகமாகக் கதையின் கரு தானே முடிவு செய்து விடுகிறது. நுட்பமான ஒன்று , வாசகனின் தொடர் சிந்தனைக்கும், விடை தேடலுக்குமான ஒன்று நவீனம், யதார்ஹ்தம் இரண்டிலுமே தொக்கி நிற்க முடியும். அந்தத் தொக்கி நிற்றல் கதை சொல்லி மறைந்து, விரியும் கதைக் களத்தில் வாசகனும் படைப்பாளியும் சிறு புள்ளிகளாக மறைய வாழ்க்கை நீள்கிறது.
படைப்பாளிக்கு சிறுகதையின் வீச்சைப் பற்றிய புரிதல் உள்ள அளவு வாசிப்பு அனுபவம் வாசகனுக்கு நிகழ்கிறது.
கணவனால் கை விடப்பட்ட ஒரு நடுவயது கடந்த பெண் மேரிக்குக் கல்லூரிப் படிக்கும் மகன் உண்டு தன்னிலும் மிகவும் இளைய ஒரு இளைஞனுடன் நெருக்கமாகவும் , உண்மையான அன்பு மிக்க நட்பாகவும் இருக்கிறாள். அவனின் தாயும் அவளும் தோழிகள். அவனது அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். மேரி வாசிப்பும் சிந்தனையும் உள்ளவள். அவனைத் தவிர மற்றொரு ஆணும் நண்பராயிருக்கிறார். அவர் கல்வியாளர் மற்றும் வாசிப்புப் பின்னணி உள்ளவர். கதை மொத்தமும் மேரிக்கும் இந்த இளைஞனுக்கு இடையே நடக்கும் உரையாடல்கள் அல்லது உரையாடல்களின் பகுதிகளால் ஆனது.
இந்தக் கதையில் என்னைக் கவர்ந்தது ‘க்ளிஷே’ (cliche) என்னும் சொல்லை மையப்படுத்தி இருப்பது. குடும்பம் என்னும் அமைப்பு நீர்த்துப் போனதை ‘க்ளிஷே’ என்னும் சொல் வரையற்ற பயன்பாட்டால் இரு சொல்லின் பொருள் நீர்த்துப் போவது மற்றும் திரிந்து போவதையே குறிக்கும். குடும்பம் என்னும் அமைப்புக்கும் அதன் சதுரத்துக்குள் அடைப்பட்ட உறவுகளுக்கும் அந்த நீர்த்துப் போதல் மற்றும் திரிந்து போதலான ‘க்ளிஷே’ நிகழ்ந்து விட்டது என்பதை மையப்படுத்துவதில் கதை வெற்றி கண்டிருக்கிறது. பாராட்டுகிறேன்.
இருந்தாலும் கதையின் முடிவில் ‘வேசி மற்றும் வேசி மகன்’ என்னும் பதப் பிரயோகம் தவிர்த்திருக்கப் பட வேண்டும். நவீனத்துவத்தின் பெரிய பலம் அது கேள்விக்குள்ளாக்குமே ஒழிய தேவைக்கேற்ப ஆசிரியரின் குரலாக ஏற்கனவே நிறுவப்பட்ட ஒன்றை அடு ஏற்காது. ஆசிரியரின் குரல் மெலியதாக ஒலித்தாலும் நவீனத்துவத்தின் சுருதி கூட்டலில் இருந்து பிறழும் ஒரு சுருதி பேதமே அது. இந்த சுருதி பேதம் போகனின் கவனத்தில் இருக்க வேண்டும். நல்ல படைப்பாற்றல் உள்ளவர்.
அடுத்தது ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன் இருவருக்கும் மிகவும் பிடித்த உரையாடல்களின் வழி கதை என்னும் பாணி மிகவும் படைப்பாளியை வசீகரிப்பது. ஆனால் அது வாசகனின் கற்பனை மிகுந்த வாசிப்புக்குத் தாளிட்டு விடும். வாசகனின் கற்பனை மற்றும் சிந்தனைக்கான வெளியில் அவனுடன் ஆசிரியர் ஒரு புள்ளியில் சந்தித்துப் பிரியும் நவீனத்துவத்தை அது நீர்க்கடிக்கும் ‘க்ளீஷே’
(image courtesy:http://thiruttusavi.blogspot.in/2015/05/blog-post_19.html)
Advertisements