தேவர்களின் தூதர்களின் கதை – றஷ்மியின் கவிதை
நவம்பர் 2017 காலச்சுவடு இதழில் றஷ்மியின் கவிதை ‘தேவரின் தூதர்களின் கதை’ என்னும் நவீனக் கவிதை வாசிக்கக் கிடைத்தது. முதலில் கவிதையை வாசியுங்கள்:
தேவரின் தூதர்களின் கதை
01.
மகா சமுத்திரங்களையும்
விரிகுடாக்களையும்
அவர்கள் கடந்து வந்தபோது
தனது கன்னிகளைக் காப்பான இடங்களில்
பதுக்கிக்கொண்டது கடல்
நிற மீன்களும் நீர்வாழிகளும்
புலம் வேறாய்ப் பெயர்ந்தன
தொடக்க வித்து ஊன்றப்பெற்று
உயிர்பெருக்கிய கடல் ஆழம்
தன்னை ஒரு மீனவனுக்குச் சொன்னது
பிறகு அவனது நாவு திரையிட்டுக்கொண்டது.
02.
காட்டு மருங்கே அவர்கள் முகாமிட்டபோது-
தன்னை இருளவைத்துக்கொண்டது காடு.
எல்லைகளின் செடிகள் முட்களின் கூர் ஏந்தின
காற்றைத் துளையவிட்டு சத்தங்களைத் திகிலவிட்ட வனம்
உயிரிகளை அடரினுள் அழைத்துக்கொண்டது
அவர்களைத்தொட்டும் தன்னை மூடிக்கொண்டது காடு
03.
எங்கள் மண்ணோ தன்னைக் கல்லென
இயல்பில் மாற்றிக்கொண்டது
பிறகு அது நீரை உறிஞ்சுவதில்லை
வேர்களை விடுவதில்லை
விதைகளை அனுமதிப்பதில்லை
அவர்களின் சிறுநீர் பாறைகளில் பெருகி ஓடிற்று
ஈ நெருங்காது காய்ந்தன கழிவுகள்.
04.
அவர்களின் நாற்றத்தைக் காற்று சுழற்றியெறிந்தது
அவர்களின் திசைகளைத் திணறவைத்தது
புழுதியை வாரியெறிந்தது
எச்சரித்து ஊளையிட்டது
அவர்களைத் திரும்பச் சொல்லிக் கேட்டது.
05.
அவர்கள் கேள்வியற்றிருந்தனர்
பார்வையற்று இருந்தனர்
பேசும் திறனற்று இருந்தனர்
இருட்டு அவர்களில் குடிகொண்டிருந்தது.
இருளில் இருக்க விதிக்கப்பட்டார்கள்
06.
தேவரின் தூதர்களுக்காக நாங்கள்
தெருவில் கூடினோம்
மாலை சூடினோம்
குரவை இட்டோம்
போசனங்களுக்கு அழைப்புவிடுத்தோம்…
இறுதியில் ஆயுதங்களைப் பாரம்கொடுத்தோம்.
07. (1)
பிறகு அவர்கள்-
எங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர்
சாவைக் கூட்டி வந்தனர்
போரை இட்டுவந்தனர்
பிணங்களைக் கொண்டுவந்தனர்
பிணங்களாய்த் திரும்பிவந்தனர்
அங்கிருந்த பெண்களைக் கொண்டுபோயினர்.
வாழ்வையும்
07. (2)
எண்ணிக்கையில் அரையாயும்
உருவத்தில் குறையாயும்
அவர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டபோது
எல்லாம் ஒரு கனவைப்போல இருந்தது.
சமாதானம் சொல்லி வந்தவர்கள்
சண்டையில் தோற்றுத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
08.
முறுக்கு மீசை
முடைநாற்றத்தோடு
பிறக்கவிருந்த சந்ததியை
வன்புணரப்பட்ட எங்கள் பெண்கள்
கலைத்துக்கொண்டார்கள்
09.
நாங்களோ எங்களது போரைத் தொடர்ந்தோம்…
மின்னஞ்சல்- amrashmy@gmail.com
நவீன கவிதையை நாம் உதிரி பாகங்களைக் கழற்றிப் பார்க்கிற மாதிரி அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றி வாசிக்கத் தேவையில்லை. கூடவும் கூடாது. அதே சமயம் முதல் வாசிப்பில் நம்மை நெருடிய வரிகளில் இருந்து மேற்ச் செல்ல வேண்டும். நவீன கவிதையின் மொழிதல் அல்லது சொல்லாடல் மழலையின் உதிர்ப்புகள் போல சம்பந்தா சம்பந்தம் இல்லாமலும் வெவ்வேறு பொருள் கொள்ளக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் வலியைப் புரியும் பாசம் அந்த மழலையின் மையக் கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். கவிதையின் மிக முக்கியமான பகுதி இரண்டு பத்திகள் என நான் கருதுகிறேன்:
06.
தேவரின் தூதர்களுக்காக நாங்கள்
தெருவில் கூடினோம்
மாலை சூடினோம்
குரவை இட்டோம்
போசனங்களுக்கு அழைப்புவிடுத்தோம்…
இறுதியில் ஆயுதங்களைப் பாரம்கொடுத்தோம்.
07. (1)
பிறகு அவர்கள்-
எங்கள் தெருக்களில் சண்டையை மூட்டிவிட்டனர்
சாவைக் கூட்டி வந்தனர்
போரை இட்டுவந்தனர்
பிணங்களைக் கொண்டுவந்தனர்
பிணங்களாய்த் திரும்பிவந்தனர்
முதலாவது பத்தியில் அவர் துலாபாரமாக ஆயுதங்களைக் கொடுத்து விட்டதாகக் கூறுகிறார். அதாவது தேவ தூதர்கள் காப்பார்கள் என நம்பி அவர்கள் ஆயுதங்களை விட்டு விட்டார்கள் காணிக்கையாக. ஆனால் போரால் மிகவும் பாதிக்கப்பட்டது பெண்களே. குலவை இட்டோம் என்னும் இடத்தில் பெண்கள் தேவ தூதர்களை எதிர் நோக்கினார்கள் எனக் காண்கிறோம். மனித இனத்துக்கு அல்லது எந்த ஒரு சமூகத்துக்கும் நிகழக் கூடிய மிகப் பெரிய விபரீதம் சண்டை மூட்டி விடுவோரின் சதிக்கு பலியாவதே அல்லது சமூகத்தின் முன்னுரிமையில் ஒரே புள்ளியில் இணையாமற் போவதே.
போர்கள் பற்றிய கவிதைகளுள், பெண்கள் நிராயுதபாணிகளாயிருக்கக் கூடாது என்னும் பொருள் படும் கவிதைகளுள் இந்தக் கவிதை இடம் பெறும். நுட்ப்மான கவிதை. றஷ்மிக்கு வாழ்த்துகள்.