வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை
வாங்க வம்பளப்போம் – குழி தோண்டும் உரிமை
நம் நாட்டில் இரண்டு உரிமைகள் கண்டிப்பாக இருக்கின்றன. ஒன்று மற்றவர்களுக்குக் குழி தோண்டும் உரிமை. அடுத்தது ஊருக்கே குழி தோண்டும் உரிமை. தனியார் தொலைபேசி, இணைய சேவை என்ற எதோ ஒன்றுக்காக தெருக்களைப் பெரிய அளவில் தெரு ஓரத்தில் தோண்டுவது சர்வ சகஜம். கட்சிக்காரர்கள், கோயில் வைத்துத் தன் கைக்காசை செலவு செய்து மக்களுக்குத் தொண்டு செய்யும் தியாகிகள் இவர்கள் தோண்டுவது அனேகமாக நடுத்தெருவில் இருக்கும். ராஜா அண்ணாமலைபுரத்தில் தொடங்கி அடையார், பெசண்ட் நகர் வழியாகத் திருவான்மியூர் வரை சாலையின் ஓரத்தில் தோண்டிய குழி இரண்டு மாதத்துக்குப் பின் இப்போது அரை குறையாக மூடி வருகிறார்கள். தென் சென்னையில் உள்ள யாருக்கும் தெரியும் மந்தைவெளியில் தேவநாதன் தெரு என்று ஒரு நூறு மீட்டர் தூரத் தெரு ஒன்று இருக்கிறது. அதைக் கடந்த இருபது ஆண்டுகளில் வருடா வருடம் பெரிய அளவில் தோண்டி பாதாள சாக்கடைப் பழுது பார்த்தது அனேகமாக பதினைந்து முறைகள்.
வெவ்வேறு துறைகள் அல்லது தனியார் தோண்டுவதைக் கண்காணிக்கவோ, நெறிப்படுத்தவோ எந்த ஒரு ஏற்பாடும் இருப்பதாகவே தெரியவில்லை. ஏற்கனவே மோசமாக இருக்கும் போக்குவரத்து நெரிசல் இன்னும் மோசமாகிறது. ஒரு முறை வாடகைக்காரைப் பகிர்ந்து செல்லும் போது ஒரு இளம் பெண் கர்ப்பமானவர் ஏறினார். “மெதுவாப் போஙக அண்ணே” என ஓட்டுனரை வேண்டினார். ஓட்டுனரும் மெதுவாகத் தான் சென்றார். ஆனால் சாலை எங்கும் தோண்டி மூடிய, அரை குறையாக மூடிய அல்லது மூடவே படாத பள்ளங்கள்.
நமது சகிப்புத் தன்மையும் உரிமை துறக்கும் துறவு மனப்பான்மையும் நமக்கு நிரந்தரமாக நல்ல சாலைகள் இல்லாமல் செய்து விட்டன. நல்ல சாலையைப் பார்த்தால் அது தான் வம்பான விஷயமோ?
(image courtesy:thehindu.com)