சுப்ரமணிய பாரதியாரின் வெளிவராத படைப்பு- கோயில் யானை
தன்னை யானை தாக்கி உயிருக்குப் போராடிய படி படுக்கையில் இருந்த போது கூட பாரதியார் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியப் பட வைக்கும் தன்மை. அவரது திறமை மிகவும் உச்ச கட்டத்தில் வெளிப்படும் படைப்பு இல்லை இது. அவரது வாழ்க்கைக் குறிப்பில் இருந்து அவர் மருந்து உண்ண மறுத்து மன அழுத்தத்துடனேயே மரணமுற்றார் என்பதைக் காண்கிறோம். எனவே அவரது எழுத்தின் குறிப்பாக கற்பனை மற்றும் கலையின் மீது மன அழுத்தத்தின் சாயல் படிந்திருப்பது தெரிகிறது. “கோயில் யானை” ஒரு சிறிய நாடகம். பாரதியார் அதை, தம்மை யானை தாக்கிய சம்பவத்தை ஒட்டி எழுதியிருக்கிறார்.
மிகவும் குறைந்த கதாபாத்திரங்களே இந்த நாடகத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். ஒரு மன்னர், அவரின் ஆஸ்தான கோயில் பூசாரி, அவரின் மகனான இளவரசன் 1, அவனது நண்பனான அண்டை நாட்டு இளவரசன் 2, ஒரு வைசியரின் மகள். வைசியரின் மகள் – இளவரசன் 1 காதல் வயப் படுகின்றனர். அதைத் தடுக்க மன்னன் திட்டமிடும் போது, கடல் அலைகள் தம் உத்தரவை ஏற்குமா என்று ஒரு மன்னன் முயன்ற கதையை விளக்கிக் கூறுகிறான் பூசாரி. அதனால் மனித் குலத்தை ஆட்டிப் படைக்கும் அடிப்படை உணர்வான காதலை எதிர்த்து எதுவும் செய்ய வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறான். இளவரசரன் 1ஐ கோயில் யானை தூக்கி வீசி விடுகிறது. அப்போது அவன் காதலி மனமுடைந்து அழுது மயக்கம் அடைந்து விழுகிறாள். இளவரசன் 2 இதைக் கண்டு அவளது காதல் உண்மையானது என்று அறிந்து கொள்கிறான். தனது தங்கையை இளவரசன் 1க்கு மணம் முடிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்துகிறேன் என்று தைரியம் கூறுகிறான். அடுத்ததே முடிவுக் காட்சிதான். அதில் மன்னர் இவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக அறிவிக்கிறார்.
கண்டிப்பாக பாரதியாரின் கற்பனை வளத்துக்கும் சொல்லாற்றலுக்கும் அவர் இதை விட மிகவும் நேர்த்தியான கலைப் படைப்பாக இதை எழுதியிருக்கக் கூடியவரே. ஆனால் உடல் நலக் குறைவும் மன அழுத்தமும் கண்டிப்பாக அவரைப் பாதித்திருக்கின்றன. அந்த நிலையிலும் மரணப் படுக்கையில் அவர் இதை எழுதிய சாதனை அவர் இலக்கியத்தின் மீது காட்டிய அர்ப்பணிப்புக்கு அத்தாட்சி. ஜனவரி 1951 கலைமகள் இதழில் வெளியான இந்த நாடகம் பாரதியாரின் படைப்புத் தொகுப்புகள் நூல் வடிவம் பெற்ற போது இது வரை வெளிவரவில்லை. இதை வெளியிட்ட காலச்சுவடின் முயற்சி பாராட்டுக்குரியது.